இந்தியாவுக்கு 4வது பதக்கம்: இதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளிலேயே இதுதான் 'பெஸ்ட்'!


லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வரும் இந்திய அணியினர், ஒலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக 4 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ளனர்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 81 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். இதில் பாட்மிண்டன், துப்பாக்கி சுடுதல், குத்துச்சண்டை ஆகிய போட்டிகளில் இந்தியாவிற்கு 4 பதக்கங்கள் கிடைத்துள்ளது.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ககன் நரங் வெண்கலப்பதக்கம் வென்றார். இதுவே லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் பதக்கம் ஆகும். அதன்பிறகு 25 மீ்ட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் விஜய்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த நிலையில் பெண்களுக்கான பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் வெண்கலப்பதக்கம் வென்றார்.
ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீராங்கனை மேரி கோம் கலந்து கொண்டார். இதில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய அவருக்கு, வெண்கலப் பதக்கம் உறுதியானது. இருப்பினும் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை நிகோலா ஆதம்ஸிடம் தோல்வியை தழுவிய மேரி கோம் வெண்கலப்பதக்கம் வென்றார். இதன்மூலம் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை 1 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் உட்பட மொத்தம் 4 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணிக்கு கிடைத்த அதிகபட்சமாக பதக்கங்கள் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது. முன்னதாக கடந்த 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு 3 பதக்கங்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் மேரி கோம் வெண்கலம் பதக்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற 3வது இந்திய பெண் என்ற சாதனையை படைத்தார். முன்னதாக கடந்த 2000ம் ஆண்டு சிட்டி ஒலிம்பிக் போட்டியில் கர்ணம் மல்லீஸ்வரியும், லண்டன் ஒலிம்பிக்கில் சாய்னா நேவாலும் பதக்கம் வென்றுள்ளனர். மேற்கண்ட 3 இந்திய வீராங்கனைகளும் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

115 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்து சிதற ஆரம்பித்துள்ள நியூசிலாந்து எரிமலை


வெல்லிங்டன்: நியூசிலாந்தில் கடந்த 100 ஆண்டுகளாக எந்த அசைவும் இல்லாமல் இருந்த தொன்காரிரோ எரிமலை மீண்டும் வெடித்து சிதற வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால் அவ்வழியான விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவில் நேற்று இரவு 3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதையடுத்து தொன்காரியோ என்ற எரிமலையில் இருந்து இரைச்சலும், சீற்றமும் ஏற்பட்டது. மேலும் எரிமலையில் இருந்து புகையும், சாம்பலும் வெளியேறியது.
1897ம் ஆண்டு தான் இந்த எரிமலை கடைசியாக வெடித்தது. இந் நிலையில், கடந்த 115 ஆண்டுகளுக்கும் மேலாக மவுனமாக இருந்து வந்த இந்த எரிமலை மீண்டும் வெடித்து சிதற வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதனால் எரிமலையின் அருகே வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். மேலும் அவ்வழியான விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுவிட்டது.
எரிமலையின் அருகே புகையும், சாம்பலும் எழுந்ததாகவும், அப்பகுதியில் உள்ள வீடுகளின் மீது சாம்பல் அதிகளவில் வந்து விழுந்ததாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர். எரிமலையை ஓட்டி செல்லும் சாலைகளிலும் அதிக அளவில் சாம்பல் கொட்டி கிடக்கிறது. இதனால் நெடுஞ்சாலைகள் நேற்று சிறிது நேரம் முடப்பட்டன.
இது குறித்து வானிலை ஆராய்ச்சி அதிகாரி பீட்டர் லிச்னர் கூறியதாவது, எரிமலை எப்போது வெடித்து சிதறும் என்பது தெரியவில்லை. இது ஒரு நீண்டகால எரிமலை வெடிப்பின் ஒரு துவக்கமாக கூட இருக்கலாம். மேலும் எரிமலை இரைச்சல், புகை போன்ற சம்பவங்களுடன் அப்படியே அமைதியாக இருக்கவும் வாய்ப்புள்ளது என்றார்.
எரிமலையில் இருந்து புகை எழும்பியதை நேரில் பார்த்த டிரக் டிரைவர் பிரையன் ரோடா என்பவர் கூறுகையில், எரிமலையில் இருந்து மேகம் போன்ற புகை எழும்பியதை பார்த்தேன். மேலும் சிறிது நேரத்திற்கு பிறகு, புகையின் நடுவில் ஆரஞ்சு நிறத்திலான தீ வெளிப்பட்டது என்றார்.
தொன்காரிரோ எரிமலையில் ஏற்பட்டு வரும் இயற்கை மாற்றம் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் அப்பகுதியினர், பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.

ராஜ்யசபாவுக்கு மெய்டன் விசிட் அடித்த சச்சின்!


டெல்லி: கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர் இன்று முதல் முறையாக ராஜ்யசபா கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் கலந்து கொண்ட முதல் நாளிலேயே பெரும் அமளியை துமளியைப் பார்த்து விட்டுக் கிளம்பினார்.
கடந்த ஏப்ரல் 26ம் தேதி நியமன ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார் சச்சின். இதையடுத்து ஜூன் மாதத்தில் பதவியேற்றார் சச்சின். இதையடுத்து இன்று கூடிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் சச்சின் முதல் முறையாக கலந்து கொண்டார். ராஜ்யசபாவுக்கு முதல் முறையாக வந்த அவருக்கு பல்வேறு கட்சிகளின் எம்.பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அத்தனை எம்.பிக்களின் பார்வையும் இன்று சச்சின் மீதுதான் விழுந்திருந்தது. இதுகுறித்து சச்சின் கூறுகையில், இது எனக்குப் புதிய அனுபவம் என்றார்.

சச்சினுடன் அவரது மனைவி அஞ்சலியும் வந்திருந்தார். அவர் பார்வையாளர் வரிசையில் இருந்து தனது கணவரின் முதல் ராஜ்யசபா கூட்டத்தை பார்த்து மகிழ்ந்தார்.
ராஜ்யசபாவுக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சுக்லாவுடன் அவரது காரில் வந்தார் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.