மக்கா பள்ளி ஈரானியர்களால் கைப்பற்றப்பட்டதாக செய்தி

1979 நவம்பர் 20 ஆம் தேதி, மத அடிப்படையில் மட்டுமன்றி அரசியல் அடிப்படையிலும் அனைவராலும் ஊன்றிக் கவனிக்கப்பட்ட ஒரு நிகழ்வுக்கான தினம். ஜுஹைமான் அல் ஒத்தைபி, முகம்மது அப்துல்லா எனும் இருவரால் அவர்களால் அமைக்கப்பட்ட குழுவால் மக்காவின் கா அபா பள்ளிவாசல் முற்றுகையிடப்பட்டது. சவுதியில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டபிறகு வெளி நாடுகளிலிருந்து முஸ்லீமல்லாதவர்கள் இஸ்லாத்தின் புனித பூமியான சவுதியில் வந்திறங்குவதால் களங்கப்பட்டுப்போன புனிதத்தலத்தை சவுதி அரசிடமிருந்து மீட்கவேண்டும் எனும் அடிப்படையில் வஹ்ஹாபிய குழுவால் ரகசியமாக ஆயுதங்கள் எடுத்துச்செல்லப்பட்டு பள்ளிக்கு உள்ளிருந்து திடீரென பள்ளி தங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இது வெளியுலகிற்கு பரவாமல் இருக்க கடும் முயற்சிகளை அரசு எடுத்தபோதிலும் நியூயார்க் டைம்ஸ் நாளேடு மக்கா பள்ளி ஈரானியர்களால் கைப்பற்றப்பட்டதாக செய்தி வெளியிட்டது. அமெரிக்க அரசு (ஜிம்மி கார்ட்டர்) சவுதியின் பாதுகாப்புக்கு ஒரு போர்க்கப்பலை அனுப்பிவைத்தது. ஒரு வார காலத்திற்கும் அதிகமாக நடைபெற்ற இந்த முற்றுகைப் போருக்கு எதிராக சவுதி ராணுவம் கவச வாகனங்களுடன் போராடியது. முற்றுகையை முறியடிக்க முடியாமல் நாட்கள் நீளவே பிரான்ஸிடம் உதவி கோரப்பட்டது. அவர்கள் நவீன ஆயுதங்கள் குண்டுகளுடன், தாயிப் நகரில் சவுதி ராணுவத்திற்கு பயிற்சியளித்து, பின்னர் சுவர்களைத்துளையிட்டு நரம்புகளை செயலிழக்கச்செய்யும் குண்டுகளை வீசி ஒருவழியாக போர் முடிவுக்கு வந்தபோது முகம்மது அப்துல்லா போரில் இறந்து விட்டிருக்க ஜுஹைமானும் எஞ்சிய சிலரும் உயிருடன் பிடிக்கப்பட்டனர்.








முதலாம் உலகயுத்தத்தில் தோல்வி பிரித்தானியாவை நெருங்கிக்கொண்டிருந்த பொழுது, ஒரு அதிசம் நிகழ்ந்தது

1914ம் ஆண்டு முதலாவது உலகமகா யுத்தம் நடைபெற்றது அனைவருக்கும் தெரியும். இந்த உலக யுத்தத்தில் 33 நாடுகள் கலந்துகொண்டாலும் பிரதான யுத்தம் முக்கியமாக பிரித்தானியாவுக்கும் ஜேர்மனிக்கும் இடையிலேயே நடைபெற்றது.
சுமார் 4 வருடங்கள் நடைபெற்ற இந்த யுத்தத்தின் பொழுது பிரித்தானியா ஒரு பெரிய சங்கடத்தைச் சந்திக்க நேர்ந்தது. பிரித்தானியா சந்தித்த அந்த சங்கடமும், அந்தச் சங்கடத்தை சமாளிக்க ஒரு யூதன் செய்த உதவியும்தான், யூதர்கள் தமக்கென ஒரு தேசத்தை அமைத்துக்கொள்ளக் காரணமாக இருந்தது.
முதலாம் உலக யுத்தத்தின் ஆரம்பத்தில் மிகவும் வெற்றிகரமாக முன்னேறிய ஜேர்மணியப் படைகள் ஐரோப்பாவின் பல பகுதிகளையும் கைப்பற்றியிருந்தார்கள். குறிப்பாக ஐரோப்பாவின் கரையோரப் பிரதேசங்களை ஜேர்மனிப்படைகள் ஆக்கிரமிப்பதில் வெற்றி கண்டன.
இது பிரித்தானியாவிற்கு பெருத்த ஆயுதத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருந்தது.
எப்படியென்றால், அந்தக் காலத்தில் பீரங்கிகளை இயக்குவதற்குத் தேவையான அசிடோன் என்ற வெடிமருந்துக்கான மூலப்பொருட்களை ஐரோப்பாவில் காணப்படும் ஒருவகை மரங்களில் இருந்துதான் பிரித்தானியா பெற்றுவந்தது. ஜேர்மனியப் படைகள் ஐரோப்பாவின் பல பகுதிகளையும் கைப்பற்றியிருந்ததால், அசிடோன் வெடிமருந்தை தயாரிக்கமுடியாமல் பிரித்தானியா திண்டாடியது.
ஒரு சந்தர்பத்தில் பிரித்தானியா தனது பீரங்கிகளை இயக்குவதில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டது. பீரங்கித்தாக்குதல்களைத்; தவிர்த்து யுத்தம் புரியும் நிலைக்கு பிரித்தானியப்படைகள் தள்ளப்பட்டன.
முதலாம் உலகயுத்தத்தில் தோல்வி பிரித்தானியாவை நெருங்கிக்கொண்டிருந்த பொழுது, ஒரு அதிசம் நிகழ்ந்தது.



முதலாம் உலகமகா யுத்தத்தில் பிரித்தானியா வெற்றிபெறக் காரணமாக இருந்த யூதரின் பெயர் கலாநிதி கெய்ம் வைஸ்மன் (Dr. Chaime Wizmann).
1874ம் ஆண்டு போலந்து நாட்டில் பிறந்த இவர் ஜேர்மனி மற்றும் சுவிட்சலாந்தில் பல்கலைக்கழக படிப்பை முடித்துக்கொண்டு, இங்கிலாந்தில் உள்ள மன்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் இரசாயனவியல் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டு இருந்தார். இவருக்கு பிரித்தானியாவின் உயரதிகாரிகளோடு நல்ல தொடர்பிருந்தது. இவரை அணுகிய பிரித்தானிய உயரதிகாரிகள் அசிடோன் வெடி மருந்தை தயாரிக்க முடியுமா என்று வைஸ்மனைக் கேட்டார்கள்.
முடியும் என்று பதிலளித்த வைஸ்மன் தனக்கு ஒரு இரசாயன ஆய்வு கூடமும், தொழில்நுட்ப வசதிகளும், மூட்டை மூட்டையான சோளம் விதைகளும் தரும்படி நிபந்தனை விதித்தார்.
சோளம் விதைகளை மூலப்பொருளாகக்கொண்டு அசிடோன் என்ற வெடிமருந்தைத் தயாரித்து பிரித்தானியாவுக்குக் கொடுத்தார் வைஸ்மைன்.
அவர் தயாரித்துக் கொடுத்த வெடிமருந்துகளை பாவித்து பிரித்தானியப் படைகள் முதலாம் உலகயுத்தத்தை வெற்றிகொண்டன.
முதலாவது உலக யுத்தம் முடிவடைந்த உடனேயே பிரிட்டிஷ் அரசாங்கம் கலாநிதி வைஸ்மேன் அவர்களை அழைத்து தமக்கு அவர் செய்த பேருதவிக்கு பிரதியுபகாரம் செய்ய முன்வந்தது. ஆனால் வைஸ்மேன் தனக்கு வெகுமதிகள் அவசியமில்லை என்றும், உலகமெங்கும் சிதறடிக்கப்பட்டு, சீரழிந்து, நீண்டகாலமாக நிரந்தரத் தாயகம் இன்றித் தவிக்கும் யூதர்களுக்கு, யூதர்களின் பூர்வீகத் தாயகமான பலஸ்தீன நாட்டை (தற்போதைய இஸ்ரேல் தேசம்) பிரிட்டிஷ் அரசாங்கம் யூதர்களின் நிரந்தரக் குடியிருப்பாக வழங்கவேண்டும் என்பதே நான் விரும்பும் வெகுமதி என்று தெரிவித்தார்.
 (1517ம் ஆண்டுமுதல் 1917ம் ஆண்டுவரை சுமார் 400 வருடங்கள் துருக்கியின் ஒட்டோமான் பேரரசின் வசமிருந்த ஜெருசலேம் பகுதி, முதலாம் உலக யுத்தத்தின் பொழுது ஜெனரல் எட்முன்ட் அலன்பி (General Edmund Allenbyஎன்ற தளபதியின் தலைமையிலான பிரித்தானியப் படைகளால் கைப்பற்றப்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.)
கலாநிதி வைஸ்மன் அவர்களின் விருப்பத்தைக் கவனத்தில் எடுத்த பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளர் ஆர்தர் ஜேம்ஸ் பல்பர் (Arthur James Balfour)வைஸ்மனை நோக்கி „உங்கள் ஜெருசலேம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். பிரித்தானியாவுக்கு பாரிய நன்மையைச் செய்த உங்களுக்காக பிரித்தானியா அதனை நிச்சயம் செய்யும்“ என்று கூறினார்.
யூதர்களுக்கு ஒரு தாயகம் வேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்த பிரித்தானியா, 1917ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் திகதி, பலஸ்தீனாவில் யூத மக்களுக்கான தாயகம் அமைக்கப்படும் என்ற உறுதிப்பாட்டுடன் கூடிய பல்பர் பிரகடனத்தை (Balfour Declarationவெளியிட்டது.
இஸ்ரேலிய மக்களின் அகதிவாழ்கையை ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது, தாம் இடம்பெயர்ந்து வாழ்ந்த இடங்களில் நல்ல நிலையில் இருந்த அனைத்து யூதர்களுமே தமது இனத்தின் நலனுக்காக ஏதோ ஒருவகையில் பங்களிப்புச் செய்திருந்ததை காணக்கூடியதாக இருக்கின்றது. சில ஈழத் தமிழர்களைப் போல் அந்த இனக் குழுமத்தில் இருந்து அன்னியப்பட்டு வாழ்ந்த யூத முக்கியஸ்தர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்றுதான் கூறவேண்டும்.
இன்று எத்தனையோ ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் அதி உயர் ஸ்தானங்களில் இருக்கின்றார்கள். அரசியலில் தீர்மானம் எடுக்கும் இடங்களில் கூட அமர்ந்திருக்கின்றார்கள். ஆனால் தமது திறமையின் பலன்கள் அவர்கள் சார்ந்த மக்களின் விடுதலைக்கு வித்தாகவேண்டும் என்று அவர்கள் சிந்திப்பதும் இல்லை, செயற்படுவதும் இல்லை.