ஆப்பிள் நிறுவனத்தின் புதிய திட்டம்!!!

சான் பிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவனம், புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்குத், நுகர்வோர்கள் இதுவரை காணவியலாத, சுரங்க தொழில் ஈடுப்பட அசெம்ப்ளி ரோபோக்களை தயாரிக்க சுமார் 10.5 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்து புதிய சரித்திரம் படைத்துள்ளது.
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் போன்ற போட்டி நிறுவனங்களை முந்தும் நோக்கில், புதிய உற்பத்திப் பொருட்களுக்கான அடித்தளத்தை அமைப்பதில் மும்முரமாக இருக்கும் ஆப்பிள் நிறுவனம், ஐபோன்கள், ஐபேட்கள் மற்றும் இதர சாதனங்களை உற்பத்தி செய்வதின் பின்னணியில் இயங்கக்கூடிய இயந்திரங்களுக்கென அதிக அளவில் செலவு செய்து வருகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய திட்டம்!!!
புதிய ஐபோனாகிய 5சி -யின் வண்ணமயமான பிளாஸ்டிக், லேசர் ஆகியவற்றை பாலிஷ் செய்யக்கூடிய சாதனம், மேக் புக்கின் அலுமினிய அமைப்பை செதுக்கக்கூடிய அரவை இயந்திரங்கள், ஐபோன் மற்றும் ஐபேட் கேமரா லென்ஸ்களுக்கான டெஸ்டிங் கியர் போன்றவை இந்த இயந்திரங்களுள் சில, இந்நிறுவனத்தின் மிகப் பிரத்யேகமான உற்பத்தி செயல்பாடுகளைப் பற்றி நன்கு அறிந்த சில உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் ஆப்பிள் நிறுவனம் இத்தாலியில் வரி மோசடி குற்றச்சாட்டின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இத்தாலிய வரி அதிகாரியிடமிருந்து சுமார் 1 பில்லியன் யூரோவுக்கு (1.34 மில்லியன் டாலர்) மேற்பட்ட தொகையை மறைத்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆப்பிள் நிறுவனம், மிலனில் (Milan) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

கிராமங்களில் குட்டி வங்கி!!!: கரூர் வைஸ்யா வங்கியின் சூப்பர் திட்டம்..

 கரூர் வைஸ்யா வங்கி, கரூர் மாவட்டத்தின் பாலராஜாபுரம் என்னும் கிராமத்தில் தனது முதல் மிக சிறிய கிளையை திறந்ததுள்ளது.
இக்கிளையை ஆர்.பி.ஐயின் மன்டல தலைமை அதிகாரி ஜே. சடக்துள்ளா திறந்து வைத்தார். மேலும் இந்த வங்கியில் அடிப்படை வங்கி சேவைகளை அளிக்க கரூர் வைஸ்யா வங்கி திட்டமிட்டுள்ளது நாளிடையில் தேவைக்கு ஏற்ப வங்கி சேவைகளும் அதிகரிக்கப்படும் என அவ்வங்கியின் முத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கே.வி.பி.-யின் உயர் அதிகாரி திரு வெங்கட்ராமன் கூறுகையில் "இச் சிறிய கிளை வங்கியில் (ultra small branch) வர்த்தக தேவை அதிகரிக்க பொழுது இவ்வங்கி முழு செயல்ப்பாட்டுடன் செயல்படும்" என அவர் தெரிவித்தார்.
கரூர் வைஸ்யா வங்கி இத்தகைய சிறிய வங்கிகளை நடப்பு நிதியாண்டில் 28 கிளைகளை திறக்கவும், அடுத்த ஆண்டில் மேலும் 24 கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தின் முலம் சுமார் 117 கிராமங்களுக்கு வங்கி சேவையை அளிக்க இவ்வங்கி திட்டமிட்டுள்ளது. (கிராம மக்களுக்கு அது கண்டிப்பாக உதவும், நன்றி கே.வி.பி)
இத்திட்டத்தை பற்றி மேலும் திரு. வெங்கட்ராமன் கூறுகையில் "இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தின் அனைத்து கிராமங்களையும் எங்கள் வங்கி சேவை சென்றடைந்தது. இதன் விளைவாக சுமார் 37,579 வங்கி கணக்குகள் பையோமெட்ரிக் கார்டுகளின் மூலம் திறக்கப்பட்டது" என அவர் மிகுந்த மிகிழ்ச்சியுடன் தெரிவித்தார்

குழந்தைகளுக்கு பணத்தின் முக்கியதுவத்தை உணர்த்துவது சரியா??..

ஒவ்வொரு மனிதனுக்கும் தனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள பணம் தேவை. அதுவும் இன்றைய வாழ்வியல் முறையில் பணத்தின் தேவை பன்மடங்கு உயர்ந்துள்ளது.அதனாலேயே பணம் ஒரு இன்றியமையாத படைப்பாக திகழ்கிறது. ஒரு பெற்றோர் அல்லது காப்பாளர் குழந்தைகளுக்கு தரும் பரிசு வாழ்நாள் முழுவதும் பயன்தரக்கூடிய, ஒரு சிறந்த அன்பளிப்பு எதுவென்றால் அது அவர்களுக்கு பணம் குறித்த அறிவை புகட்டுவது தான்.
இன்றைய குழந்தைகளுக்கு பணத்தின் முக்கியதுவம் தெரிந்த அளவிற்கு அதனை பாதுகாக்க தெரிவதில்லை அதை உணர்த்துவது பெற்றோர்களின் தலையாயக் கடமையாகும். அவர்கள் வயதினையும் புரிந்துகொள்ளும் திறனையும் பொறுத்து பணம் பற்றிய உங்கள் அறிவாற்றலை அவர்கள் அறிந்துகொள்ளச் செய்யலாம். இது அவர்களின் வாழ்வின் பல கட்டங்களில் உதவும்.

பணத்தின் தேவை!!

பணம் பற்றிய அறிவை அவர்களுக்கு புகட்டுவதில் முதற்கட்டமாக பணம் ஏன் தேவைப்படுகிறது என்று விளக்கினால் அதை அவர்கள் காலப்போக்கில் புரிந்துகொள்வார்கள்.

ஆடம்பர செலவுகள்

பணத்தின் முக்கியத்துவத்தையும் ஆடம்பரங்களை முற்றிலும் ஒதுக்குவதையும் தகுந்த உதாரணங்களோடு குழந்தைகள் மனதில் பதியவைத்தால் அது அவர்கள் மனதில் நன்கு பதியும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

சன்மானம்!!..

பணத்தின் அருமையை புரியவைக்க உதாரணமாக ஒரு நூறு ருபாய் தற்போது இருப்பதை விட கடந்தகாலங்களில் எவ்வளவு மதிப்புடன் இருந்தது என்பதை விளக்கலாம். இதே வேளையில், அவர்கள் செலவுக்காக, சிறு வீட்டுவேலைகளை செய்ய வைத்து அதற்கு சன்மானமாக பணத்தை கொடுத்து ஊக்கப்படுத்தலாம். இதன் மூலம் பணம் நன்கு உழைத்தால் மட்டுமே கிடைக்கும் என்ற உண்மையை உணரத்தொடங்குவார்கள்



2013ஆம் ஆண்டுக்குள் 8000 கிளைகள் துவக்கம் : அரசு வங்கிகள் இலக்கு

டெல்லி, ஜூலை 03 (டி.என்.எஸ்) இந்தியாவில் அரசு நடத்தும் வங்கிகள் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 8000 கிளைகளை துவக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு மத்திய அரசு அளிக்கும் பல்வேறு மானியத் தொகைகளை, நேரடியாக அவர்களது வங்கிக் கணக்குகளிலேயே பரிமாற்றம் செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் அதாவது 1.2 பில்லியன் மக்கள் இதுவரை வங்கிச் சேவையைப் பெறவில்லை. எனவே, கிராமப் பகுதி மக்களுக்கும் வங்கிச் சேவை கிடைக்கும் வகையில் அரசு நடத்தும் வங்கியின் கிளைகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார். (டி.என்.எஸ்)

விமான போக்குவரத்தில் அடியெடுத்து வைக்கும் டாடா சன்ஸ்

டெல்லி, ஜூலை 01 (டி.என்.எஸ்) இந்தியாவில் விமான போக்குவரத்துத் துறையில் சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு டாடா சன்ஸ் நிறுவனம் மீண்டும் நுழைகிறது.

குறைந்த கட்டணத்தில் விமான சேவையை இந்தியாவில் துவக்க உள்ளது ஏர் ஏசியா நிறுவனம். இதற்காக, அனுமதி மற்றும் விமானப் போக்குவரத்துக்கான சான்றிதழையும் பெற காத்திருக்கிறது ஏர் ஏசியா.

ஏர் ஏசியா மற்றும் டாடா சன்ஸ் இணைந்து இந்த சேவையை செய்ய உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் விமான சேவை துவக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (டி.என்.எஸ்)

நோக்கியா ஆஷா 501 ஸ்மார் ஃபோன் அறிமுகம்

சென்னை, ஜூலை 02 (டி.என்.எஸ்) முன்னணி செல்போன்கள் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா, புதிய ஆஷா தளத்தில் இயங்கும் அடுத்த தலைமுறைக்கான 'ஆஷா 501' என்ற புதிய ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய போனின் அறிமுக விழா இன்று (ஜூலை 2) சென்னையில் நடைபெற்றது. இதில் நோக்கியா நிறுவனத்தின் தென் பிராந்தியப் பொது மேலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் கலந்துகொண்டு ஆஷா 501 போனை அறிமுகப்படுத்தினார்.

ப்ரைட் ரெட், மஞ்சள், வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய வண்ணங்களில் இந்த போன் வெளியிடப்பட்டுள்ளது.

98 கிராம் எடை கொண்ட இந்த போனின் கேகரா 3.2 எம்.பி, இரட்டை சிம் ஸ்டாண்ட்பை டைம் - 26 நாட்கள் வரை, டாக் டைம்-17 மணி நேரம் வரை, கூடுதல் மெமரி 4ஜிபி (கார்ட் இன் பாக்ஸ்), 32 ஜிபி வரை விரிவுபடுத்தும் வசதி, 40 இலவச இஏ கேம்ஸ் கிஃப்ட் பேக், 50 ப்ரீலோட் அப்ளிகேஷன்ஸ், ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மாதங்களுக்கான இலவச முகநூல், 4 ஜிபி மைரோ எஸ்டி கார்ட் இன் பாக்ஸ் ஆகிய அம்சங்கள் கொண்ட இந்த போனின் விலை ரூ.5199 ஆகும்.

இந்த புதிய நோக்கியா ஆஷா 501 போனை அறிமுகப்படுத்தி பேசிய, நோக்கியா நிறுவனத்தின் தென் பிராந்தியப் பொது மேலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் பேசுகையில், "அனைவருக்கும் ஏற்ற விலையில், கண்கவர் வண்ணத்தில், கவர்ச்சியான வடிவமைப்பில், அதிசயிக்கத்தக்க நம்ப முடியாத விலையில் நோக்கிய ஆஷா 501 அறிமுகமாகி உள்ளது. உங்களுக்குப் பிடித்தமான கடந்த, நிகழ் மற்றும் எதிர்கால அம்சங்களுக்கு இதில் பொருத்தப்பட்டுள்ள ஃபாஸ்ட்லேன் தொழில்நுட்பம் உதவும். புதிய விலையில், உயரிய தரத்தில், நவீன தொழிநுட்பங்களை வாடிக்கையாளர் விருப்பங்களுக்கேற்ப வழங்குவதைக் கொள்கையாக வைத்துள்ளோம். அந்த வகையில் நோக்கியா ஆஷா 501 புதிய கோணத்தையும், புத்துணர்ச்சியையும் அளிக்கும் என நம்புகிறோம்." என்று தெரிவித்தார்.  (டி.என்.எஸ்)
Jul 02, 2013

என்.ஆர்.ஐ என்றால் என்.ஆர்.இ. அல்லது என்.ஆர்.ஓ. சேமிப்பு கணக்கு தான் வைத்திருக்கணும்

சென்னை: நீங்கள் ஒரு வெளிநாடு வாழ் இந்தியராக இருப்பின் இந்தியாவில் வசிக்கும் குடிமகன்களைப் போன்று டொமஸ்டிக் ரெசிடன்ட் சேமிப்பு கணக்கை பராமரித்து வருவீர்களானால் அது சட்ட விரோதமானது என அறிவீர்களா?. ஒவ்வொரு வெளிநாடு வாழ் இந்தியரும் இந்தியாவில் ஒரு என்ஆர்இ அல்லது என்ஆர்ஓ கணக்கை மட்டுமே வைத்திருக்க வேண்டும்.

நீங்கள் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் பொழுது, நீங்கள் அதை உங்கள் வங்கிக்கு தெரிவித்து, உங்களுடைய டொமஸ்டிக் ரெசிடன்ட் சேமிப்பு கணக்கை என்ஆர்ஓ கணக்காக மாற்றிக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லையெனில் நீங்கள் ஒரு தகுதி பெற்ற வெளிநாடு வாழ் இந்தியர் எனில் அது உங்களுக்கு ஆபத்தாக முடியும்.
நினைவில் வைத்து கொள்ளுங்கள், சேமிப்பு கணக்கின் நிலையை மாற்றும் பொறுப்பு உங்களை சார்ந்தது, வங்கியுடையது அல்ல. மேலும், என்ஆர்ஓ கணக்குகளுக்கு டிடிஎஸ் வரியின் அளவு டொமஸ்டிக் ரெசிடன்ட் சேமிப்பு கணக்கிலிருந்து கழிக்கப்படும் வரியின் அளவை விட மிக அதிகம். எனவே, வெளிநாடு வாழ் இந்தியர்கள் டொமஸ்டிக் ரெசிடன்ட் சேமிப்பு கணக்கை பராமரிப்பது குறைவான வரி செலுத்துவதற்கு செய்யும் ஏற்பாடாக கருதப்படும். இது வரி ஏய்ப்பு போன்றது. இந்தியாவில், இரட்டை குடியுரிமை வசதி இல்லை. எனவே அனைத்து வெளிநாடு வாழ் இந்தியர்களின் டொமஸ்டிக் ரெசிடன்ட் சேமிப்பு கணக்கும் என்ஆர்இ அல்லது என்ஆர்ஓ கணக்காக மாற்றப்பட வேண்டும்.

நீங்கள் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் என்பது எப்படி தெரியும்?

இந்தியாவின் அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999 (எஃப்இஎம்ஏ) படி, ஒரு இந்திய குடிமகன் அல்லது இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வெளிநாட்டவர் வெளிநாடுகளில் வேலை நிமித்தமாகவோ, வியாபார நோக்கமாகவோ, விடுமுறைக்காகவோ நீண்ட காலம் தங்க முற்படும் பொழுது, வெளிநாடு வாழ் இந்தியர் என்கிற தகுதியை பெறுகிறார்.
ஒரு தனி நபர் முந்தைய நிதி ஆண்டில் இந்தியாவில் 182 நாட்களுக்கும் குறைவாக தங்கி இருந்தார் எனில் அவரை ஒரு வெளிநாடு வாழ் இந்தியராக கருத முடியும். எனவே, நீங்கள் 182 நாட்களுக்கும் மேலாக வெளிநாட்டில் தங்கி இருந்தால், மேலே கூறிய வரையறை படி நீங்களும் ஒரு வெளிநாடு வாழ் இந்தியராக கருதப்படுவீர்கள். மேலே கூறிய அளவுகோல்கள் உங்களுக்கு பொருந்துமெனில் நீங்கள் இன்னும் உங்கள் வங்கிக் கணக்கை மாற்றாமல் வைத்திருந்தால் அதை முதலில் என்ஆர்ஓ அல்லது என்ஆர்இ கணக்காக மாற்ற இதுவே சரியான நேரம் ஆகும்.

ஐடி சட்டப்படி ரெசிடன்ட் இந்தியன், நான் ரெசிடன்ட் இந்தியன் என்றால் என்ன?

சென்னை: இந்தியாவில் ஒருவரது வாழ்நிலையானது (residential status) அவர் தங்கியிருந்த நாட்களை அடிப்படையாக வைத்து முடிவு செய்யப்படுகிறது.
இந்திய வருமானவரிச் சட்டத்தின் அடிப்படையில் இந்தியாவில் வாழும் இந்தியர் (ரெசிடன்ட் இந்தியன்), இந்தியாவில் எப்பொழுதாவது வசிக்கும் இந்தியர் (Not Ordinarily Resident), வெளிநாடு வாழ் இந்தியர் (என்.ஆர்.ஐ.) என்னும் வகைப்பாடுகளின் பொருளை அறிந்து கொள்வோம்.
இந்தியாவில் வாழும் இந்தியர்(ரெசிடென்ட் இந்தியன்):
ஒரு நபர் ரெசிடென்ட் இந்தியன் என்று வகைப்படுத்தப்பட பின் வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
1. அவர் நடப்பாண்டில் தொடர்ச்சியாகவோ விட்டுவிட்டோ மொத்தமாக 60 நாட்களுக்கு மேல் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும். (மற்றும்)
2. கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் ஆண்டிற்கு முதல் ஆண்டில் தொடர்ச்சியாகவோ விட்டுவிட்டோ மொத்தமாக 182 நாட்களுக்கு மேல் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும். (அல்லது)
கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் ஆண்டிற்கு முந்தைய 4 ஆண்டுகளில் தொடர்ச்சியாகவோ விட்டுவிட்டோ மொத்தமாக 365 நாட்களுக்கு மேல் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும்.
கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் ஆண்டிற்கு முதல் ஆண்டில் கட்டுப்பாடும் நிர்வாகமும் முழுமையுமாக இந்தியாவிற்கு வெளியில் அமைந்திருந்த ஒரு இந்து கூட்டுக் குடும்பம் அல்லது ஒரு நிறுவனம் அல்லது பல மனிதர்கள் சேர்ந்த அமைப்பு ஆகியவை ரெசிடென்ட் இந்தியன்என்னும் தகுதியைப் பெற இயலாது. இது போன்று இல்லாது கட்டுப்பாடும் நிர்வாகமும் முழுமையுமாக இந்தியாவிற்குள்ளேயே அமைந்திருந்த மேற்படி அமைப்புகள் ரெசிடென்ட் இந்தியன் என்னும் வகைப்பாட்டிற்குள் வரும்.
இந்தியாவில் எப்பொழுதாவது வசிக்கும் இந்தியர் (Not Ordinarily Resident):
ஒரு நபர் இந்தியாவில் எப்பொழுதாவது வசிக்கும் இந்தியர் என்று வகைப்படுத்தப்பட பின் வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
1. அவர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் ஆண்டிற்கு முந்தைய 10 ஆண்டுகளில் 9 ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருக்கக் கூடாது.
(அல்லது)
கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் ஆண்டிற்கு முந்தைய 7 ஆண்டுகளில் தொடர்ச்சியாகவோ விட்டுவிட்டோ மொத்தமாக 729 நாட்களோ அல்லது அதற்குக் குறைவாகவோ இந்தியாவில் வசித்திருக்க வேண்டும்.
2. ஒரு இந்து கூட்டுக் குடும்பம் ஒன்று இந்தியாவில் எப்பொழுதாவது வசிக்கும் இந்தியர் (Not Ordinarily Resident) என்று வகைப்படுத்தப்பட அதன் மேனேஜர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் ஆண்டிற்கு முந்தைய 10 ஆண்டுகளில் 9 ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருக்கக் கூடாது.
(அல்லது)
அதன் மேனேஜர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் ஆண்டிற்கு முந்தைய 7 ஆண்டுகளில் தொடர்ச்சியாகவோ விட்டுவிட்டோ மொத்தமாக 729 நாட்களோ அல்லது அதற்குக் குறைவாகவோ இந்தியாவில் வசித்திருக்க வேண்டும்.
வெளிநாடு வாழ் இந்தியர் (என்ஆர்ஐ):
1. 1999 ஆம் ஆண்டு அந்நியச் செலாவணி நிர்வாகச் சட்டத்தின்படி வெளிநாடு வாழ் இந்தியர் என்பவர் இந்தியக் குடிமகனாகவோ, இந்திய வம்சாவளியினரான வெளிநாட்டவராகவோ இருக்க வேண்டும்.
(மற்றும்)
பணிக்காகவோ, தொழில் அல்லது வர்த்தகத்தில் ஈடுபடவோ, இந்தியாவை விட்டு வெளியில் தங்க வேண்டும் என்னும் நிச்சயமான எண்ணத்தில் இந்தியாவை விட்டு வரையறுக்கப்படாத காலத்திற்கு வெளிநாடுகளில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
2. முந்தைய நிதி ஆண்டில் 182 நாட்களுக்குக் குறைவாக இந்தியாவில் வசித்துள்ள ஒரு இந்தியத் தனிநபர் வெளிநாடு வாழ் இந்தியர் என்று வகைப்படுத்தப்படுவார்.
இந்திய வம்சாவளியினர் (Person of Indian Origin):
இந்தியக் குடிமகன் அல்லாத ஒரு நபர் இந்திய வம்சாவளியினைச் சேர்ந்தவர் என்று வகைப்படுத்தப்பட பின் வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
1. அவர் பாகிஸ்தான் அல்லது வங்கதேசத்தின் குடிமகனாக இருக்கக் கூடாது.
(மற்றும்)
அவர் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்
(அல்லது)
அவரோ, அவரது பெற்றோரில் ஒருவரோ அல்லது அவரது ஒரு பாட்டனோ பாட்டியோ 1955 ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் இந்தியக் குடிமகனாக இருந்திருத்தல் வேண்டும்.
ஒரு இந்தியக் குடிமகன் அல்லது இந்திய வம்சாவளியினைச் சேர்ந்தவர் ஒருவரது கணவர்/மனைவி (பாகிஸ்தான் அல்லது வங்கதேசத்தின் குடிமகனாக இருக்கக் கூடாது) அவர் இந்திய வம்சாவளியினைச் சேர்ந்தவர் என்று கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்டு, கணவர்/மனைவியோடு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வைப்புக் கணக்குகளை இருவரும் சேர்ந்து இயக்க அனுமதிக்கப்படுவார்.
இந்திய வம்சாவளியினரும் வெளிநாடு வாழ் இந்தியர்களைப் போலவே இந்தியாவில் வங்கிக் கணக்குகளைத் தொடங்கி இயக்க அனுமதிக்கப்பட்டு இக்காரணத்துக்காக, அவர்கள் வெளிநாடு வாழ் இந்தியர் என்றே குறிப்பிடப்படுவர்.

உணவில் சேர்க்கும் இந்திய மசாலாப் பொருட்களின் நன்மைகள்!!!

இந்தியாவில் உணவுகளின் சுவைக்காக சேர்க்கப்படும் மசாலாப் பொருட்களில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இத்தகைய பொருட்களை உப்பிற்கு பதிலாகவும் சேர்க்கலாம். பொதுவாக இந்த பொருட்கள் பிரியாணிகளின் அதிகம் சேர்க்கப்படும். பெரும்பாலானோர், இவற்றை வெறும் வாசனைப் பொருளாகவும், காரத்திற்கு சேர்க்கும் மசாலாப் பொருளாகவும் மட்டும் தான் பார்க்கின்றனர்.ஆனால் இத்தகைய மசாலாப் பொருட்களை அளவாக உணவில் அவ்வப்போது சேர்த்து வந்தால், நிறைய நன்மைகளைப் பெறலாம். அதுவே நன்மை அதிகம் உள்ளது என்று அளவுக்கு அதிகம் சாப்பிட்டால், பின் செரிமானப் பிரச்சனை அல்லது சில சமயங்களில் அல்சர் போன்றவை கூட ஏற்படும்.சரி, இப்போது உணவில் வாசனைக்காகவும், காரத்திற்காகவும் சேர்க்கும் ஒவ்வொரு மசாலாப் பொருட்களின் நன்மைகளைப் பற்றிப் பார்ப்போமா!!!

 
பட்டை
 
இந்த நறுமணப் பொருளை உணவில் சேர்த்தால் ஒரு சூப்பரான சுவையைப் பெறலாம். பொதுவாக இதனை குழம்பு, புலாவ், பிரியாணி போன்றவற்றில் பயன்படுத்துவார்கள். இந்த பொருள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதனை அவர்கள் சாப்பிட்டால், அளவுக்கு அதிகமாக இன்சுலின் சுரப்பதை தடுத்து, தேவையான அளவை மட்டும் சுரக்கும். மேலும் இதனை சாப்பிட்டால், செரிமான பிரச்சனை, இருமல், வயிற்றுப் போக்கு, மோசமான இரத்த சுழற்சி, மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் டென்சன் போன்றவை சரியாகும்.
 
கிராம்பு
 
 இந்தியாவில் உள்ள அனைவருக்குமே கிராம்பை நன்கு தெரியும். அதிலும் இதனை உணவில் வாசனைக்காக சேர்ப்பதோடு, பல் பிரச்சனைகளை குணப்படுத்தும் ஒரு சிறந்த பொருளும் கூட. மேலும் அளவுக்கு அதிகமாக உணவை சாப்பிட்டோ மற்றும் ஆல்கஹால் அருந்தியோ அவஸ்தைப்படுவோர், ஒரு கிராம்பை எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் சரிசெய்துவிடும். கிராம்பு வாந்தி, செரிமானப் பிரச்சனை, வயிற்றுப் போக்கு போன்றவற்றையும் குணமாக்கும்.
 
சீரகம்
 
பெரும்பாலான உணவுகளில் சீரகம் சேர்க்காமல் சமைக்கமாட்டார்கள். சீரகம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் ஒரு பொருள். அதுமட்டுமின்றி, இது செரிமானப் பிரச்சனை, அனீமியா, இருமல், பைல்ஸ் மற்றும் அதிகமான இரத்த அழுத்தம் போன்றவற்றை சரிசெய்யும்.
 
கருப்பு ஏலக்காய்
 
 கருப்பு ஏலக்காய் வேறு, பச்சை ஏலக்காய் வேறு. பொதுவாக இந்த கருப்பு ஏலக்காய் புலாவ் மற்றும் பிரியாணிகளில் தான் பயன்படுத்துவார்கள். ஏனெனில் பிரியாணிகளில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதால், வயிறு உப்புசத்துடன் இருக்கும். எனவே இந்த கருப்பு ஏலக்காய் சேர்த்தால், அந்த பிரச்சனை வராமல் இருக்கும். மேலும் இந்த கருப்பு ஏலக்காய் தொண்டை பிரச்சனை, நெஞ்செரிச்சல், ஈறு பிரச்சனை போன்றவற்றிலிருந்து விடுபட வைக்கும். கருப்பு ஏலக்காய் ஆஸ்துமாவால் அவஸ்தைப்படுவோருக்கு நல்ல நிவாணம் தரும்.
 
குங்குமப்பூ
 
 பொலிவான சரும அழகைத் தரும் குங்குமப்பூ, பொதுவாக நிறத்திற்காக சேர்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக பிரியாணி, இனிப்பு பதார்த்தங்கள் போன்றவற்றில் தான் பயன்படுகிறது. குங்குமப்பூ மிகவும் விலை மதிப்புள்ளது. அதற்கேற்றாற் போல், இதன் நன்மைகளும் எண்ணற்றவை. ஏனெனில் குங்குமப்பூ அழகிற்கு பயன்படுவதோடு, உடலல் நலத்தில் மன இறுக்கம், மன அழுத்தம், பார்வை கோளாறு மற்றும் ஞாபக சக்தி போன்றவற்றை சீராக வைக்கவும் உதவுகிறது.
 
ஜாதிக்காய்
 
 இதுவும் கிராம்பு போன்ற ஒரு நறுமணப் பொருள் தான். இதுவும் பல் பிரச்சனை, அல்சீமியர் போன்றவற்றை சரிசெய்வதோடு, ஞாபக சக்தியையும் அதிகரிக்கிறது. மேலும் இது பசியின்மையை போக்கும் ஒரு சிறந்த பொருளும் கூட. பெரும்பாலும் இது நிறைய நாட்டு மருந்துகளில் பயன்படுகிறது.

மிளகு 
 
அனைவருக்குமே மிளகு எவ்வளவு காரமாக உள்ளது என்பது தெரியும். இத்தகைய மிளகு உணவுக்கு சுவையையும், காரத்தையும் கொடுப்பதோடு, உடலில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் உற்பத்தியை அதிகரித்து, செரிமானத்திற்கு பெரிதும் துணைபுரிகிறது. மேலும் இருமல், தொண்டை கரகரப்பு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டாலும், மிளகு ஒரு நல்ல தீர்வைத் தரும்.
 
பெருங்காயம்
 
 பெருங்காயத்தில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இது ஒரு சிறந்த வாசனைப் பொருளாக இருப்பதோடு, செரிமான மண்டலத்தில் இருக்கும் பிரச்சனையையும் சரிசெய்துவிடும் தன்மையுடையது. மேலும் இது பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளான மலட்டுத்தன்மை, தேவையற்ற கருக்கலைப்பு, குறைபிரசவம், வழக்கத்திற்கு மாறான வலி மற்றும் அதிகப்படியான இரத்தப் போக்கு போன்ற பல பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது.

 
 



 
 

 


 


 


 




என்ன பண்ணாலும் தொப்பை குறையவில்லையா? கூலா இருங்க

பொதுவாக உடல் எடை அதிகமாவதற்கு, உண்ணும் முறையும் பழக்கவழக்கங்களும் தான் பெரும் காரணம். இதற்கு நாவை சரியாக கட்டுப்படுத்த முடியாததே ஆகும். இதனால் எந்த ஒரு உணவை பார்த்ததும், மனம் அலை பாய்ந்து, அதனை சாப்பிட தூண்டி, அதனை சாப்பிட்டால் என்ன தீமை ஏற்படும் என்பதை யோசிக்காமல் சாப்பிட்டு விடுகிறோம். அதற்காக சாப்பிடவே கூடாது என்று சொல்லவில்லை. சாப்பிட வேண்டும், ஆனால் கட்டுப்பாடும் வேண்டும்.சிலர் உடல் எடையை குறைப்பதற்கு கடுமையான டயட்டை மேற்கொள்வார்கள். அவ்வாறு கடுமையான டயட்டையும், கடுமையான உடற்பயிற்சியையும் செய்தால் மட்டும் உடல் எடை குறையாது. அதற்கு எப்போதும் ஒரே மாதிரியான செயல்களையும், உணவுப் பழக்கவழக்கங்களையும் மேற்கொள்ள வேண்டும். சொல்லப்போனால், எப்படி தொப்பையானது ஒருசில உணவுகளை சாப்பிடுவதால் வருகிறதோ, அதேப் போல் தொப்பையை குறைக்கவும் ஒருசில உணவுகள் உள்ளன. அத்தகைய உணவுகள் என்னவென்று தெரிந்து, அதனை சாப்பிட்டு வந்தால், நிச்சயம் உடல் எடையானது குறைவதோடு, தொப்பையும் கரையும்.மேலும் உடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கு உணவுகளை சாப்பிட்டால் மட்டும் போதாது. அவற்றை சாப்பிடும் போது மனதில் நம்பிக்கையும் வேண்டும். அதைவிட்டு சொல்கிறார்கள் என்பதற்காக சாப்பிட்டால், உடல் எடை குறையாமல் அதிகம் தான் ஆகும். எனவே சரியான நம்பிக்கையுடன், கீழே கொடுத்துள்ள உணவுகளையும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடையுடன், தொப்பை குறைந்து, அழகாக காணப்படுவீர்கள். சரி, அந்த உணவுகளைப் பார்ப்போமா!!!
 
க்ரீன் டீ
 
க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மட்டுமின்றி, கொழுப்புக்களை கரைக்கும் பொருள் உள்ளது என்று பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், க்ரீன் டீயை தினமும் காலையில் குடித்து வந்தால், நல்லது பலனைப் பெறலாம்.
 
பீன்ஸ்
 
 பீன்ஸ் வகைகளில் கருப்பு பீன்ஸ், காராமணி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. பொதுவாக நார்ச்சத்துள்ள உணவுகள், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, தேவையற்ற கொழுப்புக்களையும் கரைத்து விடும். மேலும் இதனை சாப்பிட்டால், அடிக்கடி பசியும் எடுக்காமலும் இருக்கும்.
ஆப்பிள்
 
ஆப்பிள் உள்ள பெக்டின் என்னும் பொருள், உடலுக்கு வேண்டிய கொழுப்புக்களை மட்டும் தங்க வைத்து, மீதமுள்ள கெட்ட கொழுப்புக்களை, உடலில் இருந்து வெளியேற்றிவிடும். இதனால் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வர, தொப்பையும் குறையும்.
 
அவகேடோ
 
உடலில் உள்ள தொப்பை குறைப்பதற்கு சிறந்த உணவுகளுள் அவகேடோவும் ஒன்று. இந்த பழத்தில் உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதற்கான இரண்டு முக்கியப் பொருட்களான நார்ச்சத்து மற்றும் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளன. மேலும் ஆய்வுகள் ஒன்றிலும் இந்த பழத்தை சாப்பிட்டால், நிச்சயம் உடலில் உள்ள

 


 



 

அடுத்த பிரதமர் யார்? : கருத்து கணிப்பில் மோடிக்கு முதலிடம், ராகுலுக்கு இரண்டாம் இடம்

டெல்லி, மார்ச். (டி.என்.எஸ்) இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்வியோடு தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய கருத்து கணிப்பில் பா.ஜ.க கூட்டணி சார்பில் பிரதமர் பதவிக்கு நிறுத்தப்படவுள்ள மோடிக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. அதே சமயம் காங்கிரஸ் கட்சி பெரிதும் நம்பியிருக்கும் ராகுல் காந்திக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

விரைவில் வர உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக, காங்கிரஸ் கூட்டணியும், பா.ஜ.க கூட்டணியும் பரபரப்பாக களத்தில் இயங்கி வருகிறது. இதில் காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் வேட்பாளராக ராகுல் காந்தி நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. அக்கட்சியின் மூத்த தலைவர்களும் அதற்கு பச்சைக்கொடி காட்டி வருகிறார்கள். அதேபோல் பா.ஜ.க சார்பில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேர்தல் வேட்பாளராக களம் இறக்கப்படலாம் என்றும், அதற்கு பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும் விப்பமும் தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில் `அடுத்த பிரதமர் யார்?' என்ற கருத்து கணிப்பை தனியார் நிறுவனம் ஒன்று சமீபத்தில் நடத்தியது. பிரதமர் பதவிக்கு யார் பொருத்தமானவர் என்று கேள்வி கேட்கப்பட்டது.

மன்மோகன்சிங், சோனியா, அத்வானி, நரேந்திர மோடி, ராகுல் உள்பட சிலரது பெயர்களும் கொடுக்கப்பட்டன. கருத்து கணிப்புகளில் பங்கேற்றவர்கள் இந்த பெயர்களில் இருந்து ஒருவரை தேர்வு செய்ய கூறப்பட்டிருந்தனர். கருத்துக்கணிப்பு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி 43 சதவீதம் பேரின் ஆதரவை பெற்று முதல் இடத்தை பிடித்தார்.

சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, லக்னோ நகரங்களில் நரேந்திர மோடிக்கு அபரிமிதமான மக்கள் ஆதரவு கிடைத்திருக்கிறது. பெண்களை விட ஆண்கள்தான் நரேந்திரமோடிக்கு அதிக ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு கருத்து கணிப்பில் 2வது இடமே கிடைத்துள்ளது.

இந்திய நகரங்களில் பெங்களூரில் மட்டுமே ராகுல்காந்திக்கு ஆதரவு உள்ளது என்றும், மற்ற அனைத்து நகரங்களிலும் ராகுலுக்கு எதிர்ப்பு அலையே காணப்படுகிறது என்று தெரிவித்துள்ள தனியார் நிறுவனம், ராகுலுக்கு ஆண்களை விட பெண்களிடம் அதிக ஆதரவு இருப்பது கூறியுள்ளது. (டி.என்.எஸ்)

வினோதினி உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி... திருக்கடையூரில் உடல் தகனம்



நாகப்பட்டனம்: ஒருதலையாய் காதலித்த தறுதலை ஆசிட் வீசியதில் தனது வாழ்க்கையை இழந்து கடைசியில் உயிரையும் பறிகொடுத்த வினோதினியின் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் இன்று நாகை மாவட்டம் திருக்கடையூரில் இன்று தகனம் செய்யப்பட்டது.
காரைக்கால் எம்.எம்.ஜி. நகர் என்ஜினீயர்ஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஒரே மகள் வினோதினி (23). காரைக் காலில் உள்ள காமராஜர் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் (தகவல் தொழில் நுட்பம்) பட்டம் பெற்றார்.
வினோதினிக்கு சென்னை சைதாப்பேட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. சைதாப்பேட்டையில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.
காரைக்கால் திருவட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (25) என்ற வாலிபருக்கும் வினோதினியின் தந்தை ஜெயபாலுக்கும் நட்பு ஏற்பட்டது. சுரேஷ் அடிக்கடி வினோதினி வீட்டுக்கு வந்தபோது வினோதினியின் அழகில் மயங்கினார். ஒரு தலையாய் அவரை காதலித்தார். ஆனால் அதை வினோதினி ஏற்கவி்ல்லை.
கடந்த நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக வினோதினி ஊருக்கு வந்தார். பின்னர் பணிக்கு திரும்புவதற்காக நவம்பர் 14-ந் தேதி இரவு காரைக்கால் பஸ் நிலையத்துக்கு சென்றார். அப்போது இருட்டில் மறைந்து இருந்த சுரேஷ் வழி மறித்து கையில் வைத்திருந்த ஆசிட்டை வினோதினி மீது வீசினார்.
கை, கால், முகம் ஆகிய இடங்களில் ஆசிட் பட்டதால் எரிச்சலில் வினோதினி அலறினார். உடனே அவரை காரைக்காலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குகுக் கொண்டு சென்றனர். ஆசிட் வீச்சில் முகம் மற்றும் உடல் முழுவதும் வெந்து காணப்பட்டதால் உடனே ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கும்படி டாக்டர்கள் தெரிவித்தனர். அதன்படி உடனடியாக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அதன் பின்னர் அவரை ஆதித்யா என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் வினோதினி நேற்று முன்தினம் காலை சிகிச்சை பலனின்றி வினோதினி உயிர் இழந்தார். அவர் இறந்ததை கேள்விப்பட்டதும் பெற்றோர் கதறி துடித்தனர்.
வினோதினியின் தந்தை ஜெயபாலனின் சொந்த ஊர் திருக்கடையூர் ஆகும். இதனால் சென்னையில் இருந்து நேற்று பிற்பகல் வினோதினியின் உடல் வேன் மூலம் கொண்டு செல்லப்பட்டது. நேற்று இரவு 9 மணிக்கு திருக்கடையூர் தெற்கு வீதியில் உள்ள வீட்டிற்கு வினோதினியின் உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
அரசியல் கட்சியினர், பொதுமக்கள், மாணவ, மாணவியர் என நூற்றுக்கணக்கானோர் வினோதினி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் இறுதி ஊர்வலம் இன்று காலை நடந்தது. இன்று காலை 9.30 மணிக்கு திருக்கடையூர் தெற்கு வீதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து வினோதினி உடல் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. பின்னர் அம்மனாறு அருகே மீச்சான்குளம் பகுதியில் வினோதியின் உடல் தகனம் நடந்தது.