ஹாலிவுட் கலைஞர்கள் இந்திய மொழிப் படங்களில் பணி புரிவது என்பது பெருமைக்குரிய விஷயமாக கருதப்பட்டது. காலப்போக்கில் நமது இந்திய கலைஞர்கள் ஹாலிவுட் படங்களில் பணிபுரிவது வாடிக்கையான விஷயமாகிவிட்டது.தற்போது அதையும்தாண்டி பாரதி ரெட்டி என்ற தென் இந்திய தயாரிப்பாளரும், ஸ்டான்லி ஜோசப் என்கிற தென் இந்திய இயக்குநரும் இணைந்து ஹாலிவுட் படம் ஒன்றை தயாரித்துள்ளனர்.
முழுக்க முழுக்க ஹாலிவுட் நடிகர்கள், ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்குபெற்றிருக்கும் இப்படத்திற்கு 'நியூட்டன்ஸ் 3 லா' (Neton's 3rd Law) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியரான பாரதி ரெட்டிக்கு நீண்ட நாட்களாக ஹாலிவுட் படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட, அதே ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியரான ஸ்டான்லி ஜோசப்புடன் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார். அயல்நாடுகளில் நிலவும் போதை மருந்து பிரச்சனையும், அதனால் ஏற்படும் அசம்பாவிதங்களையும் மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளனர்.
இசைக் கலைஞராக இருந்த ஸ்டான்லி ஜோசப், இப்படத்தின் மூலக்கதையை பிரன் காஸ்வல் என்ற ஆஸ்திரேலிய எழுத்தாளருடன் சேர்ந்து எழுதியிருக்கிறார். ராபர்ட் அக்கேனீஸ் ஒளிப்பதிவு செய்ய, ஷானே காவானாக் படத்தொகுப்பு செய்யும் இப்படத்திற்கு ஸ்டான்லி ஜோசப் இசையமைத்து இயக்கியிருக்கிறார்.
ரூ.15 கோடிச் செலவில் நாற்பது நாற்களில் எடுத்து முடிக்கப்பட்டுள்ள இப்படத்தில் எந்தவித கம்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளும்
பயன்படுத்தாமல், அத்தனை காட்சிகளையும் இயல்பாகவே படம்பிடித்து அசத்தியிருக்கிறார்களாம். டாக்டர் ஸ்ரீ ரங்கா ரெட்டி, டாக்டர் பாரதி ரெட்டி ஆகியோர் தயாரித்துள்ள இந்த ஹாலிவுட் திரைப்படம் ஏப்ரல் மாதம் உலகமெங்கும் வெளியாகிறது.