ஹரியானா சுற்றுலா

இந்தியாவில் வேகமாக வளர்ச்சியடைந்துவரும் மாநிலங்களில் ஒன்று ஹரியானா. இது கிழக்கில் உத்தரப்பிரதேசத்தையும், மேற்கில் பஞ்சாப்பையும், தெற்கில் ராஜஸ்தானையும், கிழக்கில் ஹிமாசலப்பிரதேசத்தையும் எல்லைகளாக கொண்டுள்ளது. நாட்டின் தலைநகரமான டெல்லிக்கு அருகாமையில் உள்ளதோடு டெல்லி மாநகரத்தின் மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு எல்லைகளை ஒட்டியதாகவும் ஹரியானா அமைந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு 1966ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இம்மாநிலம் உருவாக்கப்பட்டது.
ஹரியானா

ஹரியானா மாநில சுற்றுலா அம்சங்கள்
டெல்லியிலிருந்து சில நிமிட பயண தூரத்திலேயே உள்ள ஹரியானா மாநிலத்தில் ஓவியம் போன்ற இயற்கைக்காட்சிகள் மற்றும் தனித்தன்மையான சுற்றுலாத்தலங்கள் போன்றவை நிரம்பியுள்ளன.
மஹாபாரதப்போர் நிகழ்ந்த குருக்ஷேத்ரா ஸ்தலம் இம்மாநிலத்தில்தான் உள்ளது.ஃபரிதாபாத் நகரில் உள்ள பத்கால் ஏரி இம்மாநிலத்தின் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும்.
பிவானி எனும் இடத்திற்கு அருகிலுள்ள நட்சத்திர வடிவ நினைவுச்சின்னம் ஒன்று உலகெங்கிலுமிருந்தும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கிறது. கோயில்கள், கோட்டைகள், ஏரிகள் மற்றும் பூங்காக்கள் என ஒரு சுற்றுலாப்பயணி விரும்பக்கூடிய யாவும் ஹரியானா மாநிலத்தில் இடம் பெற்றுள்ளன.
மக்கள் மற்றும் கலாச்சாரம்
செழுமையான ஒரு கலாச்சார பின்னணி கொண்ட மாநிலமே ஹரியானா. இம்மாநிலத்தின் வரலாறு வேத காலத்திலிருந்தே துவங்குகிறது. பிரம்மா இந்த இடத்தில் வேள்விகளை நடத்தி பின் இந்த உலகைப்படைத்ததாக புராணங்கள் கூறுகின்றன.
இன்னும் ஏராளமான அம்சங்கள் ஹரியானா மாநிலத்தின் பெருமை மிகுந்த கலாச்சாரப்பின்னணிக்கு சான்றாக அமைந்திருக்கின்றன. இந்த மண்ணில்தான் வேத வியாசர் மஹாபாரதத்தை எழுதியுள்ளார். யோகா, தியானம் மற்றும் மந்திர உச்சாடனங்கள் போன்றவை இன்றும் இப்பகுதி மக்களால் பின்பற்றப்படுகின்றன.
இந்தியாவின் வடபகுதிக்கான நுழைவாயிலாக அமைந்திருந்ததால் புராதன காலம் தொடங்கி வரலாற்றுகாலம் வரை பல முக்கியமான வரலாற்று நிகழ்வுகளை இம்மண் சந்தித்துள்ளது.
வீரம் பொருந்திய இந்த பூமியின் மக்கள் தங்கள் உரிமைகளுக்காகவும், பாரம்பரியத்துக்காகவும் போரிடுவதற்கு தயங்காத போர்க்குணம் படைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரியானா திருவிழாக்களும் பண்டிகைகளும்
முன்னதாக பஞ்சாப் மாநிலத்தின் ஒரு அங்கமாக ஹரியானா மாநிலம் இருந்த காரணத்தால் இந்த இரு மாநிலங்களின் கலாச்சாரங்களுமே ஏறக்குறைய ஒன்றாக காணப்படுகின்றன.
ஹர்யான்வி, ஹிந்தி, பஞ்சாபி, உருது மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் இந்த மாநிலத்தில் பரவலாக பேசப்படுகின்றன. இந்தியாவின் எல்லா முக்கிய பண்டிகைகளுமே ஹரியானாவிலும் கோலாகலமாக மக்களால் கொண்டாடப்படுகின்றன.
லோஹ்ரி எனும் பண்டிகை ஹரியானா மாநிலத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மண் வளத்தை வரவேற்கும் இந்த பண்டிகை குளிர்காலத்திற்கு அடுத்து மகரசங்கராந்தி பண்டிகைக்கு முன்னதாக கொண்டாடப்படுகிறது.
பாரம்பரியமாக பஞ்சாப் மாநிலத்தில் உருவான இந்த பண்டிகை தற்போது ஹரியானா முழுதும் கொண்டாடப்படுகிறது.
கங்கோர், பைசாகி, குக்கா நௌமி, சூரஜ்குண்ட் கிராஃப்ட் மற்றும் கார்த்திகை திருவிழா போன்ற திருவிழாக்களும் ஹரியானா மாநிலத்தில் கொண்டாடப்படுகின்றன.
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 1 ம் தேதி ‘ஹரியானா டே’ எனும் திருவிழாக்கொண்டாட்டமும் நிகழ்த்தப்படுகிறது. இது ஹரியானா சுற்றுலாக்கழகம் துவங்கப்பட்ட நாளாகும்.
ஹரியானா – ரொட்டி தயாரிப்பிற்கு புகழ் பெற்ற மாநிலம்
ஹரியானா மாநிலத்தின் உணவுத்தயாரிப்பு முறைகள் இந்த பூமியின் கலாச்சாரம் மற்றும் மக்களைப்போன்றே மிக எளிமையானவையாக உள்ளன. சத்தும் சுவையும் கொண்ட ரொட்டி இந்த மாநில மக்களின் பிரியமான அடிப்படை உணவாகும்.
பால் உற்பத்தியில் சிறந்து விளங்குவதால் இங்கு தயாரிக்கப்படும் எல்லா உணவு வகைகளிலும் பால் ஒரு முக்கியமான சேர்மானப்பொருளாக இருக்கும்.
பொதுவாக ஹரியானாவாசிகள் சத்தும் போஷாக்கும் அளிக்கும் உணவு வகைகளை தேர்வு செய்பவர்களாக உள்ளனர். பெருநகரங்களில் தற்போது பரவிவரும் சத்தற்ற மேற்கத்திய பாணி உணவு வகைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இவர்களது உணவுவகைகள் காணப்படுகின்றன.
லஸி, கச்றி கி சப்ஜி, மிக்சட் தால் மற்றும் மெத்தி கஜ்ஜார் போன்றவை இம்மக்களிடையே பிரசித்தமாக விளங்கும் சில முக்கியமான உணவுப்பண்டங்களாகும்.
போக்குவரத்து வசதிகள்
இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களுடனும் விமானம், ரயில் மற்றும் சாலைவழி போக்குவரத்து வசதிகள் மூலம் ஹரியானா மாநிலம் இணைக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் தலைநகரான டெல்லிக்கு மிக அருகில் உள்ளதால் ஹரியானாவுக்கு விஜயம் செய்வது மிக எளிதான ஒன்றாகவே உள்ளது.
பருவநிலை
வருடமுழுதும் ஹரியானா மாநிலத்தில் பெருங்கண்ட பருவநிலை நிலவுகிறது. கோடைக்காலம் முழுதும் கடும் வெப்பமும், குளிர்காலத்தில் கடுங்குளிரும் இங்கு நிலவுகின்றன.
கர்ணால் மற்றும் அம்பாலா மாவட்டங்கள் தவிர ஹரியானா மாநிலத்தில் அதிக மழைப்பொழிவு காணப்படுவதில்லை. மஹேந்திரகர் மற்றும் ஹிஸ்ஸார் போன்ற மாவட்டங்கள் மிக மிக குறைவான மழையையே பெறுகின்றன.  

பஞ்சாப் சுற்றுலா

வட மேற்கிந்தியாவில் வீற்றிருக்கும் பஞ்சாப் மாநிலமானது மேற்கில் பாகிஸ்தான் நாட்டையும் இதர திசைகளில் ஹிமாசலப்பிரதேஷம், காஷ்மீர், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களையும் எல்லைகளாக கொண்டிருக்கிறது. இந்தியாவிலுள்ள மிகச்சிறிய மாநிலங்களின் ஒன்றாக உள்ள போதிலும் வளமான மாநிலமாக இது அறியப்படுகிறது.
பஞ்சாப்

1947-ம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் பஞ்சாப் பிரதேசத்தை பஞ்சாப் என்றும் பாகிஸ்தான் என்றும் பிரித்தபிறகும், 1966ம் ஆண்டில் மீண்டும் ஒரு முறை ஹிமாசல் பிரதேசம் என்றும் ஹரியானா என்று புதிய மாநிலங்கள் இதிலிருந்து உருவாக்கப்பட்டன.
நெடிய வரலாற்று பின்னணி நிரம்பிய இந்த பூமியின் வழியாகத்தான் கிரேக்கர்கள், ஆப்கானியர்கள், பாரசீகர்கள் மற்றும் மத்திய ஆசிய இனத்தவர்கள் போன்றோர் இந்தியாவுக்கு வருகை தந்தனர்; போர்களை நிகழ்த்தினர்; இந்திய மண்ணின் வரலாற்றையும் மாற்றினர்.
பின்னாளில் கடல் வழியே இந்தியாவின் தென்பகுதிக்கு வந்து பின்னர் இந்தியா முழுமையும் ஆங்கிலேயர்கள் ஆண்டனர். அது ஒரு தனி வரலாறாக நீண்டு முடிந்தது.
கிரேக்கர்கள் மற்றும் ஜொராஷ்டிரர்களின் வரலாற்றுக்குறிப்புகளில் இந்த பஞ்சாப் பூமி உயர்வாக குறிப்பிடப்பட்டிருக்கும் பெருமையை பெற்றிருக்கிறது. ஐந்து ஆறுகள் சங்கமிக்கும் வளமான பூமியாக பஞ்சாப் தேசத்தை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே விவசாயத்தொழில் இந்த மண்ணின் வளத்துக்கான் அடிப்படை காரணியாக இருந்து வந்துள்ளது என்பதை சொல்லவே தேவையில்லை. சீக்கிய மதத்தினர் பரவலாக வசிக்கும் பூமி எனும் தனித்துவமான அடையாளத்தையும் இந்த பஞ்சாப் மாநிலம் பெற்றிருக்கிறது.
அறிவியல் முன்னேற்றங்களும் தொழில் நுட்ப வளர்ச்சிகளும் நிகழ்ந்த 20ம் நூற்றாண்டின் பாதியிலிருந்தே இந்த பஞ்சாப் மாநிலம் பல்வேறு இயந்திர தொழில்நுட்ப கருவிகளின் தயாரிப்பு மற்றும் தொழிற்சாலைகள் போன்றவற்றின் கேந்திரமாக திகழ்ந்து வருகிறது.
பலவகையான உபகரணங்கள், இயந்திரங்கள், விளையாட்டுப்பொருட்கள், ஸ்டார்ச்சு, விவசாய உரத்தயாரிப்பு, சைக்கிள் தயாரிப்பு, சர்க்கரை மற்றும் ஆடை உற்பத்தி போன்றவற்றில் இந்த மாநிலம் முன்னணியில் உள்ளது.
குறிப்பாக விவசாயக்கருவிகள்,அறிவியல் உபகரணங்கள் மற்றும் மின்சாதனக்கருவிகள் போன்றவற்றுக்கு இம்மாநிலம் இந்தியா முழுவதும் புகழ் பெற்றிருக்கிறது.
பருவநிலை, புவியியல் அமைப்பு மற்றும் காட்டுயிர் அம்சங்கள்!
வளம் நிரம்பிய மண் இயல்பை பெற்றிருக்கும் இந்த பஞ்சாப் மாநிலம் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருக்கும் பாசனக்கால்வாய்களை கொண்டிருக்கிறது. இம்மாநிலத்தின் வடகிழக்கு பகுதி இமாலயத்தின் அடிவார மலைப்பகுதிகளில் வீற்றிருக்கிறது.
இதன் தென்மேற்குப்பகுதி ராஜஸ்தான் தார் பாலைவனப்பிரதேசத்தோடு இணைந்திருக்கிறது. பருவநிலையை பொறுத்தவரையில் பஞ்சாப் மாநிலம் கடுமையான வெப்பம் நிலவும் கோடைக்காலத்தையும் கடும் குளிர் நிலவும் குளிர்காலத்தையும் பெற்றிருக்கிறது. மழைக்காலங்களில் கடும் மழைப்பொழிவையும் இம்மாநிலம் பெறுகிறது.
இருப்பினும் இயற்கையான வனப்பகுதி என்று எதுவும் இந்த பஞ்சாப் மாநிலத்தில் இல்லை. ஆனால் ஆரஞ்சு, மாதுளை, ஆப்பிள், பீச், அத்தி, மல்பெரி, ஏப்ரிகாட், பாதாம் மற்றும் பிளம் போன்ற பழங்கள் இப்பகுதியில் அதிகம் விளைகின்றன.
இம்மாநிலத்தின் பெரும்பாலான நிலப்பகுதி புதர்கள், செடிகள் மற்றும் புல்வெளி ஆகியவற்றுடன் காட்சியளிக்கிறது. கோதுமை, நெல், கரும்பு மற்றும் காய்கறிகள் ஆகிய அத்தியாவசிய தானியங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் இங்கு விளைவதால் இது ‘இந்தியாவின் களஞ்சியம்’ எனும் சிறப்புப்பெயரையும் பெற்றிருக்கிறது.
பட்டுப்பூச்சி வளர்ப்பு மற்றும் தேனி வளர்ப்பு போன்ற  குடிசைத்தொழில்களும் இம்மாநிலத்தில் பரவலாக வழக்கத்தில் உள்ளன. குதிரைகள், ஒட்டகங்கள் மற்றும் எருமைகள் போன்றவை இங்கு வீட்டு விலங்குகளாக வளர்க்கப்பட்டு விவசாயம் மற்றும் இதர தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.  இப்பகுதியில் ஓடும் ஆறுகளில் முதலைகள் அதிகம் வசிக்கின்றன.
பஞ்சாப் சுற்றுலா சிறப்பம்சங்கள்!
இந்தியாவில் திட்டமிட்டு நிர்மாணிக்கப்பட்ட நகர்களில் ஒன்றான சண்டிகர் பஞ்சாப் மாநிலத்தின் தலைநகராக உள்ளது. இந்த நகரத்தின் கலாச்சாரம் மற்றும் நாகரிக வாழ்க்கை முறை போன்றவை இந்தியா முழுமைக்கும் பிரசித்தி பெற்றுள்ளன.
கம்பீரமான அரண்மனைகள், கோயில்கள், சன்னதிகள் மற்றும் வரலாற்று யுத்தங்கள் நடந்த ஸ்தலங்கள் என்று பல்வேறு அம்சங்கள் இந்த நகரை ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக மாற்றியுள்ளன.
இது தவிர ஃபரித்கோட்ஜலந்தர், கபுர்தலா, லுதியானா, பதான்கோட், பாடியாலா, மொஹாலிபோன்ற பல முக்கியமான நகரங்களும் பஞ்சாப் மாநிலத்திலுள்ள சுற்றுலாத்தலங்களாக புகழ் பெற்றுள்ளன. ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு விதமான சிறப்பம்சங்களோடு பஞ்சாப் மாநிலத்தில் பயணிகளுக்காக காத்திருக்கின்றன.
பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த அம்சங்கள் பஞ்சாப் மாநிலத்தின் எல்லா சுற்றுலா சுவராசியங்களிலும் அடித்தளமாக அமைந்திருக்கின்றன. இங்கு கோபிந்த்கர் கோட்டை,கிலா முபாரக்ஷீஷ் மஹால், ஜகஜித் அரண்மனை போன்ற வரலாற்று சின்னங்கள் கடந்து போன உன்னத காலங்களின் தடயங்களாக இங்கு வீற்றிருக்கின்றன.
இவை தவிர அட்டாரி பார்டர், ஆம் காஸ் பாக், பரதாரி தோட்டப்பூங்கா, தக்காத் இ அக்பரி,ஜாலியன் வாலா பாக் மற்றும் ரௌஸா ஷரீஃப் போன்ற முக்கியமான அம்சங்களும் பஞ்சாபில் அவசியம் பார்க்க வேண்டியவையாகும்.
கவர்ன்மெண்ட் மியூசியம் மற்றும் ஆர்ட் கேலரி, ஷாஹீத் இ அஸாம் சர்தார் பகத் சிங் மியூசியம்புஷ்பா குஜ்ரால் சைன்ஸ் சிட்டி மற்றும் மஹாராஜா ரஞ்சித் சிங் மியூசியம்போன்றவை பஞ்சாபில் உள்ள முக்கியமான அருங்காட்சியகங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.
வரலாற்று பிரியர்கள் விரும்பக்கூடிய பல அரும்பொருட்கள் மற்றும் ஆவணங்கள் இந்த அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
மற்றொரு முக்கியமான சிறப்பம்சமாக சீக்கிய மதத்தை சேர்ந்தவர்களுக்கான பல்வேறு யாத்திரை ஸ்தலங்களை பஞ்சாப் மாநிலம் தன்னுள் கொண்டிருக்கிறது.
தேரா சந்த்கர், குருத்வாரா கர்ணா சாஹிப், குருத்வாரா ஷீ தர்பார் சாஹிப்,  குருத்வாரா ஷாஹித்கஞ்ச் தல்வாண்டி ஜட்டன் மற்றும் இன்னும் ஏராளமான  குருத்வாரா ஸ்தலங்கள் இம்மாநிலம் முழுதும் பரவி அமைந்துள்ளன.
இவை தவிர ஷீ ராம் திரத் கோயில், துர்கையானா கோயில், ஷிவ் மந்திர் கத்கர், காமாஹி தேவி கோயில், தேவி தலாப் மந்திர் போன்ற முக்கியமான ஹிந்து வழிபாட்டுத்தலங்களும் பஞ்சாப் மாநிலத்தில் வீற்றிருக்கின்றன. மூரிஷ் மசூதி எனும் முஸ்லிம் வழிபாட்டுத்தலம் முஸ்லிம்களுக்கான முக்கியமான மசூதியாக அமைந்துள்ளது.
சங்கோல் தொல்லியல் அருங்காட்சியகம், ரூப்நகர் போன்றவை இம்மாநிலத்தில் உள்ள முக்கியமான அருங்காட்சியகம் மற்றும் தொல்லியல் ஸ்தலங்களாகும்.
சாத்பீர் விலங்குகாட்சி சாலை, தாக்னி ரெஹ்மாபூர் காட்டுயிர் சரணாலயம், காஞ்ச்லி சதுப்பு நிலப்பகுதி, ஹரிகே சதுப்புநிலம், டைகர் சஃபாரி மற்றும் டீர் பார்க் போன்றவை பஞ்சாப் மாநிலத்தின் இயற்கை சார்ந்த சுற்றுலா அம்சங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.
மக்கள் மற்றும் கலாச்சாரம்!
பஞ்சாப் மாநில சுற்றுலாவானது பயணிகளுக்கு பஞ்சாபி கலாச்சாரம் குறித்த பரவலான அறிமுகத்தை அளிக்கிறது. இம்மாநிலத்தில் பெரும்பான்மையாக சீக்கிய மதம் பின்பற்றப்படுகிறது.
சீக்கிய மதத்தின் தலைமைக்கேந்திரமாக விளங்கும் அம்ரித்சர் தங்கக்கோயில் பஞ்சாப் மாநிலத்தில் முக்கியமான சுற்றுலா மற்றும் யாத்ரீக ஸ்தலமாக உலகப்புகழ் பெற்றிருக்கிறது.
பஞ்சாபிலுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு குருத்வாரா அமைந்துள்ளது என்பது குறிப்பிடவேண்டிய ஒரு சிறப்பம்சமாகும். சீக்கிய மதத்துக்கு அடுத்தபடியாக ஹிந்து மதம் இங்கு வசிக்கும் மக்களால் பின்பற்றப்படுகிறது. இம்மாநிலத்தின் அரசாங்க மொழியாக பஞ்சாபி மொழி விளங்கிவருகிறது.
பஞ்சாபி மக்கள் உற்சாக மன இயல்பு கொண்டவர்களாகவும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களில் ஆர்வம் மிக்கவர்களாகவும் உள்ளனர்.
இசை, நடனம் மற்றும் சுவையான உணவு என்பது இவர்களது கலாச்சாரத்தில் முக்கிய இடத்தை பெற்றுள்ள அம்சங்களாகும். லோஹ்ரி, பசந்த், பைசாகி மற்றும் டீஜ் போன்றவை பஞ்சாப் மாநிலத்தில் கொண்டாடப்படும் முக்கியமான திருவிழாக்களாகும்.
பாங்க்ரா எனப்படும் பஞ்சாபி நடன வடிவம் இந்த மாநிலத்தில் மட்டுமல்லாமல் தற்போது இந்தியா மற்றும் சர்வதேச அளவிலும் பிரசித்தி பெற்றுள்ளது.
ஆரம்ப காலத்தில் அறுவடைக்கால திருவிழா நடனமாக இருந்து வந்த இது படிப்படியாக நாகரிக நடன வடிவமாக மாறிவிட்டது. இந்த மாநிலத்தில் விளங்கி வரும் நாட்டார் கலை வடிவங்களும் பஞ்சாபி கலாச்சாரத்தின் நெடிய பாரம்பரியத்தை பிரதிபலிக்கின்றன.  

உத்தரகண்ட்

இந்தியாவின் வடபகுதியில் உள்ள இந்த உத்தரகண்ட் மாநிலமானது உலகெங்கிலுமிருந்தும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் அளவிற்கு பிரசித்தமான சுற்றுலா கேந்திரமாக புகழ் பெற்று விளங்குகிறது. ‘தேவர்களின் பூமி’ என்றும் ‘பூலோக சொர்க்கம்’ என்றும் அழைக்கப்படும் இந்த எழிற்பிரதேசத்தின் அழகு வாழ்நாளில் ஒருமுறை இந்தியர் அனைவரும் தரிசிக்க வேண்டிய ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை.  
உத்தரகண்ட்

உத்தரகண்ட் மாநிலம் வடக்கில் திபெத் நாட்டையும் கிழக்கில் நேபாள நாட்டையும் எல்லைகளாக கொண்டு அமைந்திருப்பதால் இந்திய புவியியல் அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாநிலமாகவும் விளங்குகிறது.
இதன் வடமேற்கில் ஹிமாசலப்பிரதேச மாநிலம் மற்றும் தெற்கே உத்தரப்பிரதேச மாநிலம் ஆகியவை அண்டை மாநிலங்களாக சூழ்ந்துள்ளன. உத்தராஞ்சல் என்று அழைக்கப்பட்ட இந்த மாநிலம் 2007ம் ஆண்டு ஜனவரியில் இருந்து உத்தரகண்ட் என்று அதிகாரபூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
13 மாவட்டங்களை கொண்டுள்ள இந்த மாநிலமானது வரலாற்று பின்னணியின் அடிப்படையில் இரண்டு பெரிய மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குமோன் மற்றும் கார்வால் என்ற பெயரில் இந்த  2 மண்டலங்களும் அழைக்கப்படுகின்றன.
வரலாற்றுக்காலத்தில் ஆண்ட குமோன் மற்றும் கார்வால் என்ற இரண்டு முக்கியமான ராஜவம்சங்களின் அடிப்படையில் இந்த பெயர்கள் இடப்பட்டுள்ளன.
பருவநிலை
உத்தரகண்ட் மாநிலம் மூன்று முக்கிய பருவகாலங்களை கொண்டுள்ளது. வழக்கமான இந்திய பருவங்களான கோடைக்காலம், குளிர்காலம் மற்றும் மழைக்காலம் என்பவையே அவை. மேலும் இப்பகுதியின் பருவநிலை அந்தந்த இடங்களின் புவியியல் அமைப்புகளை பொறுத்து மாறுபட்ட காணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மலைப்பாங்கான பகுதிகளே இங்கு அதிகம் என்றாலும் சமவெளிப்பகுதிகளும் குறைந்த அளவில் இம்மாநிலத்தில் இடம் பெற்றிருக்கின்றன. எனவே பருவநிலை என்பது அந்தந்த இடங்களின் புவி அமைப்புக்கேற்ப மாறுபட்டு காணப்படும்.
பொதுவாக கோடைக்காலமே இம்மாநிலத்தில் சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக இருக்கும். இக்காலத்தில் நிலவும் இதமான சூழல் பயணத்தை இனிமையானதாக மாற்றும்.
குளிர்காலத்திலும் இப்பிரதேசத்தில் சுற்றுலா மேற்கொள்ளலாம் என்றாலும் சில இடங்களுக்கான பனிப்பொழிவால் மூடப்பட்டிருக்கக்கூடும். மேலும், கடுமையான குளிரை எதிர்கொள்ளும் வலிமை கொண்டோருக்கு மட்டுமே இக்காலம் பொருந்தும்.
மொழிகள்
உத்தரகண்ட் மாநிலத்தில் ஹிந்தி மொழியே அதிகாரபூர்வ ஆட்சி மொழியாக விளங்குகிறது. இருப்பினும் பல்வேறு உள்ளூர் மொழிகளும் இங்கு பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் குமோனி மற்றும் கார்வாலி ஆகியவை முக்கியமான மொழிகளாக மக்களால் பேசப்படுகின்றன. 
இவை தவிர பஹாரி மொழியும் சில பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. குமானி மொழியில் மட்டுமே பல்வேறு துணை மொழிகள் புழங்குவதும் குறிப்பிடத்தக்கது.
ஜோஹரி, தண்புரியா, அஸ்கொதி, சிரளி, கங்கோலா, கஸ்பர்ஜியா, பல்டாகோதி, பச்ஹை, ரௌச்சவ்பைசி, மஜ் கும்மையா, சொர்யாலி, சௌகர்கியாலி மற்றும் கும்மையா என்ற பெயர்களில் இந்த துணை மொழிகள் அழைக்கப்படுகின்றன.
கட்வாலி மொழியிலும் ஜௌன்சாரி, சைலானி மற்றும் மர்ச்சி ஆகிய துணை மொழிகள் உள்ளன. தேவநாகரி எழுத்துக்களை பயன்படுத்தும் இந்த மொழிகள் யாவுமே சம்ஸ்கிருதம், மத்திய பஹாரி மற்றும் சௌராசேனி பிரகிரித் ஆகிய மொழிகளை அடிப்படையாக கொண்டு பிறந்துள்ளன.
உத்தரகண்ட் மாநிலத்தின் சுற்றுலா சிறப்புகள்
இயற்கை எழில் மிளிரும் 13 மாவட்டங்களை கொண்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் சுற்றுலா அம்சங்களுக்கு குறைவேயில்லை. புதிய புதிய இடங்களும் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வளர்ச்சியடைவதால் இங்குள்ள சுற்றுலாத்தலங்களின் பட்டியலானது நீண்டு கொண்டே தான் செல்கிறது.
ஆன்மீக வழிபாட்டுத்தலங்கள் முதல் இயற்கைக்காட்சிகள் மற்றும் சாகச மலையேற்ற பயணங்கள் வரை எல்லா அம்சங்களையும் இங்குள்ள சுற்றுலாத்தலங்கள் பயணிகளுக்கு வழங்குகின்றன.
உத்தரகண்ட் மாநிலத்தின் ஏரி மாவட்டம் என்ற சிறப்பை கொண்டுள்ள நைனிடால் பகுதி கடல் மட்டத்திலிருந்து1938 கி.மீ உயரத்தில் அமைந்துள்ளது. இந்த இடம் 1841ம் ஆண்டில் ஆங்கிலேயரால் கண்டுபிடிக்கப்பட்டு படிப்படியாக ஒரு விடுமுறை ஸ்தலமாக மாற்றப்பட்டிருக்கிறது.
இங்குள்ள ஏரியின் கரையில் வீற்றிருக்கும் நைனி என்ற தெய்வத்தின் பெயரே இந்த நகரத்துக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. படகுச்சவாரி, சொகுசுப்படகுப்பயணம் மற்றும்மீன்பிடித்தல் போன்ற பல பொழுதுபோக்கு அம்சங்கள் நைனிடால் ஏரியில் பயணிகளுக்காக காத்திருக்கின்றன.
தவிர நைனிடால் நகரை சுற்றிலும் ஏராளமான இதர சுற்றுலா அம்சங்களும் நிறைந்திருக்கின்றன. இவற்றில் ஹனுமான்கர்ஹிகுர்பதால்கில்பரி, லரியாகண்டா மற்றும் லேண்ட்’ஸ் என்ட் போன்ற இடங்கள் குறிப்பிடத்தக்கவை.
குயீன் ஆஃப் தி ஹில்ஸ் என்று பிரசித்தமாக அழைக்கப்படும் முசூரி எனும் இடம் உத்தரகண்ட் பகுதியில் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய ஒன்றாகும்.
இங்குள்ள பசுமையான மலைப்பகுதிகள் மற்றும் பனி படர்ந்த சிகரங்களிலிருந்து தெற்குப்புறமாக பரந்து கிடக்கும் டூன் பள்ளத்தாக்கின் பிரமிக்க வைக்கும் அழகை நன்றாக பார்த்து ரசிக்கலாம். யமுனா பிரிட்ஜ், நாக் திப்பா, தனோல்டி மற்றும் சுர்கண்டா தேவி போன்ற விசேஷமான சுற்றுலா அம்சங்கள் முசூரியைச்சுற்றிலும் அமைந்துள்ளன.
காட்டுயிர் ரசிகர்களும் இயற்கைப்பிரியர்களும் மிகவும் விரும்பக்கூடிய காட்டுயிர் பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களும்  உத்தரகண்ட் மாநிலத்தில் ஏராளம் உள்ளன. 
ஜிம் கார்பெட் நேஷனல் பார்க், ராஜாஜி நேஷனல் பார்க், கேதார்நாத் சரணாலயம், கோவிந்த் காட்டுயிர் சரணாலயம், பின்சார் காட்டுயிர் சரணாலயம், அஸான் பேரேஜ் பறவைகள் சரணாலயம், நந்தா தேவி நேஷனல் பார்க் மற்றும் அஸ்கோட் காட்டுயிர் சரணாலயம் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.
வருடந்தோறும் ஆன்மீக யாத்ரிகர்கள் ஏராளமான எண்ணிக்கையில் விஜயம் செய்யும் முக்கியமான கோயில்களும் உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கின்றன.
ஆதி கைலாஷ், அல்மோரா, ஆகஸ்ட்முனி, பத்ரிநாத், தேவ்பிரயாக், துவாரகாட், கங்க்ணனி, கங்கோலிஹாட், கங்கோத்ரி மற்றும் கௌரிகுண்ட் போன்றவை இவற்றில் மிக பிரசித்தமான ஆன்மீக தலங்கள் ஆகும்.
இவை தவிர ஹரித்வார்கேதார்நாத்ருத்ரநாத், கல்பேஷ்வர் போன்ற இதர முக்கிய ஆன்மீக ஸ்தலங்களுக்கும் பயணிகள் விஜயம் செய்யலாம்.
உத்தரகண்ட் மாநிலத்தில் நெடிதுயர்ந்து மடிப்புகளாக படர்ந்து கிடக்கும் இமயமலை மற்றும் காரகோரம் மலைத்தொடர்கள் மலையேற்றம், சிகரமேற்றம், பனிச்சறுக்கு, மிதவைப்படகுச்சவாரி போன்ற பலவகையான சாகசப்பொழுதுபோக்கு அம்சங்களை சுற்றுலாப்பயணிகளுக்கு வழங்குகின்றன.
பாராசூட் பறப்பு மற்றும் கூடாரத்தங்கல் போன்ற இதர வித்தியாசமான பொழுதுபோக்கு அம்சங்களையும் இந்த மாநிலத்தில் பயணிகள் அனுபவிக்கலாம். 

ஹிமாச்சல பிரதேசம் சுற்றுப்பயணம்

'கடவுள்கள் வாழும் பூமி' என்றும் 'தேவபூமி' என்றும் சிறப்பித்து போற்றப்படும் ஹிமாச்சல பிரதேசம் பசுமையான பள்ளத்தாக்குகள், கிறங்கடிக்கும் வெண்பனிச் சிகரங்கள், மனம் மயக்கும் ஏரிகள், பசும் புல் நிலங்கள் ஆகியவை புடைசூழ சுற்றுலாப் பயணிகளின் சொர்கமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த எழில் கொஞ்சும் மாநிலம் கிழக்கே திபெத் நாட்டையும், மேற்கே பஞ்சாபையும், வடக்கே காஷ்மீரையும் தன் எல்லைகளாக கொண்டுள்ளது.
ஹிமாச்சல பிரதேசம்

இந்தியாவின் வடமாநிலமான ஹிமாச்சல பிரதேசம் உலகம் முழுவதிமிருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக வேகமாக வளர்ந்து  வரும் ஹிமாச்சல பிரதேச சுற்றுலாத் துறை நாட்டிற்கு பெரிய அளவில் வருவாய் ஈட்டித் தருகிறது. அதோடு பயணிகளின் கூட்டம் பெருகப் பெருகப் அதற்கு ஏற்றார் போல ஹிமாச்சலத்தில் ஹோட்டல்களின் எண்ணிகையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
வானிலை
ஹிமாச்சல பிரதேசத்தில் பொதுவாக ஆண்டுதோறும் வசந்த காலம், மழைக் காலம், பனிக் காலம் ஆகிய மூன்று பருவங்கள் காணப்படுகின்றன. இதில் வசந்த காலம் பிப்ரவரி மாதத்தின் மத்தியில் ஆரம்பித்து ஏப்ரல் மத்தியில் முடிவடையும். அதேபோல அக்டோபரில் தொடங்கி மார்ச்சில் முடியும் பனிக் காலங்கள் ஹிமாச்சல பிரதேசத்தை சுற்றிப் பார்க்க மிகவும் ஏற்ற பருவமாகும்.
மொழிகள்
ஹிமாச்சல பிரதேசத்தின் அதிகாரப்பூர்வ மொழியாக ஹிந்தி இருந்தாலும், 'பஹாரி' என்ற மொழியே அதிக மக்களால் பேசப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பஹாரியின் கிளை மொழிகளான மண்டியாலி, குலவி, கெஹ்லூரி, ஹிந்தூரி, சமேலி, சீர்மெளரி, மியாஹஸ்வி, பாங்வாலி போன்றவை முறையே மண்டி, குலு, பிலாஸ்பூர், நலக்ராஹ், சம்பா, சீர்மௌர், மஹாஸு, பாங்கி உள்ளிட்ட பழங்குடி மக்களால் பேசப்படுகின்றன.
இவைதவிர பஹாரியின் மற்ற கிளை மொழிகளாக கருதப்படும் கின்னாரி, லாஹௌலி, ஸ்பிதியான் போன்ற மொழிகளும் இப்பகுதியில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
அதோடு ஹிமாச்சலத்தின் ஒரு சில பகுதிகளில் பஞ்சாபி, டோக்ரி, காங்க்ரி, குஜராத்தி ஆகிய மொழிகளும் புழக்கத்தில் உள்ளன. மேலும் சமஸ்கிருதத்திலிருந்து பிறந்த பஹாரி மொழியும், அதன் கிளை மொழிகளும் முகாலய காலத்தில் பெர்சிய எழுத்துருக்களை பின்பற்றினாலும் தற்போது தேவநாகிரி எழுத்துப் பிரதிகளிலேயே எழுதப்படுகின்றன.
ஹிமாச்சல பிரதேச சுற்றுலா
ஹிமாச்சல பிரதேசத்தில் மொத்தம் உள்ள 12 மாவட்டங்களில் டிரெக்கிங் பகுதிகள், மீன்பிடி பகுதிகள், படகுப் பயணம், பனிச்சறுக்குபாராகிளைடிங், கோல்ஃப் என்று எண்ணற்ற சுற்றுலா அம்சங்கள் கொட்டிக்கிடக்கின்றன.இம்மாநிலத்தின் பீர், மணாலி, பிலாஸ்பூர்ரொஹ்ருஉள்ளிட்ட பகுதிகள் பாராகிளைடிங் போன்ற வான சாகச விளையாட்டுக்களுக்காக வெகுப்பிரபலம்.
ஹிமாச்சல பிரதேசத்தின் சுற்றுலாத் துறை மாநிலத்தை நான்கு வெவ்வேறு பகுதிகளாக பிரித்துள்ளது. அவை சட்லெஜ் செர்க்யூட், பீஸ் செர்க்யூட் , தௌலாதர் செர்க்யூட் மற்றும் டிரைபல் செர்க்யூட் என்று அறியப்படுகின்றன.
இதில் பீஸ் செர்க்யூட்டில் குலு மணாலி பள்ளத்தாக்கின் வழி பாயும் பீஸ் நதி மிகவும் பிரபலமான சுற்றுலாப் பகுதியாகும். இந்த பீஸ் செர்க்யூட்டில் தேவதாரு மரங்கள், பாறை சரிவுகள், பசும் புல்வெளிகள், வண்ண மலர்கள், பழத்தோட்டங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் நீங்கள் ஒரு நிமிட நேரம் அமர்ந்திருந்தாலே போதும் உங்கள் பிறவிக் கடனை அடைந்து விடுவீர்கள்.
அதோடு தொன்மை வாய்ந்த கலாச்சார பாரம்பரிய பின்னணியில் அழகிய மடாலயங்கள், பனிமலைகள், பனிக்கட்டிப்பாளம், உறைந்த ஏரிகள் என்று சாகசப் பிரியர்களின் விருப்பமான பகுதியாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது டிரைபல் செர்க்யூட்.
தௌலாதர் செர்க்யூட் டல்ஹௌசியில் தொடங்கி பத்ரிநாத்தில் முடிகிறது. இந்த  செர்க்யூட்டை காங்க்ரா பள்ளத்தாக்கிலிருந்து தெளிவாக பார்த்து ரசிக்கலாம்.
மேலும் புகழ்பெற்ற சட்லெஜ் நதி பாயும் சட்லெஜ் செர்க்யூட் ஆப்பிள் தோட்டங்கள், தேவதாரு மரங்கள் சூழ்ந்திருக்க கவின் கொஞ்சும் ஷிவாலிக் மலையின் பின்னணியில் சுற்றுலாப் பயணிகளின் உள்ளங்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.
ஹிமாச்சல பிரதேசம் 'கடவுள்கள் வாழும் பூமி' எனும் சிறப்புப் பெயருக்கு ஏற்றார் போல் ஜ்வாலமுகி கோயில், சாமுண்டா தேவி கோயில், ப்ரஜ்ஜேஸ்வரி கோயில், பைஜிநாத், லக்ஷ்மிநாராயணன், சௌராசி உள்ளிட்ட ஏராளமான ஆலயங்களை கொண்டிருக்கிறது.
இவைதவிர எண்ணற்ற குருத்வாராக்களும், கிறிஸ்ட் சர்ச் கசௌலி, கிறிஸ்ட் சர்ச் கசௌலிசிம்லாசெயின்ட் ஜான்ஸ் சர்ச் போன்ற தேவாலயங்களும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.
மேலும் பௌண்டா சாஹிப், ரெவல்சார் மற்றும் மணிகரன் ஆகிய பகுதிகள் முக்கியமான சீக்கிய யாத்ரீக மையங்களாக அறியப்படுகின்றன.
ஹிமாச்சல பிரதேசத்தை தேடி வரும் இயற்கை காதலர்களை வரவேற்க தி கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க், தி பின் வேல்லி நேஷனல் பார்க், தி ரேணுகா சரணாலயம், தி போங் அணை சரணாலயம், தி கோபால்பூர் ஜூ, குஃப்ரி போன்ற பகுதிகள் காத்துக் கொண்டிருக்கின்றன.
அதோடு தொல்பொருள் மற்றும் பாரம்பரிய அற்புதங்களின் மீது ஆர்வமுள்ள வரலாற்றுப் பிரியர்கள் காங்க்ரா கோட்டை, ஜுப்பால அரண்மனை, நக்கர் கோட்டை, கம்ரு கோட்டை, கோண்ட்லா கோட்டை, கிறிஸ்ட் சர்ச், சேப்ஸ்லீ, தி வுட் வில்லா பேலஸ், தி சைல் பேலஸ் ஆகிய இடங்களுக்கு சென்று வரலாம்.
ஹிமாச்சல பிரதேசத்தில் அரசர் காலத்து அழகிய கலை வடிவங்களை எடுத்துக்காட்டும் விதமாக எண்ணற்ற அருங்காட்சியகங்களும், கலைக் கூடங்களும் உள்ளன.
அவற்றில் ஸ்டேட் மியூசியம், காங்க்ரா ஆர்ட் கேலரி, பூரி சிங் மியூசியம், ரோயரிச் ஆர்ட் கேலரி, ஷோபா சிங் ஆர்ட் கேலரி ஆகியவை முக்கியமானவை.
மேலும் பிரஷார் ஏரிகஜ்ஜார் ஏரி, ரேணுகா ஏரி, கோபிந்த்சாகர் ஏரி, தால் ஏரி, பாண்டோஹ் அணை, மணிமகேஷ் ஏரி, பிருகு ஏரி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் தங்கள் மாலைப் பொழுதை இன்பமயமாக கழிக்கலாம்.  
ஹிமாச்சல பிரதேசம் சிவராத்திரி, லடர்ச்சா திருவிழா, மிஞ்சார் திருவிழா, மணிமகேஷ் திருவிழா, புலேக் திருவிழா, குலு தசரா லாவி திருவிழா, ரேணுகா மற்றும் பனிச்சறுக்குதிருவிழா ஆகியவற்றுக்காக மிகவும் பிரசித்தமாக அறியப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் சுற்றுலா-

இமயமலையின் மடியில் வீற்றிருக்கும் ஜம்மு காஷ்மீர் தன் இயற்கை அழகிற்காக உள்நாட்டிலும் உலகம் முழுவதிலும் அறியப்படும் மாநிலமாகும். காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் மற்றும் ஜம்மு ஆகிய மூன்று பகுதிகளை உள்ளடக்கிய ஜம்மு காஷ்மீர் ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுடன் தன் எல்லையை பகிர்ந்துகொண்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர்

இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றான ஜம்மு காஷ்மீருக்கு வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள். இயற்கை ஆர்வலர்களையும், சாகசப் பிரியர்களையும் ஒருங்கே மகிழ்விக்கும் இடமாக ஜம்மு காஷ்மீர் திகழ்கிறது.
புகழ்பெற்ற முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் ஜம்மு காஷ்மீரின் அழகில் மயங்கி, பூமியில் சொர்கம் உண்டென்றால் அது இங்குதான் உள்ளது என வர்ணித்தார். பிரம்மாண்டமான மலைத் தொடர்கள், பளிங்கு போன்ற தெளிவான ஓடைகள் கோவில்கள், பனிப்பாறைகள் மற்றும் தோட்டங்கள் ஜம்மு காஷ்மீரின் அழகிற்கு அழகு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளன.
வானிலை
வருடம் முழுவதும் ஜம்மு காஷ்மீரை சுற்றிப் பார்க்கலாம் என்றாலும் மார்ச் முதல் அக்டோபர் வரையில் பயணப்படுவதே உகந்ததாக கருதப்படுகிறது. இம்மாதங்களில் நிலவும் மிதமான தட்பவெட்ப நிலை சுற்றிப்பார்ப்பதற்கு ஏற்றவாறு இருக்கிறது.
குளிர்கால விளையாட்டுகளில் ஆர்வமுள்ளவர்கள் பனி சூழ்ந்திருக்கும் டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை இங்கு வரலாம். செப்டம்பர் முதல் மார்ச் வரை சூடான பருவநிலை நிலவுவதால் அந்த பருவமும் சுற்றிப்பார்ப்பதற்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது.
லடாக் பகுதி குளிர்காலங்களில் மிகவும் குளிராக இருப்பதால் அப்பகுதியை கோடைகாலத்தில் சுற்றிப் பார்ப்பதே உகந்தது.
மொழிகள்
ஜம்மு காஷ்மீரின் அதிகாரபூர்வ மொழி பெர்ஷிய எழுத்துக்களால் எழுதப்படும் உருது ஆகும். மாநிலம் முழுதும் உருது பேசப்பட்டாலும் காஷ்மீர் பகுதியில் அதிகமாக பேசப்படுகிறது. மேலும் காஷ்மிரி, டோக்ரா, பால்டி, பஹரி, கோஜ்ரி, ஷினா, பாஷ்தோ லடாக்கி ஆகிய மொழிகளும் இங்கு பேசப்படுகின்றன.
ஜம்மு காஷ்மீர் சுற்றுலா
இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக கருதப்படும் ஜம்மு காஷ்மீரின் கோடைகால தலைநகராக ஸ்ரீநகரும், குளிர்கால தலைநகராக ஜம்முவும் விளங்குகின்றன.
பிர் பஞ்சால் மலைத் தொடருக்கும் இமயமலைகளுக்கும் இடையே அமைந்திருப்பதால் சாகசப் பிரியர்களுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும், புனிதப் பயணிகளுக்கும் ஜம்முகாஷ்மீரில் ஏராளமாக ஸ்தலங்கள் இருக்கின்றன.
கலைப்பிரியர்களால் விரும்பப்படும் அமர் மஹால் அருங்காட்சியகமும், டோக்ரா அருங்காட்சியகமும் ஜம்முவின் முக்கியமான அருங்காட்சியகங்களாகும்.
வைஷ்ணோ தேவி, தர்கா கரிப் ஷா, பாஹு கோவில், ஜியாரத் பாபா புதான் ஷா, ஷிவ் கோரி,பீர் கோஹ் குகை கோவில் ஆகியவை இங்கிருக்கும் புகழ்பெற்ற மத ஸ்தலங்களாகும்.
தெளிவான நீல நிற நீர்நிலைகள், மலைகள், ஏரிகள், மிதமான தட்பவெட்பநிலை ஆகியவை காஷ்மீர் பள்ளத்தாக்கின் சிறப்பம்சங்களாகும். ஆப்பிள் மற்றும் செர்ரி தோட்டங்கள், ஷிகாரா சவாரி, கொண்டோலா சவாரி, காஷ்மீர் கைவினைப் பொருட்கள் ஆகியவை காஷ்மீரின் தனிச்சிறப்புகளாகும்.
அதுமட்டுமல்லாது ஹஜ்ரத்பல் மசூதி, ஜம்மா மஸ்ஜித், சரர்-ஈ-ஷரிஃஃப், கீர் பவானி கோவில், மார்தான்ட் சூரிய கோவில் சங்கராச்சார்யா கோவில் ஆகிய மத ஸ்தலங்களும் ஏராளமாக அமைந்துள்ளது.
மேலும் நிஷத் தோட்டம், ஷாலிமார் தோட்டம், சஷ்ம்-ஈ-ஷாஹி ஆகிய மொகல் தோட்டங்களையும் பயணிகள் கண்டுகளிக்கலாம்.பஹல்காம், சோனாமார்க், பாட்னிடாப்,த்ராஸ், குல்மார்க், கார்கில் ஆகிய இடங்கள் தங்கள் இயற்கை அழகிற்காக புகழ்பெற்றவை.தால் ஏரி மற்றும் நாகின் ஏரி ஆகியவை இப்பகுதியில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற ஏரிகளாகும்.
மேலும் இங்கிருக்கும் தச்சிகம் வனவிலங்கு சரணாலயம், குல்மார்க் உயிரிகோளம்,ஹெமிஸ் வனவிலங்கு பூங்கா, ஓவெரா தேசியப் பூங்கா ஆகியவை இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் புகழ்பெற்று விளங்குகின்றன.
சாகசப் பிரியர்களுக்கு பிடித்தமான மலையேற்றம், படகு சவாரி மட்டுமல்லாது பனிச்சறுக்கு போன்ற குளிர்கால விளையாட்டுகளிலும் இங்கு ஈடுபடலாம். பாட்னிடாப்குல்மார்க், க்ரிம்சி மற்றும் கிஷ்த்வார் ஆகிய இடங்கள் சாகச விளையாட்டுகளுக்கு புகழ்பெற்ற இடங்களாகும்.
பழங்கால கட்டிடங்கள், அரண்மனைகள் மற்றும் மலையேற்றத்திற்காக லடாக் பகுதி புகழ்பெற்று விளங்குகிறது. சர்ச்சைக்குரிய பாங்காக் ஏரி அமைந்திருக்கும் லடாக், கலாசாரத்திற்காகவும், மாற்றம் செய்யப்படாத இயற்கை அழகிற்காகவும் போற்றப்படுகிறது

டெல்லி

அன்றும் இன்றும் இந்தியாவின் சக்தி மையம்

மானுட வரலாற்றில் மஹோன்னதமான கலாச்சார செழுமையை கொண்டுள்ள - பல்வேறு ராஜவம்ச நாகரிகங்களின் தொட்டிலாக  விளங்கிய - பரந்த இந்திய தேசத்தில் சுற்றுலாப்பயணம் மேற்கொள்வதே ஒரு உன்னதமான அனுபவம் எனில், அதன் தலைநகரமாக விளங்கும் டெல்லி மாநகரத்துக்கு விஜயம் செய்வதும் ஒரு மறக்க முடியாத வாழ்நாள் அனுபவமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


டெல்லி புகைப்படங்கள் - டெல்லி புகைப்படங்களின் தொகுப்பு
பல அதிசயங்களை தன்னுள் பொதித்திருக்கும் அற்புத பொக்கிஷப்பெட்டி போன்று ‘புராதன’த்தையும் ‘நவீன’த்தையும் ஒருங்கே கொண்டுள்ள இந்த ‘டெல்லி’ மாநகரமானது அரசியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச பெருநகரங்களில் ஒன்றாக கம்பீரமாக வீற்றிருக்கிறது.
ஹிந்தியில் ‘டில்லி’ என்று உச்சரிக்கப்படும் ‘டெல்லி’ நகரமும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் என்.சி.டி (NCT – NATIONAL CAPITAL TERRITORY) எனப்படும் ‘தேசிய தலைநகர பிரதேசம்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒரு விசேட திருத்தம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 1991ம் ஆண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் தலைநகரமான புதுதில்லி நகரம் இந்த NCT பகுதியின்  அங்கமாக உள்ளது. இந்தியாவில் மும்பை மாநகரத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிக  மக்கள் தொகை கொண்ட மாநகரமாக டெல்லி விளங்குகிறது.
புது தில்லி மற்றும் பழைய டெல்லி என்ற இரண்டு நகர்ப்பகுதிகளை அடக்கியுள்ள டெல்லி நகரமானது அந்த பெயர்களுக்கேற்ப மஹோன்னதமான வரலாற்று அடையாளங்களையும், அசர வைக்கும் அதி நவீன அம்சங்களையும் தனது தனித்தன்மையான சிறப்பம்சமாக கொண்டு காட்சியளிக்கிறது.
மேலும் இது இந்திய வல்லரசின் அரசியல் செயல்பாடுகளுக்கான மையக்கேந்திரமாகவும் திகழ்கிறது. ஒவ்வொரு இந்திய சுற்றுலா ஆர்வலரும் தம் வாழ்நாளில் ஒருமுறை விஜயம் செய்தே ஆகவேண்டிய முக்கிய நகரங்களில் இந்த டெல்லி மாநகரமும் ஒன்று என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமேயில்லை.

புவியியல் அமைப்பும் பருவநிலையும்

இந்தியாவின் வடபகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 0 – 125 அடி உயரம் கொண்டதாக டெல்லி மாநகரம் வீற்றுள்ளது. கிழக்கில் உத்தரப்பிரதேச மாநிலத்தையும், தெற்கு, மேற்கு, வடக்கு பகுதிகளில் ஹரியாணா மாநிலத்தையும் இது எல்லைகளாக கொண்டுள்ளது. டெல்லி மலைத்தொடர்கள் மற்றும் யமுனை நதி படுகைப்பகுதி ஆகிய இரண்டும் டெல்லி நகரத்தின் புவியியல் அமைப்பில் முக்கிய இயற்கை அம்சங்களாக பிரதான இடம் வகிக்கின்றன.  யமுனை நதியானது டெல்லி நகரத்தின் வழியே ஓடும் பிரசித்தமான நதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

டெல்லி மாநகரின் பருவநிலை

ஈரப்பதம் நிறைந்த உபவெப்ப மண்டல பருவநிலையை டெல்லி மாநகரம் கொண்டுள்ளது. கோடைக்காலம் மிக நீண்டதாகவும் கடுமையான வெப்பம் மற்றும் ஈரப்பதத்துடனும் காணப்படுகிறது.
அதே சமயம் குளிர்காலம் உறைய வைக்கும் அபரிமிதமான குளிருடன் விளங்குகிறது.குளிர்கால மாதங்களில் டெல்லி முழுவதுமே பனிபடர்ந்து காட்சியளிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாத கடைசி வாரம் வரை இங்கு கோடைக்காலம் நீடிக்கிறது. அதைத்தொடர்ந்து ஜுன் முதல் அக்டோபர் வரை மழைக்காலம் நிலவுகிறது. மழைக்காலத்தை தொடர்ந்து டெல்லியின் மற்றொரு குண விசேஷமாக அறியப்படும் மிகக் கடுமையான குளிர்காலம் நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் வரை நீடிக்கிறது.

இந்திய தலைநகரத்தின் கலாச்சார செழுமை

பல முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் நடந்தேறிய  நீண்ட பின்னணியை கொண்டுள்ள டெல்லி மாநகரம் ஒரு ஆழமான வரலாற்று பரிணாமத்தின் மையப்புள்ளியாக விசேஷமான பன்முகத்தன்மை கொண்ட கலாச்சார அடையாளத்தை கொண்டதாக ஜொலிக்கிறது. 
வார்த்தைகளில் அடக்க முடியாத அளவுக்கு விரிவானதொரு கதம்ப கலாச்சாரத்தை  இந்த மாநகரம் தனித்தன்மையுடன் பிரதிபலிக்கிறது.  தீபாவளி, மஹாவீர் ஜயந்தி, ஹோலி, லோரி, கிருஷ்ண ஜன்மாஷ்டமி, குரு நானக் ஜயந்தி போன்ற திருவிழாக்கள் இந்த மாநகரத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இவை தவிர குதுப் திருவிழா, வசந்த் பஞ்சமி மற்றும் சர்வதேச புத்தக சந்தை, சர்வதேச மாம்பழ சந்தை போன்றவையும் குறிப்பிடத்தக்கவை.
முகாலயர்களின் உணவுக்கலாச்சாரம் உதித்த மண் என்பதால் இந்த நகரத்தில் கிடைக்கும் பெரும்பாலான உணவுத்தயாரிப்புகளில் முகலாயபாணி தயாரிப்பு முறையே காணப்படுகிறது.
இருப்பினும் வழக்கமான இந்திய பாரம்பரிய உணவுகளும் இங்கு தனித்தன்மையான சுவைகளில் மிகுதியாக கிடைக்கின்றன. கடாய் சிக்கன், பட்டர் சிக்கன், சாட் உணவுகள், ஜிலேபி, கச்சோரி மற்றும் லஸ்ஸி போன்றவை டெல்லி நகர மக்களின் முக்கிய உணவுப்பண்டங்களாக விளங்குகின்றன.

டெல்லி மாநகரத்தில் பார்க்க வேண்டிய இடங்கள்

கடந்து போன ஒரு மஹோன்னத வரலாற்றுக்காலத்தின் அழிக்க முடியாத பாதத் தடங்களாக டெல்லி மாநகரில் எண்ணற்ற கட்டிடங்களும், மாளிகைகளும், சின்னங்களும் நிரம்பி வழிகின்றன.
குதுப் மினார், செங்கோட்டை போன்ற அற்புத நிர்மாணங்களுடன் இந்தியா கேட், லோட்டஸ் டெம்பிள் எனப்படும் தாமரைக்கோயில், அக்ஷர்தாம் கோயில் போன்றவையும் இங்கு மிகப்பிரசித்தமான சுற்றுலா அம்சங்களாக பயணிகளை ஈர்க்கின்றன.
அது மட்டுமல்லாமல் உலகில் கிடைக்கும் எந்த ஒரு பொருளையும் வாங்கி விடலாம் என்று சொல்லும்படியான ‘ஷாப்பிங் செண்டர்’ என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.
வெறும் கலைப்பொருட்கள் ஆடைகள்  இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு சிறிய இயந்திரங்களிலிருந்து பெரிய இயந்திரங்கள் வரை பலவகையான தொழில் நுட்பம் சார்ந்த சாதனங்களும் இங்கு கிடைக்கின்றன.
இந்திய அரசியலின் தலைமைக்களமாக இருப்பது டெல்லி மாநகரத்தின் மற்றொரு முக்கிய சிறப்பம்சம் என்பதும் யாவரும் அறிந்ததே. இந்திய அரசியல் அமைப்பின் தூணாக விளங்கும் பாராளுமன்றம் எனப்படும் பார்லிமெண்ட் அல்லது மக்களவை கூடம், ராஷ்டிரபதி பவன்எனப்படும் ஜனாதிபதி மாளிகை போன்றவை அமைந்திருக்கும்  அரசியல் மையக்கேந்திரம் என்ற பெருமையையும் டெல்லி பெற்றுள்ளது.
மஹாத்மா காந்தி தகனம் செய்யப்பட்ட ராஜ்காட் எனும் ஸ்தலமும் டெல்லியில் விஜயம் செய்ய வேண்டிய முக்கியமான நினைவுத்தலமாக அமைந்துள்ளது.
இவைதான் இங்குள்ளன - என்று அறுதியிட்டு சொல்ல முடியாத அளவுக்கு ஏராளமான சுற்றுலாஸ்தலங்களும், வரலாற்றுச்சின்னங்களும் டெல்லி மாநகரம் முழுமையும் நிரம்பி காட்சியளிக்கின்றன.
சொல்லப்போனால் வரலாற்று கால இந்தியாவில் பல ராஜவம்சங்களின் தலைநகரமாக விளங்கிய இந்த மஹோன்னத பெருநகரம், இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களை போல அடையாளங்கள் அழிந்த ஒன்றாக காட்சியளிக்காமல் இன்றும் உயிர் வாழும் வரலாற்று நகரமாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.
இந்திய வரலாறு மற்றும் பாரம்பரியம் போன்றவற்றில் ஆர்வம் உள்ள ரசிகர்கள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய ஒரு முக்கிய நகரம் டெல்லி என்பதில் சந்தேகமே இல்லை.
செங்கோட்டை, குதுப் மினார் தவிர கலையம்சம் நிரம்பிய கல்லறை நினைவுச்சின்னங்கள், படிக்கிணறு, கம்பீர மாளிகைகள் போன்றவை இங்கு பயணிகளுக்காக காத்திருக்கின்றன.
உண்மையில் டெல்லி மாநகரம் பற்றிய விரிவான அல்லது சுருக்கமான அறிமுகத்தை தருவது இயலாத காரியம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இங்கு வரலாற்று யுகத்தின் சான்றுகளும் சின்னங்களும் காலத்தே நீடித்து நின்று கதைகள் பல சொல்கின்றன.
எனவே நேரில் பார்த்தால் மட்டுமே இதன் பழமையையும் இதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் எண்ணற்ற வரலாற்று சங்கதிகளையும் புரிந்துகொள்ள முடியும். டெல்லியை ஒருமுறை முழுதும் சுற்றிப்பார்த்துவிட்டு திரும்பும்போது உங்கள் மனதில் இந்தியாவைப்பற்றிய புதிய புரிதலுடனும்,  பெருமையுடனும் திரும்புவீர்கள் என்பது மட்டும் நிச்சயம்.

மேலும், இந்திய தேசத்தின் பிரமிக்க வைக்கும் வரலாற்று பொற்காலம் பற்றிய மலைப்பை ஒவ்வொரு சுற்றுலாப்பயணியின் மனதிலும் இந்த ‘டெல்லி மாநகரம்’ உண்டாக்க தவறுவதில்லை என்பதும் உண்மை.