மீண்டும் "மோனோ ரெயில்" - தமிழக அரசு அறிவிப்பு


சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மோனோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழக அரசின் செயல்திட்டங்களை விளக்கி ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றியபோது இது குறித்து கூறியதாவது:

சென்னை மற்றும் பிற நகரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், நிர்வாகத்திற்குப் பெரும் சவாலை ஏற்படுத்தி வருகிறது. சென்னை மாநகர போக்குவரத்தில் பொதுப் போக்குவரத்தின் பங்கு தற்போது 27 சதவீதம் உள்ளது. இந்த விழுக்காடு 2026 ஆம் ஆண்டுக்குள் 46 சதவீதத்திற்கு உயர்த்தப்பட வேண்டும். எனவே, இந்த அரசு ஒருங்கிணைந்த பன்முறை போக்குவரத்து வசதியினை சென்னை மாநகரில் ஏற்படுத்தும்.

தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் திட்டம் 45 கிலோமீட்டர் அளவிற்கே திட்டமிடப்பட்டுள்ளது. மூலதனச் செலவு அதிகமாக உள்ள இத்திட்டம் செயல்பாட்டுக்கு வர மிகுந்த காலமாகும். எனவே, இந்த அரசு சென்னை மாநகருக்கு தற்போதுள்ள போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட மோனோ ரெயில் திட்டத்தை செயல்படுத்தும்.

முதற்கட்டமாக 111 கிலோ மீட்டருக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக 300 கிலோமீட்டர் வரை விரிவு படுத்தப்படும். கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி போன்ற மாநகராட்சிகளிலும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மோனோ ரெயில் திட்டம் செயல்படுத்த உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். 


இவ்வாறு ஆளுநர் தன்னுடைய உரையில் கூறியுள்ளார்.

2006ஆம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்த அரசு திட்டமிட்டிருந்தது. பின்னர் கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்ற பின், மோனோ ரெயில் திட்டம் கைவிடப்பட்டு மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.

தியானம் செய்யும் ரஜினி-ராகவேந்திரா பெயர் சொல்லி மாத்திரை சாப்பிடுகிறார்!

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ரஜினி அவ்வப்போது தியானம் செய்வதாகவும், மருந்து மாத்திரைகளை ராகவேந்திரர் பெயரைச் சொல்லி உட்கொள்வதாகவும் ராணா படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர் தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

நுரையீரலில் நீர்க்கோர்ப்பு, மூச்சுத் திணறல் மற்றும் சிறுநீரக பாதிப்பு காரணமாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டு மருத்துவர்களின் 24 மணிநேர கண்காணிப்பில் உள்ளார்.

அதேநேரம் ரஜினி நலமுடன் உள்ளதாகவும், இட்லி வடை, ரசம் போன்ற வழக்கமான உணவுகளை ருசித்து சாப்பிடுவதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் தலைமை டாக்டர் தணிகாசலம் கூறினார். இன்று அல்லது நாளை தனியறைக்கு மாற்றப்படுவார் என தெரிகிறது.

நெகிழ்ந்த ரஜினி...

இதற்கிடையில் ரஜினி நலம் பெற ரசிகர்கள் கோவில்களில் பிரார்த்தனை செய்யும் தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. அதை கேட்டதும் நெகிழ்ச்சியடைந்தார். பூரண நலம் பெற வாழ்த்து செய்தி வெளியிட்டவர்கள், மருத்துவமனைக்கு நேரில் வந்தவர்கள் விவரங்களும் தெரிவிக்கப்பட்டன. டிஸ்சார்ஜ் ஆனதும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட முடிவு செய்துள்ளார்.

மருத்துவமனையில் அடிக்கடி தியானம் செய்கிறார் என்றும் ராகவேந்திரா, ஷிர்டி சாய்பாபா ஆகியோரின் பெயர்களைச் சொல்லி மருந்துகளை சாப்பிடுகிறார் என்றும் 'ராணா' பட தயாரிப்பாளர் முரளி மனோகர் கூறினார்.

ரஜினி உடல்நிலை குறித்து வெளிநாட்டு டாக்டர்களுடனும் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் தெரிகிறது.

ஆசியாவில் அதிக சம்பளம் பெறும் ஹீரோ சூப்பர் ஸ்டார் ரஜினி!

இதுவரை இந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நாயகனாகத் திகழ்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினி, இப்போது ஆசியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நாயகனாக உயர்ந்துள்ளார்.

ராணா படத்துக்காக ரஜினிக்கு அளிக்கப்பட்ட சம்பள முன்பணம் ரூ 24 கோடி என ஈராஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தனது சம்பள விவரங்களை ஒருபோதும் மறைக்காதவர் ரஜினி. காரணம் முறைப்படி, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தி, வருமான வரித் துறையிடம் நற்சான்றிதழும் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பெற்று வருபவர்.

அவரது மெகா ஹிட் படங்களான சிவாஜி, எந்திரன் போன்றவற்றின் சம்பளத்தை வருமான வரி பிடித்தம் செய்யப்பட்ட பிறகே பெற்றுக் கொண்டது நினைவிருக்கலாம்.

இப்போது ராணா படத்துக்காக ரஜினிக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் மற்றும் முன்பண விவரங்களை ஈராஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் ஈராஸ் என்பதால், இந்த விவரங்களை முறைப்படி அறிவித்துள்ளது ஈராஸ். இதன்படி, ராணாவுக்கு ரஜினிக்கு அளிக்கப்பட்டுள்ள முன்பணம் ரூ 24 கோடி.

படத்தின் விற்பனைக்குப் பிறகு லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் அவருக்கு மீதிச் சம்பளமாக வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுனில் லுல்லா தெரிவித்துள்ளார்.

படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் சௌந்தர்யா ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், இதுவரை இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் நடிகர் என்று கூறப்பட்டு வந்த ரஜினி, இப்போது ஆசிய அளவில் முதலிடத்தில் உள்ளார்!

தமிழர்களைத் தாக்கிய போர்க்குற்றம் புரிந்த இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்-ஜெயலலிதா

சென்னை: தமிழர்களைத் தாக்கிய இலங்கை ஒரு போர்க்குற்றவாளி. அந்த நாட்டை வழிக்குக் கொண்டு பொருளாதார தடை விதிப்பதே ஒரே வழியாகும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று இலங்கைக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கும் ஒரு வரி தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். அப்போது இலங்கையை போர்க்குற்றவாளி என்றுஅவர் பிரகடனம் செய்தார். மேலும் இலங்கை மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தீர்மானத்தைத் தாக்கல் செய்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:

தமிழனின் பண்பு யாருக்கும் தாழ்ந்தவனாக இருப்பதல்ல. யாரையும் தாழ்த்துவதல்ல என்றார் பேரறிஞர் அண்ணா. இப்படிப்பட்ட உயரிய எண்ணத்தைக் கொண்ட தமிழர்கள் உலகெங்கும் பரவி இருக்கிறார்கள்.

மொழி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் ஒற்றுமையுடன் திகழும் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் இடையே உள்ள தொப்புள் கொடி உறவு அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

இலங்கைக்கு விடுதலை கிடைத்து விட்டாலும், அங்கு வாழும் தமிழர்கள் அவர்கள் நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படு வதை எதிர்த்து, இலங்கைத் தமிழர்கள் பல்லாண்டு காலமாக போராடி வந்தனர்.

இவர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து தேவையான அரசமைப்புச் சட்டத்திருத்தங்களை கொண்டு வந்து, தமிழர்கள் கவுரவத்துடனும், சம உரிமையுடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்காமல் அவர்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தது.

பரவலாக குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்களை கொன்று குவித்தது. மனிதர்கள் வாழும் இடங்களின் மீதும், மருத்துவ மனைகள் மீதும் குண்டுகளை வீசியது. மனிதாபிமான முறையில் செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்தது.

உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்தவர்கள் என்று சந்தேகப்படக்கூடியர்கள் உள்பட இந்தச் சண்டையில் பலியானவர்கள் மற்றும் எஞ்சியுள்ளவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது.

இலங்கை அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் ஊடகங்கள் உள்பட போர்ப் பகுதிக்கு வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது. போன்ற கடுமையான, நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்களை உள்நாட்டுப்போரின் போது இலங்கை அரசு நிகழ்த்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் நியமனம் செய்யப்பட்ட குழு கண்டறிந்து இருக்கிறது.

எனவே, இத்தகைய போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும், தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழவகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமை களையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை இந்திய அரசை கேட்டுக் கொள்கிறது.

இலங்கையில் போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும், தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழவகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமை களையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை இந்திய அரசை கேட்டுக் கொள்கிறது.

இங்கே பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சௌந்தரராஜன் அவர்கள், பொருளாதாரத் தடையைக் கொண்டு வர வேண்டுமென்ற வரிகளை விலக்கிக் கொண்டால் என்ன என்ற ஒரு கருத்தை இங்கே தெரிவித்தார். இதனால் அப்பாவித் தமிழ் மக்களும் பாதிக்கப்படுவார்களே என்ற ஒரு கருத்தைச் சொன்னார்.

இப்போதே இலங்கை அரசு யாருக்கும் பணியவில்லை. அங்கே வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களர்களோடு அனைத்து உரிமைகளையும், குடியுரிமைகளையும் வழங்க வேண்டுமென்று இந்தியா சொன்னாலும், யார் சொன்னாலும், அவர்கள் அதை மதிக்கவில்லை. அதனால், அவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது, அவர்களை வழிக்குக் கொண்டு வருவதற்கு ஒரே வழி பொருளாதாரத் தடைகள்தான். இதுவொரு தற்காலிகமான ஒரு முறைதான்.

இந்திய அரசும், இன்னும் சில நாடுகளும் இணைந்து, இலங்கை அரசின்மீது ஒரு பொருளாதாரத் தடையைக் கொண்டு வந்தால், குறுகிய காலத்திற்குள்ளேயே நாம் சொல்வதை இலங்கை அரசு கேட்டுத்தான் ஆக வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்படும். வேறு வழியில்லை என்பதற்காகத்தான் இதைச் சேர்த்திருக்கிறோம்.

இந்தத் தீர்மானத்தின்மீது இங்கே கருத்துத் தெரிவித்து உறுப்பினர்கள் பேசுகின்றபோது, ஐ.நா. சபை ராஜபக்சேவை போர்க் குற்றவாளி என்று அறிவித்து விட்டதாக இங்கே தெரிவித்தார்கள். அப்படியில்லை. ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்கள் ஒரு குழுவை அமைத்து, அவர்கள் அங்கே நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்களைப் பற்றி ஒரு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்று தெரிவித்தார்.

அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில், இப்படிப்பட்ட போர்க் குற்றங்களெல்லாம் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது; அங்கே வாழ்கின்ற தமிழ் மக்கள் மீது இத்தகைய குற்றங்களெல்லாம், கொடுமைகளெல்லாம் நிகழ்த்தப்பட்டன என்பதையெல்லாம் தெரிவித்துவிட்டு, இதனை இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்களே தவிர, இதை உறுதியும் செய்யவில்லை – ராஜபங்சேவோ, மற்றவர்களோ போர்க் குற்றவாளிகள் என்று ஐ.நா. சபை அறிவிக்கவும் இல்லை.

அதனால்தான் இந்தத் தீர்மானத்தில் இந்திய அரசு போர்க் குற்றம் புரிந்தவர்களை, போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த வேண்டும், இதற்கு ஐ.நா. சபையை வலியுறுத்த வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம்.

எனவே, மனிதாபிமானமற்ற முறையில் ஈவு இரக்கமின்றி பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்குக் காரணமானவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றும்; இலங்கையில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழு மறுவாழ்வு அளித்து, அவர்கள் வசித்த இடங்களிலேயே அவர்களை மீண்டும் குடியமர்த்தி; சிங்களர்களுக்கு உரிய அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்களுக்கு இலங்கை அரசு வழங்கும் வரையில் மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி, அரசு சார்பில், என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தினை இந்த மாமன்றம் ஒரு மனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.

முன்னதாக தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பேசினர். அதன் பின்னர் ஜெயலலிதா பதிலுரை நிகழ்த்தினார். இதைத் தொடர்ந்து தீர்மானம் நிறைவேறியது.