உலகிலேயே அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா- ஐக்கிய நாடுகள் சபை

10 முதல் 24 வயதுக்குட்பட்ட வயதினராக 35.6 கோடி மக்களை கொண்ட நாடாக விளங்கும் இந்தியாவை உலகிலேயே அதிக இளைஞர்களை கொண்ட நாடாக ஐக்கிய நாடுகள் சபை இன்று அறிவித்துள்ளது.

உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட சீனாவைக் காட்டிலும் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருப்பினும், உலகின் அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா திகழ்வதாக ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தால் நடத்தப்பட்டு இன்று வெளியிடப்பட்ட சர்வதேச மக்கள் தொகை ஆய்வின் அறிக்கை தெரிவித்துள்ளது.
சுமார் 35.6 கோடி இளைஞர்களுடன் இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்தியாவுக்கு (மொத்த மக்கள் தொகை 126 கோடியே 26 லட்சத்து 20 ஆயிரம்) அடுத்தபடியாக, உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் (மொத்த மக்கள் தொகை 136 கோடியே 79 லட்சத்து 40 ஆயிரம்) இதே வயதையொத்த சுமார் 26.9 கோடி இளைஞர்கள் உள்ளனர் என அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இதே பட்டியலில், சீனாவுக்கு அடுத்தபடியாக 6.7 கோடி இளைஞர்களை கொண்ட இந்தோனேசியா மூன்றாவது இடத்திலும், 6.5 கோடி இளைஞர்களை கொண்ட அமெரிக்கா நான்காவது இடத்திலும், 5.9 கோடி இளைஞர்களை கொண்ட பாகிஸ்தான் ஐந்தாவது இடத்திலும், 5.7 கோடி இளைஞர்களை கொண்ட நைஜீரியா ஆறாவது இடத்திலும், 5.1 கோடி இளைஞர்களை கொண்ட பிரேசில் ஏழாவவது இடத்திலும், 4.8 கோடி இளைஞர்களை கொண்ட வங்காளதேசம் எட்டாவது இடத்திலும் உள்ளதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.

மார்பெர்க்: இன்னொரு எபோலா?

எபோலாவை எதிர்கொள்ளவே இந்தியா தயாராகாத சூழலில் மார்பெர்க் தாக்கினால் சமாளிக்க முடியுமா?

டெல்லி விமானநிலையத்தில், 18 நவம்பர் 2014 அன்று லைபீரியாவிலிருந்து வந்த ஒருவர் எபோலா தாக்கம் கொண்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, தடுப்புச் சூழலில் வைக்கப்பட்டிருக்கிறார். விநோதம் என்ன
வென்றால், அந்தப் பயணி லைபீரியாவிலேயே எபோலா காய்ச்சல் கண்டவர் என அறியப்பட்டு, சிகிக்சை அளிக்கப்பட்டுக் குணமடைந்ததாகச் சான்றிதழும் பெற்றிருக்கிறார். அவரது ரத்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கையில் அவர் உடலில் எபோலா வைரஸ் இல்லை என்று சான்றளிக்கப்பட்டிருக்கிறது.
குணமடையும்போது எபோலா வைரஸ், உடல் திரவங்களின் வழியே வெளியேறும். அது ரத்த மாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இதனை அறிந்திருந்த இந்திய அதிகாரிகள், அவரது விந்து திரவத்தைப் பரிசோதித்து அதில் எபோலா இன்னும் இருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான்.
ஆனால், நமது தலைவலி இத்தோடு முடிந்துவிட வில்லை. இரு மாதங்களுக்கு முன் வந்த ஒரு தகவல் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.
செப்டம்பர்-11 என்றாலே அமெரிக்காவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்தான் நினவுக்கு வரும். மற்றொரு மோசமான செய்திக்கும் அந்த நாள் பிரபலமடைந்திருக்கிறது. உகாண்டாவின் தலைநகரான கம்ப்பாலாவில், மெங்கா என்ற மருத்துவமனையில் ஒரு செவிலியர் மார்பெர்க் ரத்தக் கசிவுக் காய்ச்சல் என்ற தொற்றுநோயால் அன்று மரணம் அடைந்திருக்கிறார். ஒருவர் மட்டுமே இறந்திருக்கும் இந்த நோய்க்கு ஏன் பயப்பட வேண்டும்?
மார்பெர்க் ரத்தக்கசிவுக் காய்ச்சல், எபோலாவின் சகோதரன் என்று சொல்லலாம். கிட்டத்தட்ட அதே அறிகுறிகள், அதே அளவிலான தொற்றும் தீவிரம், பரவும் வேகம், கொல்லும் குரூரம் என்ற வகையில், இது எபோலாவுக்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல. எபோலா முதன்முறையாகக் கண்டம் விட்டுக் கண்டம் தாண்டிய இதே வருடத்தில், இது மீண்டும் தோன்றியிருக்கிறது என்றால், பரபரப்பின் காரணம் உங்களுக்குப் புரிந்திருக்கும்.
ஜெர்மனியிலிருந்து…
1967-ல் ஜெர்மனியின் மார்பெர்க், ஃபிராங்க்ஃபர்ட் மற்றும் அன்றைய யூகோஸ்லாவியாவின் பெல்கிரேடு நகரங்களின் ஆய்வுக்கூடங்களிலிருந்து தொற்றி, வெளியேறி, பெரும் பீதியைக் கிளப்பிய இந்த நோயை மார்பெர்க் நகரின் பெயரையே சூட்டினார்கள். மார்பெர்க்கின் ஆய்வுக்கூடத்தில் உகாண்டாவிலிருந்து கொண்டுவந்திருந்த ஆப்பிரிக்கப் பச்சைக் குரங்கு களிடமிருந்து, அவற்றைப் பேணியவர்களுக்கு முதலில் தொற்றி, அவர்களிடமிருந்து நகரில் பரவியது இந்நோய். மோசமான செய்தி என்னவென்றால், எபோலா போலவே இதற்கும் மருந்துகள் இல்லை. தடுப்பு மருந்துகளும் இல்லை. பிழைத்தால் அதிர்ஷ்டம்.
ரத்தக் கசிவு நோய்கள் பலவகை உண்டு. எபோலா, லிஸ்ஸா, கிரிமீயன் காங்கோ போன்றவை தீவிர மானவை. இருப்பதிலேயே மோசமானது எபோலா என்றால், அதைவிட இறப்பு வீதம் அதிகம்கொண்டது மார்பெர்க்தான் (மூச்சைப் பிடித்துக்கொள்ளுங்கள்).
பழந்தின்னி வவ்வால்களிடமிருந்து…
மார்பெர்க் வைரஸ், எபோலா போன்று, ரூஸெட்டஸ் ஏஜிப்டியாக்கஸ் என்ற ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப்படும் பழந்தின்னி வவ்வால்களிடமிருந்தே பிற இனங்களுக்குப் பரவுகிறது. நைஜீரியா, கென்யா, உகாண்டா, காங்கோ, தென்னாப்பிரிக்க நாடுகளில் மார்பெர்க் காய்ச்சல் அவ்வப்போது தோன்றித் தணிந்த வரலாறு உண்டு. பழந்தின்னி வவ்வால்கள் அதிகம் காணப்படும் சுரங்கங்களில் பணிபுரியும் சுரங்கத் தொழி லாளர்களிடம் இந்த வைரஸ் தொற்றி, அவர்கள் மூலம் குடும்பங்களில் பரவித் தீவிரமடைகிறது. இந்த நாடுகளில் சுரங்கப் பகுதி நகரங்களில் சுத்தம், சுகாதாரம், மருத்துவக் கட்டமைப்பு அதிகம் இல்லாததால், நோய் பரவுவதும் வெகு எளிதாகிறது. சமீபகாலம் வரை, இந்தக் குடியிருப்புகளில் உள்ளவர்கள், மக்கள் தொகை அதிகம் உள்ள இடங்களுக்குச் செல்லும் வாய்ய்பு இல்லாமையால், நோய் அந்தப் பகுதியில் மட்டும் கட்டுப்பட்டிருந்தது. உகாண்டாவில் இறந்த செவிலியருக்கு மார்பெர்க் நோய் எப்படித் தாக்கியது என்பது இன்றும் புதிர். வவ்வால் நிறைந்த எந்தக் குகைக்கும் அவர் சென்றதாகத் தெரியவில்லை.
அதிசயமாக உயிர்பிழைத்தவர்கள்
மார்பெர்க்கின் தாக்கம் 2008-லும் நிகழ்ந்திருக்கிறது. நெதர்லாந்திலும் அமெரிக்காவிலும் உகாண்டா சென்றுவந்த இருவர் மார்பெர்க் நோயால் தாக்கப்
பட்டுப் பிழைத்திருக்கிறார்கள். இருவரும், உகாண்டாவின் தேசிய வனவிலங்குக் காப்பகத்துக்குச் சென்றதாகவும், அங்கிருக்கும் பிரபலமான குகையில் தகுந்த பாதுகாப்பு உறைகள் இன்றி நுழைந்ததாகவும் தெரியவந்தது. அந்தக் குகையில் பழந்தின்னி வவ்வால்கள் நிறைந்திருக்கும். வவ்வால்களின் எச்சங்கள், இறந்த வவ்வால்களின் உடல் திரவங்கள் இவர்கள்மீது பட்டு, அதன்மூலம் பரவியிருக்கக்கூடும் என எண்ணப்படுகிறது. தகுந்த சிகிக்சை இன்றியும் அவர்கள் அதிசயமாக உயிர்பிழைத்தனர்.
மார்பெர்க் காய்ச்சலில் இறப்பு விகிதம் குறித்து வேறுபட்ட கருத்து நிலவுகிறது. சுமார் 90% இறப்பு சாத்தியம் என்று ‘டைம்’ இதழ் கூறியிருக்கிறது. இதே அட்டவணைப்படி எபோலா 50% - 80% வரை இறப்பு விகிதம் கூறப்பட்டிருக்கிறது. இது சரியான தகவல்தானா என்று உறுதிப்படுத்தப் போதுமான, நம்பத் தகுந்த புள்ளிவிவரங்கள் இல்லை.
மார்பெர்க் ரத்தக் கசிவுக் காய்ச்சலுக்கு நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?
உகாண்டாவிலிருந்து வரும் பயணிகள், எபோலா கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதில்லை. மார்பெர்க் காய்ச்சலுடன் எளிதில் நோயாளிகள் கண்டங்கள் தாண்டி வந்துவிட முடியும். அவர்களுக்கு எபோலாவின் அறிகுறிகள் தோன்றி, அதற்கான மருந்து கொடுத்து அது பயன்பெறாமல் போகும் நேரமே மார்பெர்க் பற்றிச் சிந்திக்கத் தொடங்குவார்கள். அதற்குள் நிலைமை மோசமாகிவிட்டிருக்கும். அவர்களைக் கையாண்ட செவிலியரும் நோய் தாக்கம் கண்டிருப்பர். எபோலா போன்றே இதுவும் தீவிரமாகப் பரவுவதால், அறியாமைக்கும் அழிவுக்கும் இடையே உள்ள போராட்டமாக இது வெடிக்கும். ஒரே நேரத்தில் எபோலா, மார்பெர்க் என்று இரண்டு தீவிரமான தொற்று நோய்களை உலகம் சமாளிப்பது மிகக் கடினம்.
நாம் என்ன செய்ய வேண்டும்?
உகாண்டா மட்டுமல்ல, ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருக்கும் அனைத்து நாடுகளிலிருந்தும் வரும் நபர் களைக் கண்காணிக்க வேணடும். போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டுச் செயலாக்கம் செய்வது அத்தனை எளிதல்ல. பெருமளவில் சமூக, பொருளாதாரச் சிக்கல்களை உலகெங்கிலும் இந்தக் கட்டுப்பாட்டு விதிகள் ஏற்படுத்தக் கூடும். இதனை முன்னறிந்து, தயார்நிலையில் நாடுகள் இருக்க வேண்டும்.
மார்பெர்க் மற்றும் மற்றைய ரத்தக் கசிவுக் காய்ச் சல்களைப் பற்றிய பொதுஅறிவு மக்களிடையே பரவலாகப் பரப்பப்படுவது அவசியம். இதுவரை நாம் அறிந்திராத கிரீமியன்- காங்கோ, லிஸ்ஸா போன்ற நோய்கள்குறித்து ஊடகங்களும் சுகாதாரத் துறை போன்ற அரசு இயந்திரங்களும், மருத்துவத் துறையும் அடிக்கடி மக்களிடம் செய்திகளைக் கொண்டுசேர்க்க வேண்டும்.
இந்தக் காய்ச்சல் பரவியிருக்கும் பகுதிகளுக்குப் பயணம் செய்யாதிருத்தல், அங்கிருந்து வரும் உறவினர்கள்குறித்து முன்கூட்டியே அரசுக்கு அறிவித்தல், வந்தவர்கள் நோய்வாய்ப்பட்டால், அவர் களைத் தனிமைப்படுத்தி வைத்தல், உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அறிவித்தல், மருத்துவமனையிலும் அவர்களைப் பற்றிய விவரங் களைத் தயங்காது அறிவித்தல் போன்றவற்றால் மருத்துவர்கள், பேணுபவர்கள், செவிலியர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க முடியும்.

வரவேற்க வேண்டிய முயற்சி பரஸ்பர பரிவர்த்தனை!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ‘ஜி-20’ நாடுகளின் உச்சி மாநாட்டில், இந்தியாவின் இடத்தைப் பிரகாசிக்கவைத்ததுடன், கவனிக்க வேண்டிய ஒரு அறைகூவலையும் விடுத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. நாடுகள் இடையேயான தகவல் பரிவர்த்தனை களின் எல்லையை விரிவாக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். கருப்புப் பணப் புழக்கத்தைக் கண்டறியவும் வெளிக்கொண்டுவரவும் புதிய வழிமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற அறைகூவலின் ஒரு பகுதியான மோடியின் இந்தப் பேச்சு வரவேற்புக்கு உரியது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை உறுப்பினர்களாக உள்ள ‘ஜி-20’ அமைப்பு வல்லமை மிக்கது. உலகின் மொத்த உற்பத்தி மதிப்பில் 85% இந்த நாடுகளிடம் இருக்கிறது. உலகின் பெரும்பாலான பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களும் இந்நாடுகளைச் சேர்ந்தவை. சர்வதேச அளவில் பொருளாதார ஒத்துழைப்பை மேற்கொள்ளவும், முடிவுகளை எடுக்கவும் 1999-ல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, 2008 முதல் உச்சி மாநாடுகளைத் தொடர்ந்து நடத்திவருகிறது. இந்த மாநாடுகள் உலகப் பொருளாதாரத்தின் போக்கில் குறிப்பிடத் தக்க அதிர்வுகளை உருவாக்குகின்றன. கருப்புப் பண மீட்பு தொடர்பான நடவடிக்கைகள் சர்வதேசத்துடன் இணைந்து மேற்கொள்ள வேண்டியவை என்கிற நிலையிலேயே மோடி இந்த மாநாட்டைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.
பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் பல நாடுகளில் தொழில் நிறுவனங்களை நடத்துகின்றன. இப்படித் தொழில் நடத்தும்போது, உலகிலேயே எங்கு வரி குறைவோ அல்லது வரியே கிடையாதோ அங்கு தன்னுடைய தலைமையகத்தை அமைத்துக்கொண்டு, விதி களைத் தமக்கு ஏற்ப வளைத்துக்கொண்டு, வரி ஏய்ப்பில் ஈடுபடுவது பெரும்பாலான நிறுவனங்கள் கையாளும் உத்திகளில் ஒன்று. இதனால், உண்மையிலேயே அந்தத் தொழில் நடத்த அனுமதித்து, எல்லாக் கட்டமைப்புகளையும் உருவாக்கித் தரும் நாடுகள் ஏமாற்றப் படுகின்றன. இதைச் சட்டபூர்வமாகத் தடுக்கத்தான் சர்வதேச அளவிலான மாநாட்டில் இந்த விஷயத்தைக் கொண்டுவந்திருக்கிறார் மோடி (மாநாட்டில் பங்கேற்ற சில நாடுகளும் இப்படியான மறைமுக வரி ஏய்ப்புக்கு உத்வேகம் அளிப்பவை என்பது இங்கு கவனிக்க வேண்டியது).
பொதுவாக, இந்த மாதிரி நாடுகளிடம் நாம் சந்தேகத்துக்கு உரிய ஒருவருடைய வங்கிக் கணக்கு தொடர்பாக விவரம் கேட்டால், ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற விதியைச் சுட்டிக்காட்டி, வங்கி நிறுவனங்கள் தகவல் தர மறுத்துவிடும். மேலும், வற்புறுத்தினால் நீங்கள் விவரம் கேட்கும் நபர், சட்டத்துக்குப் புறம்பாக ஏதாவது செய்திருக்கிறார் என்று உங்களிடம் ஆதாரம் இருந்தால் கொடுங்கள், தருவது பற்றிப் பரிசீலிக்கிறோம் என்பார்கள். அப்போதும் தகவல் கிடைப்பது நிச்சயமில்லை. மோடியின் அறைகூவல் இந்த மோசமான நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவரக் கூடியது.
கருப்புப் பணம் என்பது வெறும் பொருளாதாரச் சூறையாடல் மட்டும் அல்ல. போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் போன்றவற்றில் ஈடுபடுவோருக்கும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோருக்கும் ரத்தம் செல்வது கருப்புப் பணக் கணக்குகளிலிருந்துதான். எல்லா நாடுகளுக்குமே உறைக்க வேண்டிய விஷயம் இது. மோடியின் அழைப்பு ஒரு நல்ல தொடக்கமாக அமையட்டும்!

பெங்களூருவில் வார விடுமுறையை கொண்டாட சிறந்த ஐந்து இடங்கள்

வெள்ளிக்கிழமை வந்தாலே நம்மில் பலருக்கு மனதுக்குள் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்துவிடும் அடுத்த இரண்டு நாட்கள் வார விடுமுறை என்பதனால். 12 மணி வரை தூக்கம், குடும்பத்துடன் ஷாப்பிங் மால்களுக்கு செல்வது அல்லது திரையரங்குகளுக்கு சென்று படம் பார்ப்பது போன்ற விஷயங்களைத் தான் நாம் வழக்கமாக வார விடுமுறையை கொண்டாட திட்டமிடுகிறோம். அதைத்தாண்டி பெங்களுருவில் அட்டகாசமாக வார விடுமுறையை கொண்டாட நல்ல இடங்கள் இருக்கின்றன. வாருங்கள் அந்த இடங்களைப்பற்றி அறிந்துகொள்வோம்
. ஸ்கந்தகிரி ட்ரெக்கிங்: புகைப்படம்:  Vandan Desai 
பெங்களுருவில் இருந்து 60கி.மீ தொலைவில் இருக்கும் ஸ்கந்தகிரி மலை வார விடுமுறையை நண்பர்களுடன் கொண்டாட அருமையான ஒரு இடம். சாகசம் நிறைந்த மலையேற்றம், 18ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிதலமடைந்த கோட்டை, மலையின் மேல் இருந்து காணக்கிடைக்கும் அற்புதமான இயற்கை காட்சிகள் என இந்த ஸ்கந்தகிரி மலை பல அனுபவங்களை நமக்கு தரும். இங்கு மலையேற்றம் செய்ய வரும் பெரும்பாலான சுற்றுலாப்பயணிகள் அதிகாலை மலையின் மேல் நின்று சூரிய உதயத்தை காணும் வகையில் திட்டமிட்டு வருகின்றனர். உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியம் தருவதாய் இந்தப்பயணம் உங்களுக்கு அமையும்
 
பன்னேர்கட்டா தேசிய பூங்கா: புகைப்படம்:  Kalyan Kanuri 
பெங்களூரில் இருந்து 25கி.மீ தொலைவில் இருக்கும் இந்த பன்னேர்கட்டா தேசிய பூங்கா குடும்பத்துடன் வார விடுமுறையை கொண்டாட சிறந்த இடமாகும். நூற்றுக்கும் மேற்ப்பட்ட வகையான விலங்குகள் மற்றும் பறவைகளை இந்த பூங்காவினுள் நாம் கண்டு ரசிக்கலாம். அரியவகை விலங்கான வெள்ளைப்புலி இதன் சிறப்பம்சம் ஆகும். 

புகைப்படம்:  Asif Musthafa மேலும் இங்கு நாம் வனஉலா(safari) செல்லலாம் அல்லது இங்குள்ள வனவிலங்கு காட்சி சாலையில் விலங்குகளை கண்டு மகிழலாம். இந்தியாவில் வேறெங்கும் இல்லாத பட்டாம்பூச்சி பூன்கா பனேர்கட்டா தேசிய பூங்காவின் தனித்துவமான அடையாளங்களில் ஒன்று. 20க்கும் மேலான பட்டாம்பூச்சி வகைகள் இந்த பட்டாம்பூச்சி பூங்காவில் இருக்கின்றன. நம் வீட்டு குழந்தைகளுக்கு இந்தப்பயணம் நிச்சயம் குதூகலத்தை ஏற்ப்படுத்தும்.

 நந்தி மலை: புகைப்படம்: R.Srijith பெங்களுருவில் இருந்து 60 கி.மீ தொலைவில் இருக்கிறது இந்த நந்தி மலை. இங்கு மைசூரின் மகாராஜாவாக இருந்த திப்பு சுல்தானின் கோட்டை அமைந்திருக்கிறது. திப்பு சுல்தான் காலத்தில் தண்டனை கைதிகளை மலையில் இருந்து தள்ளிவிட்டு மரண தண்டனை அளித்த இடம், மூன்று நரசிம்மர் கோயில்கள், குழந்தைகள் விளையாட்டு பூங்கா போன்றவை முக்கிய இந்த இடத்தின் முக்கிய ஈர்ப்புகள் ஆகும். இவைகளை தவிர்த்து சமீப காலங்களில் பிரபலமாகி வரும் மலை சைக்கிளிங் செய்ய அதிகமானோர் வருகின்றனர். அதே போன்று பாராக்ளிடிங் விளையாட்டும் இங்கே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. சாகச விரும்பிகளுக்கும் சரி, இயற்கையின் அழகை ரசிக்க விரும்புகிறவர்களுக்கும் சரி நந்த மலை உங்கள் வார விடுமுறையை மறக்க முடியாததாக்கிடும்.


 பீமேஸ்வரி சரணாலயம்: புகைப்படம்:  Nitesh Bhatia இயற்க்கை ஆர்வலர்களின் சொர்க்கம் இந்த பீமேஸ்வரி சரணாலயம். பெங்களுருவில் இருந்து 100 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இங்கு பசுமையான புல்வெளிகள், ஓடைகள், சிறிய அருவி என அற்புதமான இயற்க்கை சூழலை கொண்டுள்ளது. பெங்களுருவில் சாகசப்படகு சவாரி செய்ய சிறந்த இடங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. இங்கே தனியார் தாங்கும் விடுதிகளில் குடிசை ஒன்றை வாடகைக்கு எடுத்து இரவு கயிற்றுக் கட்டிலில் படுத்தபடி மயக்கும் இரவை நிலவொளியில் ரசிக்கலாம். வித்தியாசமான ஒரு வாரவிடுமுறையை கொண்டாட தாராளமாக பீமேஸ்வரி சரணாலயத்திற்கு வரலாம். வைன் சுற்றுல

l நந்தி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது க்ரோவர் ஜாம்பா வைன் தயாரிப்பகம். 400 ஏக்கரில் இருக்கும் திராட்சை தோட்டம், வைன் தயாரிக்கும் ஆலை என புதுமையான ஒரு அனுபவம் உங்களுக்கு இங்கே நிச்சயம். காலை 10:30 மணிக்கு இந்த வைன் சுற்றுலா ஆரம்பிக்கிறது. திராட்சைகள் விளைவிக்கப்படும் முறைகள், வைன் தயாராகும் முறைகள், அவை சேமிக்கப்படும் முறைகள் ஆகியவற்றை நாம் தெரிந்து கொள்ளலாம். அப்போது 5 வகையான வைன்களை அவை தயாராகும் போதே சுவைத்து பார்க்கும் வாய்ப்பும் நமக்கு கிடைக்கும். புதுமையான அதே சமயம் சுவையான பயணமாக இது உங்களுக்கு அமையும்.

கோவா - கதிரவனின் கிரணங்களில் மின்னும் மணற்பரப்பு!

இந்தியாவின் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளில், மதுவுண்ட மயக்கமா இல்லை கவின் கடல் கண்ட கிறக்கமா என்ற பாகுபாடில்லாமல் பதின் வயதினரும், பல்லாண்டு வாழ்ந்தவரும் மகிழ்ச்சியில் திளைக்கின்ற இடம் ஒன்று உண்டெனில் அது கண்டிப்பாக கோவாவாகத்தான் இருக்க முடியும்.

கோவா
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க
கோவா நகரம் போர்துகீசியர்களின் ஆளுகையின் கீழ் இருந்ததால் அதன் வாழ்வு முறையில் போர்த்துகீசிய பாதிப்பு பளிச்சென தெரிவதை இங்கு முதல் முதலாக வரும் பயணிகள் கட்டாயம் உணர்வார்கள்.
இந்த நகரத்தில் வாழும் மக்கள் தங்களின் பாரம்பரியத்தின் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள். அதன் காரணமாகவே இந்நகரத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றிக் கொண்டிருக்கும் கட்டிடங்களையும், அடையாளச் சின்னங்களையும் கவனத்துடன் சிறந்த முறையில் பராமரித்து வருகிறார்கள்.
மேலும், பாங்காக், இபிஸா போன்ற உலகப் புகழ்பெற்ற கடற்கரை பிரதேசங்களுக்கு செல்வது போலவே கோவாவுக்கும் உலகம் முழுவதிலுமிருந்தும் பயணிகள் சுற்றுலா வருவதற்கு விரும்புகிறார்கள்.
கோவாவில் ஒரு முழுநாள் எப்படி நகர்ந்து செல்லும்?
கோவாவின் வடக்கு திசையில் உள்ள கேண்டலிம் கடற்கரைக்கோ, தலைநகர் பனாஜிக்கோ காலை வேளையில் சென்று பாரம்பரிய கடற்கரை உணவை ருசிப்பதிலிருந்து தொடங்கும் அன்றைய நாள் மிகச் சிறந்த ஆரம்பமாக இருக்கும். அதுவும் கோவாவை போன்ற நாட்டின் ஒரு சில இடங்களில் தான் நீங்கள் பீருடன் காலைச் சிற்றுண்டியை எடுத்துக் கொள்ள முடியும்.
மேலும், கேண்டலிம் நகர வீதிகளில் நீங்கள் காலாற நடந்தும் செல்லலாம், இல்லையேல் மோட்டார் சைக்கிள் வேண்டுமானாலும் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். இதற்கு 250 ரூபாய்  வரை கட்டணமாக வசூலிக்கப்படும்.
எனவே நீங்கள் காலைச் சிற்றுண்டிக்கு செல்லும் வழியில் உள்ள தெருவோரக் கடைகளில் மலிவு விலைகளில் தரமான பொருட்களை வாங்கிச் செல்லலாம். இங்கு டீ-ஷர்ட்டிலிருந்து, சன் கிளாஸ்கள் வரை எதுவேண்டுமானாலும் கிடைக்கும்.
அதுமட்டுமல்லாமல் கேண்டலிம் மற்றும் அஞ்சுனா கடற்கரைகளில் சனிக்கிழமைகளில் மட்டுமே காணக்கூடிய செகண்ட் ஹெண்ட் மார்க்கெட் மிகவும் பிரபலம்.
கேண்டலிம் பகுதியில் மட்டும் கலங்கூட், பாகா, கேண்டலிம் என்று மொத்தம் 3 கடற்கரைகள் இருக்கின்றன. இந்தக் கடற்கரைகளில் தரகர்கள் மற்றும் முகவர்களை தொடர்பு கொண்டு ஜெட்ஸ்கை, பனானா ரைட் என்று நீங்கள் உங்களுக்கு விருப்பமான நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டு பொழுதை கழிக்கலாம்.
அதோடு ஏதேனும் ஒரு கடற்கரை குடில்களில் பீரை அருந்திக் கொண்டே கோவான் கடற்கரை உணவை ருசிக்கும் அனுபவம் மிகவும் அலாதியானது. இதில் பிரிட்டோஸ் என்ற குடில் பாகா கடற்கரையில் உள்ள குடில்களில் மிகவும் புகழ்பெற்றது.
இந்த மூன்று கடற்கரைகளிலிருந்தும் முற்றிலும் வேறு ஒரு உலகத்துக்கே உங்களை அழைத்துச் செல்வது அஞ்சுனா கடற்கரையாகத்தான் இருக்க முடியும். இங்கு நீங்கள் உலகப் புகழ்பெற்ற ஜாயின்ட் கர்லிஸ் உணவகங்களுக்கு சென்று வித்யாசமான உணவு வகைகளை ருசி பார்க்கலாம்.
அதுமட்டுமில்லாமல் அமைதியின் இருப்பிடமான அஞ்சுனா பீச்சில் நீங்கள் புத்தகம் படிப்பது, வாக்மேனில் பாடல்கள் கேட்பது, மடிக்கணினியில் ஃபேஸ்புக் பார்ப்பது போன்று உங்களுக்கு பிடித்தமான வேலைகளில் ஈடுபடலாம்.
மேலும், மற்ற கோவா கடற்கரைகளை போலவே, அஞ்சுனா பீச்சிலும் ஏராளமான குடில்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக கர்லிஸ் உணவகங்களில் ஹக்கா விரும்பிகளின் கூட்டம் அலை மோதும்.
மந்தமான தெற்கு கோவா
கோவாவின் மற்ற பகுதிகளோடு ஒப்பிடுகையில் தெற்கு கோவா பரபரப்பில்லாத வாழ்க்கை முறையையே கொண்டுள்ளது. இந்த பகுதிகளில் புகழ்பெற்ற தேவாலயங்கள் சிலவற்றையும், அமைதியான கடற்கரைகளையும் நீங்கள் பார்த்து ரசிக்கலாம்.
மேலும், கோவாவின் பிரசித்தி பெற்ற கடற்கரைகளில் ஒன்றான கோல்வா பீச்சும் இந்தப் பகுதிகளில்தான் இருக்கிறது. கோவாவின் பரபரப்பான வாழ்க்கை முறையை விரும்பாத குடும்பங்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் தங்களுடைய விடுமுறையை கழிக்க தெற்கு கோவா மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.
கேளிக்கை விரும்பிகளின் சுவர்க்கம்
கோவாவின் மாலை நேரம் முழுவதுமாக கேளிக்கை விரும்பிகளின் சுவர்கமாக மாறிப்போயிருக்கும். இந்த நகரத்தின் இரவு விடுதிகளிலும், பப்களிலும் அதிகாலை மூன்று மணி வரை பாடல்களின் ஒலி காதை துளைக்கும். அதிலும் குறிப்பாக வடக்கு கோவாவில், கலங்கூட் பீச்சுக்கு அருகே உள்ள கஃபே டிட்டோஸ் மற்றும் மாம்போஸ் இரவு விடுதிகளில் கேளிக்கை பிரியர்களின் கூட்டம் நிரம்பி வழியும்.
அதுமட்டுமல்லாமல் இந்த வீதிகளில் நீங்கள் காலாற நடந்து சென்றால் ஏராளமான தெருவோர பப்களும், மதுக் கடைகளும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பதை பார்க்கலாம். இதில் உங்களுக்கு பிடித்த ஏதாவதொரு பப்புக்கு சென்று பாடல்களில் லயித்தபடியே மதுவை அருந்தலாம்.
இதுதவிர சில கடற்கரை குடில்களிலும் இரவு விருந்துகள் கோலாகலமாக நடந்தேறிக் கொண்டிருக்கும். ஆனால் நகரத்தை வீட்டு நெடுந்தூரம் கடற்கரைகளில் செல்வதால் திரும்பி வர கேப் வசதிகள் ஏதுமின்றி நீங்கள் தடுமாறும் நிலை ஏற்படலாம்.
கோவாவுக்கு ஓர் பயணம்
கோவா ஒரு சுற்றுலாத் தலமாக அற்புதமான விடுமுறை கால கொண்டாட்டமாகவும், அடைவதற்கு சுலபமான இடமாகவும் இருக்கிறது. இந்த நகரத்தை தேடி உலகம் முழுவதிலுமிருந்து வரும் பயணிகள், இரவு விடுதி மற்றும் கடற்கரைகளை தாண்டி கோவாவில் காணக்கூடிய சுதந்திரத்தையும், குழப்பமான வீதிகளையும், நகரின் வெப்பநிலையையும், அங்கங்கு ஒட்டிக் கொண்டிருக்கும் இந்தியத்தன்மையையுமே பெரிதும் விரும்புகின்றனர்.
மேலும், இங்கு சுற்றுலா வருபவர்கள் ஏதேனும் புத்தம் புதிய அனுபவத்தை பெற விரும்பினால், கடற்கரைகளில் ஒரு குடிலை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தங்கலாம். அப்படி தங்கும் பட்சத்தில் ஒரு சிறிய சாகச அனுபவம் உங்களை தீண்டுவது திண்ணம்.

தவாங் – எங்கும் காணமுடியாத இயற்கையின் தூய எழில்!

இந்தியாவின் வடகிழக்குப்பகுதியின் உச்சியில் வீற்றிருக்கும் அருணாசலப்பிரதேச மாநிலத்தின் மேற்கு எல்லையில் இந்த தவாங் மாவட்டம் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10,000 அடியில் கிறுகிறுக்க வைக்கும் உயரத்தில் இந்த தெய்வீக மலை எழிற்பிரதேசம் அமைந்திருக்கிறது. வடக்கில் திபெத்தையும், தென்மேற்கில் பூடானையும், மேற்கில் சேலா மலைத்தொடர்களையும், கிழக்கில் மேற்கு கேமேங் மலைகளையும் இது எல்லைகளாக கொண்டுள்ளது.

தவாங் புகைப்படங்கள் - தவாங் வார் மெமோரியல் - முகப்புத் தோற்றம் 
Image source: tawang.nic.in
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க
இங்குள்ள தவாங் மடாலயத்தின் பெயரிலேயே இந்தப்பகுதி அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தவாங் நகரத்தை ஒட்டி அமைந்திருக்கும் ஒரு மலைப்பகுதியின் விளிம்பில் இந்த தவாங் மடாலயம் ஒரு அற்புத தெய்வீக தோற்றத்துடன் காட்சியளிக்கின்றது. ‘த’ என்பது குதிரையையும் ‘வாங்’ என்பது ‘தேர்ந்தெடுத்த’ என்பதையும் குறிக்கிறது.
வழங்கி வரும் கதைகளின்படி, இந்த மடாலயம் அமைந்திருக்கும் இடமானது மேராக் லாமா லோட்ரே கியாம்ட்சோ எனும் மதகுரு வைத்திருந்த குதிரை தேர்ந்தெடுத்த ஸ்தலமாக சொல்லப்படுகிறது.
ஒரு மடாலயம் அமைப்பதற்கு ஏற்ற ஒரு ஸ்தலத்தை இந்த மேராக் லாமா லோட்ரே கியாம்ட்சோ தேடிக்கொண்டிருந்தபோது அதற்கேற்ற இடத்தை அவரால் முடிவு செய்ய இயலவில்லை.
எனவே அவர் தியானத்தில் அமர்ந்து இறைவழிகாட்டலுக்காக காத்திருக்க ஆரம்பித்தார். பின்னர் தியானம் முடிந்து அவர் கண்விழித்தபோது தனது குதிரை காணாமற்போயிருப்பதை தெரிந்துகொண்டார்.
குதிரையை தேடித்திரிந்த அவர் இறுதியில் அது ஒரு மலையின் உச்சியில் நிற்பதை கண்டார் மடாலயம் அமைப்பதற்கேற்ற இடம் குறித்த இறைவழிகாட்டல் தனது குதிரை மூலமாக கிடைத்தது போன்று அவர் உணர்ந்தார்.
எனவே ‘குதிரை தேர்ந்தெடுத்த இடம்’ எனப்பொருள்படும் ‘தவாங்’ என்ற பெயரில் அந்த ஸ்தலம் அழைக்கப்படலாயிற்று.  
தூய இயற்கைச்சூழலும், பிரமிப்பூட்டும் மலை எழிற்காட்சிகளும் நிறைந்த சொர்க்கபூமி போன்றே இந்த தவாங் நகரம் காட்சியளிக்கிறது.
சூரிய உதயத்தின் கதிர்கள் இப்பகுதியிலுள்ள சிகரங்களில் பட்டுத்தெறிப்பதும் சூரிய அஸ்தமனத்தின் வெளிச்சம் தொடுவானமெங்கும் கவிழ்ந்திருப்பதும் வேறெங்கும் காணக்கிடைக்காத தரிசனங்களாகும்.

தவாங் மலைவாசஸ்தலம் மற்றும் ஒட்டியுள்ள சுற்றுலா அம்சங்கள்

தவாங் மலைநகரத்தில் சுற்றுலாப்பயணிகள் விரும்பி விஜயம் செய்யும் அம்சங்களாக மடாலயங்கள், சிகரங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்றவை அமைந்திருக்கின்றன.
தவாங் மடாலயம், சேலா பாஸ் ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. இங்குள்ள நீர்வீழ்ச்சிப்பகுதிகள் பாலிவுட் படப்பிடிப்புகளுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
நிசப்தம் தவழும் ஏரிப்பரப்பு, ஆறுகள் மற்றும் எண்ணற்ற நீர்வீழ்ச்சிகள் நீல நிற ஆகாயத்தை பிரதிபலித்தபடி காட்சியளிப்பது பார்வையாளர்களை மெய்மறக்க செய்யும் அற்புத தோற்றங்களாகும்.
ஒரு விசேஷமான இடத்துக்கு விஜயம் செய்ய விரும்பும் தீவிர இயற்கை ரசிகர்கள் யோசிக்காமல் தங்களது அடுத்த பயணத்திற்கு இந்த தவாங் மலை வாசஸ்தலத்தை தேர்ந்தெடுக்கலாம். ஒரு சொர்க்கலோகம் போன்று இந்த தவாங் மலைநகரம் மலையுச்சியில் வீற்றிருக்கிறது.

திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள்

மற்ற அருணாச்சல பிரதேச பகுதிகளைப்போன்று இந்த தவாங் மாவட்ட மக்களின் வாழ்க்கை முறையிலும் திருவிழா கொண்டாட்டங்கள் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. இங்குள்ள மொன்பா இன மக்களின் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் ஆகியவை பெரும்பாலும் மதம் மற்றும் விவசாயம் சார்ந்ததாகவே உள்ளன.
ஒவ்வொரு வருடமும் பலவகையான திருவிழாக்கள் மொன்பா இன மக்களால் கொண்டாடப்படுகின்றன. இவற்றில் புதுவருடப்பண்டிகையான லோசார் எனும் திருநாள் பிப்ரவரி மாதத்தின் இறுதியிலோ அல்லது மார்ச் மாத துவக்கத்திலோ கொண்டாடப்படுகிறது.
தொர்கியா எனும் மற்றொரு திருவிழா ஒவ்வொரு வருடமும் உள்ளூர் பஞ்சாங்கத்தின் 11வது மாதத்தில் 28 வது நாள் கொண்டாடப்படுகிறது. இது பொதுவாக ஜனவரி மாதத்தில் இடம் பெறுகிறது.
இந்த திருவிழா மக்களுக்கு தீமை மற்றும் துரதிர்ஷடத்தை கொண்டு வரும் துஷ்ட தேவதைகளை விரட்டுவதற்கான சடங்கு திருவிழாவாக அனுஷ்டிக்கப்படுகிறது. சகா தவா எனும் மற்றொரு திருவிழாவும் இங்கு கொண்டாடப்படும் முக்கியமான திருவிழாவாகும்.
சோயெக்கோர் எனும் ஊர்வலச்சடங்கு நிகழ்ச்சி ஒன்றும் இங்குள்ள ஒட்டுமொத்த கிராம மக்களும் கலந்துகொள்ளும் சடங்குத்திருவிழாவாக நிகழ்த்தப்படுகிறது.
இது விவசாயப்பயிர்களை எந்த விதமான இயற்கைச்சீற்றங்களும் பாதிக்காமல் இருப்பதற்காக மேற்கொள்ளப்படுகிறது. உள்ளூர் பஞ்சாங்கத்தின் பதினோராவது மாதத்தில் விவாசய விளைச்சல் அதிகம் இல்லாதபோது இந்த சடங்கு நிகழ்ச்சி அனுஷ்டிக்கப்படுகிறது.

கலை மற்றும் கைவினைப்பொருட்கள்

மொன்பா என்றழைக்கப்படும் இந்த தவாங் மலைநகர மக்கள் அற்புதமான கைவினைத்திறன் வாய்க்கப்பெற்றவர்களாக உள்ளனர். பலவகையான கைவினைப்பொருட்கள், அழகுபொருட்கள், அலங்காரபொருட்கள் போன்றவை இங்குள்ள உள்ளூர் சந்தைகளில் விற்கப்படுகின்றன.
இந்த கலைப்பொருட்கள் அரசு கைவினைப்பொருள் அங்காடியிலும் விற்பனை செய்யப்படுகின்றன. மரத்தால் ஆன அழகுப்பொருட்கள், தரைவிரிப்புகள், மூங்கிலில் செய்யப்பட்ட உபயோகப்பொருட்கள் ஆகியவை இங்கு கிடைக்கும் வித்தியாசமான கைவினைப்படைப்புகளாகும்.
தங்கா பாணி ஓவியப்படைப்புகள் மற்றும் கைவினைத்தயாரிப்பு காகித வகைகள் போன்றவற்றுக்கும் இந்த தவாங் மலைநகரம் தனக்கென ஒரு பாரம்பரிய நுட்பங்களை கொண்டுள்ளது.
தொர்கியா பண்டிகையின் போது நிகழ்த்தப்படும் ஒரு வகை பாரம்பரிய நடனநிகழ்ச்சியில் அணிந்துகொள்வதற்கான மரமுகமூடிகள் இங்கு தயாரிக்கப்படும் வித்தியாசமான கலைப்படைப்புகளில் ஒன்றாகும். இந்த நடனம் தவாங் மடாலயத்தின் கூடத்தில் நடத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மரத்தால் செய்யப்படும் டோலோம் எனும் உணவு தட்டு இங்கு உருவாக்கப்படும் மற்றொரு அற்புதமான கைவினைப்பொருளாகும். இவை தவிர ஷெங்-கிளம் என்பது மரத்தால் ஆன கரண்டி, க்ரக் எனும் மரத்தால் செய்யப்படும் தேநீர் கோப்பை போன்றவையும் குறிப்பிடத்தக்கவை.

தவாங் மலைநகரத்திற்கு விஜயம் செய்ய உகந்த பருவம்

வருடத்தின் பெரும்பான்மையான மாதங்களில் இங்கு மிதமான பருவநிலையே நிலவுகிறது. பொதுவாக மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இங்கு சுற்றுலாவுக்கேற்ற இனிமையான சூழல் காணப்படும்.

தவாங் மலைநகரத்திற்கு எப்படி பயணம் மேற்கொள்வது

நாட்டின் எல்லாப்பகுதிகளிலிருந்தும் அஸ்ஸாம் மாநிலத்தின் குவாஹாட்டி மற்றும் தேஜ்பூர்வழியாக தவாங் மலைநகரத்திற்கு பயணம் மேற்கொள்ளலாம். குவஹாட்டி வரையில் உள்நாட்டு விமான சேவைகள் உள்ளன.
டெல்லியிலிருந்து இந்தியன் ஏர்லைன்ஸ், ஜெட் ஏர்வேஸ் மற்றும் சஹாரா ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் விமான சேவைகள் குவஹாட்டிக்கு தினசரி இயக்கப்படுகின்றன. இது தவிர குவஹாட்டி நகரத்துக்கு ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றும் இயக்கப்படுகிறது.