இன்னொரு மோடி ஆவாரா கேஜ்ரிவால்?

லோக்பால் மசோதாவைத் தாக்கல் செய்ய முடியவில்லை என்று அறச்சீற்றத்துடன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார். பாஜகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் பெருமகிழ்ச்சியடைந்த கிரண் பேடி, கட்சிக்குள்ளேயே மறைமுகமான எதிர்ப்பைச் சந்தித்து வருகிறார். தோல்வியின் நிழல் இன்னும் அகலாத காங்கிரஸ் கட்சி, குருட்டு நம்பிக்கையில் அஜய் மக்கானை நிறுத்தி இரண்டு கட்சிகளுக்கும் சவால் விட்டுக்கொண் டிருக்கிறது. பிற கட்சிகள் பேருக்கு வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றன. இப்படியாக, டெல்லி மாநிலத் தேர்தல் களம் சுறுசுறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது.
பாஜகவைப் பொறுத்தவரை ஆம் ஆத்மியை வீழ்த்துவதுதான் இலக்கு. காங்கிரஸைப் பற்றி அக்கட்சிக்குக் கவலை இல்லை. அக்கட்சியைப் பொறுத்தவரை மோடி எனும் பெயர்தான் தேர்தல் களத்தின் பிரம்மாஸ்திரம். மகாராஷ்டிரம், ஹரியாணா, ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் மோடியை முன்வைத்துதான் அந்தக் கட்சி போட்டியிட்டது. முதல்வர் வேட்பாளர் என்று யாரும் முன்னிறுத்தப்படவில்லை.
ஆனால், டெல்லி கதை வேறு. ராம்லீலா மைதானத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கிவைத்த மோடி, அரவிந்த் கேஜ்ரிவாலைக் கடுமையாகத் தாக்கிப் பேசியதிலிருந்தே ஆம் ஆத்மி கட்சிக்கு பாஜக எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது தெரிந்தது. வழக்கமான ஆவேசத்துடன் மோடி பேசினாலும் அவரது பிரச்சார உரை பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தவில்லை. நிலைமையை உணர்ந்த பாஜக, முதல்வர் வேட்பாளராக ஒருவரை முன்னிறுத்த முடிவு செய்தது. இதையடுத்து அவசர அவசரமாக கிரண் பேடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதல்வர் வேட்பாளராக கிரண் பேடி தேர்வுசெய்யப்பட்டது இப்படித்தான். தேர்தலில் வென்றால் மோடியின் பெயரையும், தோற்றால் (கிரண்) பேடியின் பெயரையும் பாஜக சொல்லிக்கொள்ளும் என்று ஆம் ஆத்மி கட்சி கிண்டலடித்திருக்கிறது.
அவரும் நானும் சிநேகிதர்கள்
டெல்லி பாஜகவைப் பொறுத்தவரை, மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்குத்தான் செல்வாக்கு அதிகம். டெல்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாய, விஜய் கோயல் என்று முக்கியமான தலைவர்கள் இருக்கும்போது, கிரண் பேடியை முன்னிறுத்தியதில் கட்சித் தொண்டர்களுக்குக் கடும் அதிருப்தி. கிருஷ்ணா நகர் தொகுதியில் கட்சித் தொண்டர்களை முதன்முறையாக கிரண் பேடி சந்தித்தபோது, திடீரென்று ஹர்ஷவர்தனுக்கு ஆதரவாகத் தொண்டர்கள் கோஷமிடத் தொடங்கினார்கள். சுதாரித்துக்கொண்ட கிரண் பேடி, தனக்கும் ஹர்ஷவர்தனுக்கும் இடையே இருக்கும் நட்பைப் பற்றிப் பேசிச் சமாளிக்க வேண்டிவந்தது.
அண்ணா ஹசாரேயுடன் இணைந்து ஊழலுக்கு எதிராகப் போராடிய சமயத்தில், பாஜக மீது கரிசனத்துடன் நடந்துகொள்ளுமாறு ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் பிற உறுப்பினர்களை கிரண் பேடி கேட்டுக்கொண்டதாக ஒரு பேச்சு உண்டு. கிரண் பேடிக்கு வாய்ப்பளிக்கப்பட இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுவதை அமித் ஷா திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இருந்ததாக காங்கிரஸ் தலைவர் ஆனந்த் ஷர்மா சமீபத்தில் சந்தேகம் தெரிவித்திருந்ததையும் இதன் பின்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும். அண்ணா ஹசாரேயுடன் இணைந்து போராடிய வி.கே. சிங் பாஜகவில் இணைந்ததன் தொடர்ச்சியாக கிரண் பேடி பாஜகவில் இணைந் திருப்பதை, காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் சுட்டிக்காட்டுகின்றன.
ஆம் ஆத்மி கட்சிக்குள்ளும் நிலவரம் சிலாக்கி யமாக இல்லை. “கிரண் பேடி முதல்வரானால் ஊழலை ஒழிப்பதில் திறம்படச் செயல்படுவார்” என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சாந்தி பூஷண் குறிப்பிட்டது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது மகன் பிரசாந்த் பூஷணே இதை எதிர்க்க வேண்டிவந்தது. போராட்டத்தில் சிறந்தவர் எனினும் கட்சியினரை ஒருங்கிணைப்பதில் கேஜ்ரிவாலின் திறமை, கட்சிக்குள்ளேயே சந்தேகிக்கப்படுகிறது. வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதிலும் ஆம் ஆத்மி தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
வெற்றியை உறுதிசெய்துகொள்ள மீண்டும் பிரச்சாரம் செய்ய முடிவுசெய்திருக்கிறார் மோடி. மோடிக்கு ஈடுகொடுக்க வேண்டுமென்றால், இன்னொரு மோடியாக வேண்டும் என்பதை நாடாளுமன்றத் தேர்தல் மூலம் கேஜ்ரிவால் உணர்ந்திருப்பார். ஈடுகொடுப்பாரா, இல்லை ஒதுங்கி வழிவிடுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

ஒபாமாவின் இந்திய வருகை சொல்வது என்ன?

அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா சென்றடைவதற்கு முன்னரே, அவரது வருகை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தானின் பெயர் அடிபடத் தொடங்கிவிட்டது.

உலகத் தலைவர்கள் தங்கள் வெளிநாட்டுப் பயணத்தையொட்டி, அந்தந்த நாட்டின் ஊடகங்களுக்குப் பேட்டியளிக்க வேண்டும் என்ற சர்வதேச விதிமுறைகளின்படி, இந்தியாவுக்குச் செல்வதற்கு முன்னர், இந்தியாவின் அச்சு ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்திருக்கிறார் ஒபாமா. மும்பை தாக்குதல்கள் தொடர்பாகவும், பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படும் பயங்கரவாதக் குழுக்கள் தொடர்பாகவும் தவிர்க்க முடியாத வகையில் அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன.
இந்தப் பேட்டியில் ஒபாமா பொதுவாகத்தான் பேசியிருக்கிறார். புதியதாகவோ ஆச்சரியப்படுத்தும் விதத்திலோ அல்லது குறைந்தபட்சம் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்குக்கூட ஒபாமா பேசவில்லை.
பாகிஸ்தான் மண்ணிலிருந்து அனைத்து விதமான பயங்கரவாத அமைப்புகளையும் அழித்தொழிக்க வேண்டும் என்பதுதான் தங்கள் குறிக்கோள் என்று பாகிஸ்தான் தலைவர்கள் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள். பயங்கரவாதிகள் பாதுகாப்பாகப் பதுங்கியிருக்கும் இடமாக பாகிஸ்தான் இருப்பதை ஏற்க முடியாது என்றும், மும்பை தாக்குதல்களில் தொடர்புடைய பயங்கரவாதிகள் நீதியால் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் சொல்வதை, பாகிஸ்தான் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருவதன் எதிரொலியாகத்தான் பார்க்க வேண்டும்.
அத்துடன், மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ஜகியுர் ரஹ்மான் லக்வி உள்ளிட்ட லஷ்கர் - இ - தொய்பா அமைப்பின் உறுப்பினர்கள் பலர் மீது பாகிஸ்தான் வழக்கு தொடர்ந்திருக்கிறது. 2008-ல் நடந்த அந்த அதிர்ச்சிகரமான தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் பாகிஸ்தானின் எண்ணமும்!
அதேசமயம், இந்திய அதிகாரிகளும் அந்நாட்டின் தேசியவாத ஊடகங்களும், ஒபாமாவிடமும் அமெரிக்க அதிகாரிகளிடமும் பாகிஸ்தான் தொடர்பான கருத்தைப் பெற முயற்சி செய்யும். இதன் மூலம் பாகிஸ்தான் குறித்து இன்னும் மோசமான விதத்தில் சித்தரிக்க அவர்களது கருத்துகள் பயன்படுத்தப்படும். ஒருவேளை தாங்கள் விரும்பிய பதில் கிடைக்கவில்லை என்றால், யாராவது ஒரு இந்திய அதிகாரி பரபரப்பாக எதையாவது சொல்வார். அடுத்த 3 நாட்களுக்கு அதுதான் தலைப்புச் செய்திகளில் அடிபடும்!
அதேசமயம், இது தொடர்பாக என்ன பதிலளிப்பது என்பதில் பாகிஸ்தான் அரசுக்கும் வெளியுறவுத் துறைக்கும் குழப்பம் ஏற்படும். பதிலே சொல்லாமல் இருந்தால் பாகிஸ்தான் பலவீனமாக இருப்பதாக முத்திரை குத்தப்படலாம். அல்லது வெளியுறவுத் துறை மூலம் எதையாவது சொல்ல முயன்றால், அது இந்தியாவுடனான வார்த்தைப் போருக்கு வித்திடலாம்.
மிகவும் கஷ்டமான விஷயம்தான். சொல்லப்போனால், இந்த விஷயத்தில் மவுனமாக இருப்பதுதான் நல்லது. ஒபாமா இந்தியாவுக்குச் சென்றால் அது வணிக நிமித்தமான பயணம் என்று சொல்வது; அவர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தால் அது இருதரப்பு உறவு தொடர்பானது என்று சொல்வது! அர்த்தமற்ற வகையில் இடைவிடாமல் இப்படிப் போட்டி போடுவதிலிருந்து இந்தியாவும் பாகிஸ்தானும் வெளியே வர வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, அமெரிக்கா - இந்தியா மாநாட்டில் அந்த இரு நாடுகளும் விவாதிக்கவிருக்கும் விஷயங்களில், பாகிஸ்தான் அதிகாரிகள் சொல்லும் கருத்துகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.
ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் நிறுத்த வேண்டும் அல்லது அதை வெளிப்படையாக அறிவித்தாலும் நல்லதுதான். பாகிஸ்தான் இந்தியா இடையேயான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதுதான் அது. இரு நாடுகளுக்கும் இடையே, விவாதிக்கப் பல முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. இந்தியாவுடனான உறவில் முக்கியமானது என்பதைவிட பாகிஸ்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் முக்கியமான விஷயம் பாகிஸ்தானுக்குள் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிடுவதுதான். அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கும் எதிராகப் போரிடுவதுதான்!

அறிவில்லாதவர் எனச் சொல்லலாமா?

  • ஸ்டீபன் வில்ஷ்ரைன் வரைந்த ஓவியம்
    ஸ்டீபன் வில்ஷ்ரைன் வரைந்த ஓவியம்

உங்களிடம் ஒரு கேள்வி கேட்டால் அதற்குப் பதில் தெரிந்திருந்தும் சட்டெனப் பதில் சொல்ல முடியாமல் வார்த்தைகளைத் தேடுவீர்களா?
# நேர நிர்வாகத்தில் பின்தங்கியுள்ளீர்களா?
# நீங்கள் பார்த்தவை நினைவில் நிற்கும்போது, கேட்டவை மறந்து போகின்றனவா?
# நீங்கள் ஒழுங்கற்று இருப்பதாக அடிக்கடி திட்டு வாங்குவதுண்டா?
# எழுத்துப் பிழைகள் அதிகம் வருமா?
மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உங்களிடம் ’ஆம்’ என்ற பதில் இருந்தால், ஐகியூ குறைவானர், படிப்பில் மந்தமானவர் போன்ற பேச்சுகளுக்கு ஆளாகியிருக்கக்கூடும். ஆனால் சோர்வடையத் தேவையில்லை. அடுத்து வரும் கேள்விகளுக்கு உற்சாகமாக ஆம் அல்லது இல்லை எனச் சொல்லுங்கள்.
# இசை, நடனம், ஓவியம் போன்ற கலைகள் உங்களுக்குக் கைவந்த கலையா?
# வார்த்தைகளாகச் சிந்திக்காமல் ஒரு கதை போலச் சிந்திப்பீர்களா?
# ஒரு புதிருக்கு எல்லோரும் ஒரு விதமான தீர்வைச் சொல்லும்போது நீங்கள் மட்டும் வித்தியாசமான தீர்வைச் சொல்லியதுண்டா?
# ஒரே தடவைதான் ஒரு இடத்திற்குப் பயணித்திருந்தாலும் அடுத்த முறை அவ்விடத்துக்குச் செல்லும் வழியைத் துல்லியமாகச் சொல்ல முடிகிறதா?
# புதிய கருவியைக் கண்டதும், பிரித்துப் போட்டு அதை ஆராய்ந்ததுண்டா?
இங்குள்ள அனேக கேள்விகளுக்கு ‘ஆம்’ எனச் சொல்லியிருந்தால் நீங்கள் காட்சி ரீதியான அறிவு படைத்தவர் என்று அர்த்தம். படிப்பு வராமல் காட்சி ரீதியான அறிவு இருந்து என்ன பிரயோஜனம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உளவியல் நிபுணர் கார்டனரின் ஆய்வுகள் அறிவு வெளியில் அபூர்வமான திறப்புகளுக்கு வழிகோலுகின்றன.
1970-களில் பிராஜக்ட் சீரோ என்ற திட்டத்தில் இணைந்த கார்டனர் மனித மனத்தில் ஆற்றலைக் கண்டறியும் சோதனைகள் செய்யத் தொடங்கினார். இதில் அறிஞர்கள், விஞ்ஞானிகள், முட்டாள் என முத்திரை குத்தப்பட்டவர்கள், மன நலம் குன்றியவர்கள், மாற்றுத் திறனாளிகள் எனப் பலவிதமான மனிதர்களின் மனத்தை ஆராய்ந்துவந்தார்.
தனி மனிதரின் உளவியல் செயல்பாடுகள், நடத்தை, குணங்களை ஆராயும் சைக்கோமெட்ரிக் தேர்வு முறையைப் பின்பற்றியபோது சில ஆச்சரியமூட்டும் அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்தார். அவற்றில் குறிப்பிடத்தக்கது ஆடிசம், டிஸ்லெக்சியா போன்ற மனநலக் குறைபாடு உடையவர்களுக்குக் காட்சி ரீதியான அறிவுத்திறன் அபாரமாக இருக்கும் என்பது.

உலகை மாற்றும் மாற்றுத் திறனாளிகள்
உளவியல் தளத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள்தான் கார்டனரை முதன் முதலில் கல்வி அமைப்பை நோக்கி நகர்த்தின. அதிலும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஆராய்ந்த போதுதான் பன்முக அறிவுத்திறன் என்ற கோட்பாடே கார்டனருக்கு உதித்தது. குறிப்பாகக் காட்சி ரீதியான அறிவுத்திறன் என்ற ஒன்று பிற அறிவுகளைச் சாராமல் தனித்து இயங்கக்கூடியது என்று அவர் கண்டறிந்தது ஆட்டிசம் உடையவர்களை ஆராய்ந்த பின்புதான். ஆட்டிசம் உடையவர்களின் காட்சி ரீதியான அறிவுத்திறனுக்கு இதோ ஓர் வாழும் உதாரணம்.
கேமரா மனிதர்
பல்லாயிரம் அடி உயரத்தில் வானில் பறக்கும் ஹெலிகாப்டருக்குள் உட்கார்ந்துகொண்டு மேலிருந்து கீழே ஊரை உற்றுப்பார்க்கிறார். நதி, மலை, மரங்கள், கட்டிடங்கள் என அத்தனையும் எறும்புகள் போலத் தெரிகின்றன. சில நிமிடங்கள் ஹெலிகாப்டரில் இருந்தே பார்க்கிறார். வீடு திரும்பியதும் அவர் மனதில் பதிந்த காட்சியைத் தன் கருப்பு மை கொண்ட பேனாவால் சரசரவென வரையத் தொடங்குகிறார். சில மணித் துளிகளில் வெள்ளைப் பலகையில் நியூயார்க் நகரம் கருப்புக் கோடுகளில் எழும்புகிறது.
மீண்டும் அதே இடத்திற்குச் சென்று அவர் வரைந்த ஓவியத்தோடு ஒப்பிட்டால் ஒரு புகைப்படம் போலத் தத்ரூபமாக அத்தனை அம்சங்களையும் வரைந்திருக்கிறார். டோக்கியோ, ரோம், ஹாங்காங், துபாய், லண்டன், சிட்னி எனப் பல்வேறு பிரசித்தி பெற்ற நகரங்களை வானில் பறக்கும் பறவை போலப் பார்த்துவிட்டு சித்திரமாக வரைந்துள்ளார். மனிதக் கேமரா எனக் கொண்டாடப்படும் இவர் பெயர் ஸ்டீபன் வில்ஷ்ரைன்.
ஸ்டீபன் வில்ஷ்ரைன் கலை உலகத்துக்கு ஆற்றிய தொண்டினைப் பாராட்டி 2006-ல் பிரிட்டன் அரசு எம்பிஇ பட்டம் வழங்கியது. மூன்று வயதுவரை பேசாத ஸ்டீபன் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் எனக் கண்டறியப்பட்ட பின்னர் சிறப்புப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பேச்சு, எழுத்துத் திறன் இல்லை என்றாலும் ஸ்டீபன் ஓவிய நாட்டமுடையவர் என்பதைப் புரிந்து கொண்ட அவர் பள்ளி ஆசிரியர் அவரைப் பேசவைக்க ஒன்று செய்தார்.
ஸ்டீபனின் ஓவியப் பொருள்களை ஒளித்து வைத்துவிட்டார். எப்படியாவது ஓவியம் வரைய வேண்டும் என்ற பதைபதைப்பில் ஸ்டீபன் முதன்முதலில் பேசிய சொல், “பேப்பர்”. அப்பொழுது அவருக்கு ஒன்பது வயது. அதன் பின் அவருடைய பேச்சுத் திறனும் ஓவியத்தோடே வளர்ந்தது.
வாசித்தல், எழுதுதல், மற்றும் கணித அறிவு இவை கைவரப் பெற்றவர்கள் கல்விக் கூடங்களில் சிறந்த மாணவர்களாகக் கொண்டாடப்படலாம். ஆனால் உலகம் இயங்க இவர்கள் மட்டும் போதாது. அறிவியல், கலை எதுவானாலும் புதிய கண்டுபிடிப்புகள், புதிய படைப்புகள் அபரிமிதமாக வரவேண்டும் என்றால் காட்சி ரீதியான அறிவுத்திறன் போன்ற பல்வேறு திறன்கள் போற்றி வளர்க்கப்பட வேண்டும்.

வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்!

லீலா அல்கார்ன்
லீலா அல்கார்ன்
மூன்றாம் பாலினத்தோரை நடத்தும் விதத்தில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் அதிக வேற்றுமை இல்லை.
ஏற்றப்படாத ஒரு மெழுகுவர்த்தியை என் கைகளில் வைத்தார்கள். நூற்றுக் கணக்கானவர்கள் இருக்கைகளில் அமைதியாக உட்கார்ந் திருந்தார்கள். கிரீன்விச் கிராமத்தில் இருந்த எல்.ஜி.பி.டி. சமூக மையத்தில் நவம்பரில் நடந்த ‘மூன்றாம் பாலினர் நினைவுநாள் நிகழ்ச்சி’ அது.
ஆண்டுதோறும் இது நடைபெறுகிறது. கொலை செய்யப்பட்டோ, தற்கொலை செய்துகொண்டோ இறக்கும் மூன்றாம் பாலினர் நினைவாக அந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இறந்தவர்களின் நினைவாக அந்த நாளைக் கடைப்பிடிப்பதற்கு பதிலாக, வெவ்வேறு விதமான மக்களைக் கொண்ட நம்முடைய சமூகத்தவரின் வெற்றிகளைக் கொண்டாடும் நாளாக அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே மூன்றாம் பாலினத்தவளாகிய என்னுடைய விருப்பம். ஆனால் ஆண்டுக்காண்டு இறப்பு அதிகரித் துக்கொண்டே போகிறது, எனவே நானும் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றினேன்.
லீலா அல்கார்ன்
கடந்த கிறிஸ்துமஸ் முடிந்த ஒரு வாரம் கழித்து, 17 வயது நிரம்பிய லீலா அல்கார்ன் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்து கிங்ஸ் மில்ஸ் பகுதியில் இருந்த தனது வீட்டைவிட்டு நள்ளிரவில் வெளியேறினார். மாநில நெடுஞ்சாலையில் டிரெய்லர் இணைக்கப்பட்ட டிராக்டர் வந்தபோது குறுக்கே பாய்ந்து தன்னை மாய்த்துக்கொண்டார். இறப்பதற்கு முன்னால் டம்ப்ளர் என்ற சமூக வலைதளத்தில் விடுத்த தனது இறுதிச் செய்தியில், “தயவுசெய்து வருத்தப்படாதீர்கள்; நல்லதற்காகத்தான் இதைச் செய்கிறேன். நான் வாழ்ந்திருக்கக்கூடிய வாழ்க்கை வாழத்தக்கதல்ல, காரணம் – நான் மூன்றாம் பாலினத்தவள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஆணாகப் பிறந்திருந்தாலும் தன்னைப் பெண்ணாக உணர்ந்து அவ்வாறு வாழ விரும்பிய லீலாவை, பழமையான எண்ணங்களில் ஊறிய அவருடைய பெற்றோர் அவ்வாறு வாழ அனுமதிக்கவில்லை. “நான் (என் விருப்பத்தை) சொன்னபோது என்னுடைய தாய் கடுமையாக கோபம் அடைந்தாள். ‘இப்படியெல்லாம் நினைப்பது சில காலத்துக்குத்தான், நீ உண்மையாகவே பெண்ணாக இருக்க முடியாது. கடவுள் தவறாகப் படைக்க மாட்டார். நீதான் உன்னைப் பற்றித் தவறாகக் கருதிக்கொண்டிருக்கிறாய்.’ இதைப் படிக்கும் அன்பு பெற்றோர்களே, இதை உங்களுடைய குழந்தைகளிடம் கூறாதீர்கள், அப்படி நீங்கள் கூறினால், அது வேறொன்றையும் செய்யாது, அவர்கள் மேலும் தங்களையே வெறுக்கத் தொடங்குவார்கள்; என் விஷயத்தில் அதுதான் நடந்தது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரு வாய்ப்பு
லீலா சொல்வதில் தவறேதும் இல்லை. உலகம் பல விதமான மனிதர்களைக் கொண்டது. அவர்களில் ஒரு வகையினர்தான் மூன்றாம் பாலினர். தான் எதுவாக இருப்பதாக லீலா பெருமையாக நினைத்தாளோ அதுவாகவே கருதிக்கொள்ள உலகம் அவளுக்கு ஒரு வாய்ப்பைத் தரவில்லை. அந்த உலகை மாற்ற ஒரே வழி, தான் சாவதுதான் என்ற தவறான முடிவை லீலா எடுத்துவிட்டாள்.
தற்கொலை என்பது மூன்றாம் பாலினரிடையே நிரந்தரமாகிவிட்டது. தற்கொலை செய்துகொள்ளும் மனப்போக்கு அதிகம் கொண்டவர்கள் என்ற நிலையில் மூன்றாம் பாலினர் உள்ளார்கள். மூன்றாம் பாலினரில் 40% பேர் ஏதாவதொரு கட்டத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்கள் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
நானும் அதில் ஒருத்தி. 1986-ம் ஆண்டு, நோவா ஸ்காட்டியா என்ற இடத்திலிருந்து அட்லான்டிக் கடலில் குதிக்க முடிவு செய்து தயாராகிவிட்டேன். சட்டென்று அடுத்த கணம் ஏதோ தோன்றி அங்கிருந்து திரும்பி நடந்தேன், இதோ உங்கள் முன் நிற்கிறேன்.
தொடக்க காலத்திலேயே தாங்கள் விரும்பும் பாலினமாக மாறிவிடுவதே மூன்றாம் பாலினத் தவர்களுக்கு நல்லது. ஆனால், எங்களில் பெரும் பாலானவர்களுக்கு அது இயலாத காரியம், காரணம் குடும்பத்தினர் அந்த முடிவை ஆதரிப்பதே இல்லை. மேற்கொண்டு காலடி எடுத்து வைக்கவே அச்சமூட்டும் புதிய பாதையில் நடக்க பண வசதி உள்ளிட்ட ஆதாரங்கள் மூன்றாம் பாலினருக்கு அவசியம். இந்த நிலையில் எதிர் காலத்தின் மீது நம்பிக்கை வைத்து உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்வதற்கான உத்திகளைத் தேர்ந்தெடுப்பதே சிறந்த வழியாக இருக்க முடியும். எனக்கு உதவியாக இருந்தவை லீலாவுக்கு உதவிகரமாக இருந்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், நான் எப்படி இவ்வளவு தூரம் கடந்து வர முடிந்தது என்று சிந்தித்துப் பார்க்க கடந்த வார அவகாசம் உதவியது.
காப்பாற்றிய புத்தகங்கள்
என்னுடைய வாழ்க்கையை புத்தகங்கள் ஓரளவுக்குக் காப்பாற்றின. ஜேன் மாரிஸ் எழுதிய ‘கானன்ட்ரம்’ என்ற நூல் என்னைப் போன்றவர்கள் வாழக்கூடிய இன்னொரு விண்மீன் கூட்டத்தை எனக்குக் காட்டியது. லீலா உயிரோடு இருந்திருந்தால் அவரிடம் ஜேனட் மாக் எழுதிய ‘ரீடிஃபைனிங் ரியல்நெஸ்’, கேட் போர்ன்ஸ்டெயின்ஸ் எழுதிய ‘ஹலோ குரூயல் வேர்ல்ட்’ என்ற புத்தகங்களையும் கொடுத்திருப்பேன்.
அவை நிச்சயம் அவரிடம் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். புத்தகங்களைப் படிப்பது எனக்கு மன ஆறுதலைத் தந்தது என்றால் எழுதுவதும் அப்படியே. புத்தகங்களைப் படிப்பது, பத்திரிகைகளுக்கு எழுதுவது, புதுப்புது உலகங்களைக் கண்டுபிடிப்பது போன்றவை என் சிந்தனையை நல்ல விதமாக திருப்பிவிட உதவிகரமாக இருந்தன. எதையும் விவரமாக எழுதுவது என் மனக் குழப்பங்களை ஒழுங்குபடுத்திக்கொள்ள உதவியது.
சில வேளைகளில் உரத்த குரலில் கத்துவேன், அது என்னுடைய மன அழுத்தங்களை வெளியேற்றும் வடிகாலாக உதவியிருக்கிறது. எங்களுடைய வீட்டு பியானோவை வாசிக்கத் தொடங்கி அதன் கம்பி அறுந்துபோகும் வரையில் உச்சஸ்தாயியில் வாசித்துக்கொண்டிருப்பேன். ஒரு இசைக் குழுவிலும் சேர்ந்து பாடிவந்தேன். அவர்கள் 2 பாடல்களைப் பிரதானமாகப் பாடுவார்கள். ‘உன்னுடைய அன்பு வெள்ளத்தைப் பாய விடு’ என்பது அதில் ஒன்று. நான் பாடுவதே, நான் வாழ்கிறேன் என்று எனக்கு நானே ஊர்ஜிதப்படுத்திக்கொள்வதற்காக. அதே சமயம் என்னுடைய மன வலிகளை நான் உணர்ந்த வகையில் வெளிப்படுத்தவும் பாடினேன். சில குளிர்கால இரவுகளில் வானத்தைப் பார்த்துக் கூச்சலிடுவேன். என்னுடைய குரலே எதிரொலியாக என்னை நோக்கித் திரும்பி வரும்.
படி, எழுது, கத்து என்பது சாப்பிடு, பிரார்த்தனை செய், அன்புடனிரு என்பதைப் போன்ற அன்றாட சடங்கல்ல. ஆனால், என்னைப் பொறுத்தவரை மிகவும் உதவியாக இருந்தன. 1970-களில் எனக்குக் கிட்டாத பல வசதிகள் இப்போது நவீன காலத்தில் வந்துள்ளன. வாழ்க்கையில் மிகவும் சோகமான தருணங்களை எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டவர்கள் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் இணையதளங்கள் இன்று வந்துவிட்டன.
லீலாவின் இறுதி ஆசைகளில் ஒன்றே ஒன்றை நம்மால் நிறைவேற்ற முடியும்: “என்னுடைய மரணம் சிலருக்கு அர்த்தமுள்ளது. இந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்ட மூன்றாம் பாலினத்தவரில் மேலும் ஒரு எண்ணிக்கையை என்னால் கூட்ட முடிந்திருக்கிறது. யாராவது ஒருவர் இதைப் பார்த்து, ‘போதும், இந்த எண்ணிக்கையோடு நிறுத்துங்கள், இதோடு இது நிற்க வேண்டும்’ என்று சொல்ல வேண்டும். நானும் கேட்டுக்கொள்கிறேன், சமூகமே இத்தோடு நிறுத்து, தயவுசெய்து!”

இந்தியா கொண்டாடும் விவசாயிகள் திருவிழா!

கோப்புப் படம்: ஜி.என்.ராவ்
கோப்புப் படம்: ஜி.என்.ராவ்
ஜனவரி 15 எனக் குறிப்பிட்ட தேதியில் வரும் ஒரே தமிழர் பண்டிகை - பொங்கல் திருநாள். இது, தெற்குப் பகுதியில் இருந்து வடக்குப் பகுதிக்கு சூரியனின் இடப்பெயர்ச்சியை மையமாக வைத்து அமைந்தது. இதனால், வருடந்தோறும் வரும் இந்துப் பண்டிகைகளின் தேதிகளில் கண்டிப்பாக மாற்றம் இருக்கும். ஆனால், சூரியன் பெயரில் கொண்டாடப்படும் பண்டிகையான பொங்கல் தேதியில் மட்டும் பெரும்பாலும் மாற்றம் இன்றி, அது சரியாக ஜனவரி 15 அன்றே வருகிறது. இதற்கு, இது, இந்தியாவில் அறுவடைத் திருநாளாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகளால் கொண்டாடப்படுகிறது.
இது, அறுவடைத் திருநாளாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகளால் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பொங்கலை, வட மற்றும் மத்திய இந்தியாவில் 'மகர சங்ராந்தி' என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். இந்திக் காலண்டரின் மாக் மாதத்தின் முதல்நாளில் வருவதாலும் இதை மகர சங்ராந்தி என்றழைக்கிறார்கள். ஆனால், இந்தப் பண்டிகையில் பெரும்பாலான மாநிலங்களில் அரசு விடுமுறை கிடையாது. இதை வைத்தே மகர சங்ராந்தி அம் மாநிலங்களில் கொண்டாடப்படும் விதத்தை நாம் ஓரளவுக்குப் புரிந்து கொள்ளலாம்.
இது, தென் மாநிலங்களில் ஓரளவுக்கு தமிழகத்தை போல் இருப்பினும், மற்ற மாநிலங்களில் சுற்றுச்சூழல், பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் விளைச்சல்களைப் பொறுத்து அங்கு கொண்டாடப்படும் முறைகளிலும் நிறைய வேறுபாடு உண்டு. இதற்காகக் கூறப்படும் பெயர்களும் வேறாக இருக்கும் இந்தப் பண்டிகை நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் எப்படி எப்படி கொண்டாடப்படுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
உபி, பீகார் மற்றும் ராஜஸ்தான்
உபி, பீகார், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அழைக்கப்படுகிறது. இந்நாளில் தம் பாவங்கள் தீர்ந்து மோட்சம் கிடைக்கும் என அருகிலுள்ள கங்கை, யமுனை, நர்மதா போன்ற புண்ணிய நதிகளில் குளித்து முடிப்பதே தலையாய கடமையாகக் கருதுகிறார்கள். இதனால், மகர சங்ராந்தியின் குதூகலம் மற்றும் கொண்டாட்டங்கள் நதிக்கரைகளில்தான் பார்க்கமுடியும். இங்கு ஊஞ்சல்களை அமைத்தும் ஆடி மகிழ்கிறார்கள். குளித்த பின் தானியங்களை பிராமணர்களுக்குத் தானமாக வழங்கிவிட்டு, இனிப்புகளை செய்து சாப்பிடுகிறார்கள். இவற்றில் உடலுக்குச் சூட்டைத் தரும் வெல்லம் மற்றும் எள் தவறாமல் இடம்பெறும். இது குளிர்காலம் என்பதே இதன் முக்கியக் காரணம்.
இத்துடன் கேழ்வரகுக் கிச்சடியும் செய்து சாப்பிடுகிறார்கள். ஒரே நாளில் முடிந்துவிடும் இவர்களுடைய இந்தப் பண்டிகையில் புத்தாடைகள் அணியப்படுவது இல்லை. கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் உண்டு. அதில், அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் உணவுப் பொருட்களை பூஜையில் படைக்கிறார்கள். சூரியன் தெற்கு திசையிலிருந்து வடக்கு நோக்கி நகரத் துவங்கும் நாள் இது. எனவே, பெரும்பாலான கும்பமேளாக்கள் இந்த நாளில்தான் தொடங்குகின்றன. குறிப்பாக இந்த நாளில் தந்தை மற்றும் மகனுக்கு இடையிலான உறவு வலுக்கும் என்றும், குடும்பப் பொறுப்பை மகன் ஏற்று நடத்தும் நாளாகவும் இது அனுசரிக்கப்படுகிறது. இந்தப் பண்டிகையில் செய்யப்படும் இனிப்புகளின் பெயர் சிக்கி (வேர்க்கடலை மற்றும் வெல்லம்), கஜக் (வெள்ளை எள் மற்றும் வெல்லம்), தில்கா லட்டு (வெள்ளை எள், கோவா மற்றும் வெல்லம்). பீகாரில் மட்டும் அவலுடன் தயிர் மற்றும் வெல்லம் கலந்து ஒரு பலகாரம் செய்து சாப்பிடுகிறார்கள்.
ஒரிசா மற்றும் சத்தீஸ்கர்
ஒரிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் மட்டும் ஆட்டம், பாட்டம் என இதை ஒரு வாரம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள் என்பதால், தம் அறுவடைகளை முடித்த லாபம், ஒவ்வொரு குடும்பத்தினரின் கைகளிலும் கண்டிப்பாக இருக்கும். எனவே, இந்த சந்தோஷத்தைக் கொண்டாட ஆண், பெண் இருபாலருமே மது அருந்தி மயங்கி இருப்பதும் பண்டிகையின் ஒரு அங்கமாகக் கருதுகிறார்கள். இந்த நாளுக்காக ஒரிசாவின் பூரி ஜெகநாத் கோயிலில் இரண்டுமுறை அலங்காரங்கள் செய்து சிறப்புப் பூஜைகள் செய்கிறார்கள். சத்தீஸ்கர் கோயில்களிலும் சிறப்புப் பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுவது உண்டு.
மகராஷ்டிரா
மகராஷ்டிராவில் இந்தப் பண்டிகையின் போது கருப்பு எள் மற்றும் வெல்லம் கலந்த இனிப்புகளை பரிமாறிக் கொள்வார்கள். கருப்பு எள்ளை மராத்தியர்கள் மிகவும் புனிதமாகக் கருதுவதால், அன்றைய நாளில் சில பழமைவாதிகள் கருப்புநிற உடைகளை அணிவதையும் ஒரு பாரம்பரியமாக கடைபிடிக்கிறார்கள். குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சாதாரண புத்தாடை உடுத்துவார்கள். சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் கரும்பு, வெல்லம் மற்றும் எள்ளை பானையில் வைத்து பூஜை செய்வார்கள். நகரவாசிகள் மாலையில் பூஜை செய்து வெல்லம், எள்ளு மற்றும் கரும்புத் துண்டுகளை ஒரு சிறிய பானையில் போட்டு பூஜை செய்வார்கள். இதற்கு அருகிலுள்ள பெண்களை ஒற்றைப்படை எண்ணிக்கையில் அழைத்து, அவர்களுக்கும் சிறுசிறு பானைகளில் வெல்லம், கரும்பு மற்றும் எள் ஆகியவற்றைப் போட்டுக் கொடுக்கிறார்கள். இந்த நாள் முதல் நல்ல காற்று இங்கு வீசத் தொடங்குவதால், பல்வேறு நிறங்களில் விதவிதமானப் பட்டங்களை செய்து மாலையில் பறக்கவிட்டு விளையாடும் பழக்கம் அவர்களிடம் உள்ளது.
குஜராத்
இந்த மாநிலத்திலும் மகர சங்ராந்தி என்ற பெயரில் கொண்டாடினாலும், பட்டங்கள் பறக்கவிடும் பண்டிகை என்றுதான் அதைக் கூற வேண்டும். அந்த அளவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் நபருக்கு ஒரு பட்டம் எனக் காலை முதல் மாலை வரை பறக்க விட்டபடியே இருக்கிறார்கள். பட்டங்களுக்காகவே மகர சங்ராந்தி அன்று அகில உலக அளவில் பட்டங்கள் பறக்கவிடும் போட்டிகளை அகமதாபாத், ராஜ்கோட், பரோடா மற்றும் சூரத் ஆகிய நகரங்களில் அரசே ஏற்று நடத்திவருகிறது. ஏராளமானவர்கள் கலந்துகொள்ளும் இந்தப் போட்டியில் பார்வையாளர்களாக வரும் வெளிநாட்டவர்களும் பட்டம் விடுவதற்காகப் பெரும்பாலான எண்ணிக்கையில் பங்கேற்பது உண்டு. இந்த நாளில் விதவிதமான டிசைன்களில், பலவர்ண நிறங்களில் பறக்க விடப்படும் பட்டங்களைப் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். அன்றைய தினம் அரசு விடுமுறை என்றாலும், புத்தாடைகள் அணிவது கிடையாது. இங்குள்ளவர்களுக்கு பலவகைகளான காய்கறிகள் சேர்த்து சமைக்கப்படும் 'உண்டியா' எனும் பதார்த்தத்தை பூரியுடன் சேர்த்து சாப்பிடுவதென்றால் கொள்ளைப் பிரியம். இவற்றை செய்து விற்பதற்கென்றே சாலையோர, தெருவோர திடீர் கடைகள் உருவாகி விடும்.
பஞ்சாப், டெல்லி, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஹரியானா
பஞ்சாப்பில் 'லொஹரி' என்றழைக்கிறார்கள். இந்த மாநிலத்தில் இருந்து பிரிந்த இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஹரியானா, பஞ்சாபிகள் அதிகம் வாழும் டெல்லி ஆகிய மாநிலங்களிலும் இதை லொஹரி என்றே கொண்டாடுகிறார்கள். ஆனால், இது பஞ்சாபிகளின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரங்களை முன்நிறுத்தும் பண்டிகையாக இருப்பதால், அங்குள்ள அனைத்து மதத்தவர்களும் இதைக் கொண்டாடுகிறார்கள். இந்த லொஹரி 13ஆம் தேதி இரவு துவங்கி மறுநாள் வரை நீடிக்கும். குறிப்பாக 13.ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு குடும்பத்தார் அனைவரும் வந்து, தீயை மூட்டி அதைச் சுற்றிலும் அமர்ந்து கொள்வார்கள். தெருவாசிகள், இப்படி பொது இடங்களில் தீமூட்டி அமர்ந்துகொண்டு கொண்டாடுவது உண்டு. இதற்கேற்றபடி இந்தக் காலங்களில் அங்கு கடும் குளிர் நிலவுகிறது. அப்போது பாரம்பரிய பாடல்களுடன் நடனமாடி மகிழ்கிறார்கள். இங்கும் எள் மற்றும் வெல்லம் கலந்து செய்த இனிப்பு வகைகள் பரிமாறப்படும். அந்த வருடம் ஆண் பிள்ளைகள் பிறந்த பஞ்சாபிகளின் வீடுகளில் லொஹரி சிறப்புத் திருவிழாவாக இருக்கும். இந்த நாளில் வேண்டுதல் செய்துகொள்வதும் உண்டு. எள், வெல்லம் மற்றும் பால் கலந்த இனிப்புகள் அதிகம் செய்வார்கள்.
அசாம்
இம் மாநிலத்தில் 'போஹாலி பிஹு' (உணவுப் பண்டிகை) என்ற பெயரில் அசாமிய காலண்டரின் 'மாக்' மாதத்தின் முதல் நாளாக ஜனவரி 15-ல் கொண்டாடுகிறார்கள். இதன் முதல் நாள் விசேஷம் மாலையில் உருக்கா என்ற பெயரில் தொடங்குகிறது. அந்த நாளில் சொந்தபந்தங்கள் அனைவரும் அல்லது குடும்பத்துடன் ஒரே இடத்தில் கூடி இரவு விருந்தை அசைவ உணவுடன் உண்டு மகிழ்வார்கள். இரண்டாவது நாள், விடியலில் குளித்து மூங்கில் மற்றும் வைக்கோல் கொண்டு 'மேஜி' என்றழைக்கப்படும் ஒன்றை பிரமிடுகள் வடிவில் செய்வார்கள். இதை அறுவடை செய்த நிலங்களில் அமைத்து பூஜை செய்து நாம் போகியில் எரிப்பதுபோல் எரித்து விடுவார்கள். ஆனால், இதில் அவர்கள் பழைய சாமான்கள் எதையும் போடுவதில்லை. பிறகு பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுகிறார்கள். அன்றைய தினம், அவலில் தயிர் கலந்து ஒரு உணவுப்பண்டம் மற்றும் எள்ளில் வெல்லம் கலந்து ஒரு இனிப்பு சாப்பிடுவார்கள். சிம்பிளாக சாப்பிடுவார்கள். இந்தப் பண்டிகையில் அக்கம், பக்கம் உள்ளவர்கள் ஒருவொருக்கொருவர் அழைத்துக்கொள்வார்கள். அசாம் மாநில அரசு இரண்டு நாள் அரசு விடுமுறை அளிக்கிறது. இங்கு இப்பண்டிகைக்குப் புத்தாடைகள் அணிவது உண்டு.
ஆந்திரா
இந்தப் பண்டிகையில் முக்கியமாக முன்னிறுத்தப்படுவது பலவர்ணக் கோலங்கள். இங்கும் மகர சங்ராந்தி என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும், பெரும்பாலும் அது நம் பொங்கல் திருநாளைப் போல்தான். முதல் நாள் போகி, மறுநாள் மகர சங்ராந்தி மற்றும் மூன்றாவது நாள் கன்னுமா என மூன்று நாட்களுக்குக் கொண்டாடுகிறார்கள். போகியில் பழையனவற்றை எரித்து, மாலையில் கொலு வைக்கிறார்கள். மகர சங்ராந்தி அன்று காலையில் குளித்து பூஜை செய்து, பானையில் சூரியப் பொங்கல் வைத்து உண்டு மகிழ்கிறார்கள். இவர்களின் கன்னுமா என்பது மாட்டுப் பொங்கலாகும். முதல் இருநாள் மட்டும் அரசு விடுமுறை என்றாலும், கிராமங்களில் கன்னுமாதான் மிகவும் விசேஷம். இந்த நாளில் மாடுகளின் ரேஸ், கோழி சண்டை போன்ற கிராம விளையாட்டுக்கள் உண்டு. மகர சங்ராந்தி வரை இதற்கு முன்பாக வரும் மாதம் முழுவதும் விடியற்காலை பூம்பூம் மாட்டுடன் வருபவர்களுக்கு தானியங்களை பிச்சையாக அளிப்பார்கள்.
கர்நாடகா
மகர சங்ராந்தி என்ற பெயரிலேயே அழைக்கப்படும் பொங்கல் இங்கு ஒரேஒரு நாள் மட்டும் கொண்டாடப்படுகிறது. அரசு விடுமுறையும் கிடைக்கும் இது விவசாயிகள் இடையே மிகவும் பிரபலம். அன்றைய தினத்தில் விவசாயிகள் குளித்துவிட்டு அறுவடை தானியங்களுடன் தங்கள் வேளாண்மைக் கருவிகளையும் வைத்து பூஜை செய்வார்கள். இந்தப் பூஜையில் வைக்கப்பட்ட இளநீர்களை எடுத்துச்சென்று அருகிலுள்ள மலைகள் மீதுஏறிநின்று வேகமாக கீழே தூக்கி வீசுவார்கள். அது விழும் தூரத்திற்கு தங்கள் கிராம எல்லைகள் விரிந்து வளரும் என்பது நம்பிக்கை. மைசூர் மற்றும் மாண்டியா பகுதிகளில் மட்டும் மாட்டு ரேஸ் நடக்கிறது. இதுபோல், வெவ்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான சடங்குகள் உண்டு. இதை நகரங்களில் பிராமணர்கள் மட்டும் புத்தாடை அணிந்து சற்று விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். மற்றபடி பானையில் பொங்கல் வைக்கும் பழக்கம் இல்லை. கோயில்களில் சிறப்புப் பூஜைகள் உண்டு. வெல்லம், கரும்பு, வேர்க்கடலை மற்றும் எள் ஆகியவற்றை ஒரு சிறிய பாக்கெட்டுகளில் ஒன்றாகப் போட்டு உற்றார், உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்கிறார்கள்.
கேரளா
கேரளாவில் பொங்கல் தமிழக எல்லையில் உள்ள சில மாவட்டங்களில் மட்டும் கொண்டாடப்படுகிறது. மற்ற இடங்களின் கோயில்களில் அன்றைய தினத்தில் சிறப்பு ஆரத்திகள் எடுக்கப்படும். மற்றபடி புத்தாடை, புது உற்சாகம் மற்றும் அரசு விடுமுறை என எதுவும் கிடையாது. ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு அனுசரிக்கப்படும் தினம் மட்டும் அந்தக் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் விசேஷம். திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றங்கால் பகவதி அம்மன் கோயிலில் வருடந்தோறும் நடைபெறும் விசேஷத்தில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் கூடி பொங்கல் வைக்கிறார்கள். பெருமளவில் தமிழர்களும் கலந்துகொள்ளும் அது மற்றொரு தினத்தில் கொண்டாடப்படும் பொங்கல் தவிர வேறு ஒன்றல்ல.

சொல்லத் தோணுது - வாய்கள் பேசாது... காதுகள் கேட்காது

சென்னை, தியாகராய நகரில் உள்ள ரெங்கநாதன் தெரு...
சென்னை, தியாகராய நகரில் உள்ள ரெங்கநாதன் தெரு...
முன்பெல்லாம் பண்டிகைக் காலங் களில் மட்டும்தான் நகரங்கள் மக்கள் நெருக்கடியில் திணறி மூழ்கும். இப்போது ஒரு குறிப்பிட்ட நாளில்தான் புத்தாடை, தங்க நகை கள் வாங்குவது என்றில்லாமல், நினைத்த நாளில் வாங்கி விடுகிறபடி வாழ்க்கைமுறை மாறிவிட்டது. கிராமத் துக்கும் நகரத்துக்குமான இடைவெளி குறையக் குறைய எல்லாத் தேவை களுக்குமே சிறு நகரத்துக்கும் பெரு நகரத்துக்கும் தேடிப் போவது வழக்க மாகிவிட்டது.
நகரங்களில் இப்போதே இவ்வளவு போக்குவரத்து நெருக்கடி என்றால், மிச்ச காலத்தும் என்ன ஆகப் போகி றதோ தெரியவில்லை. இரண்டு சக்கர வாகனங்கள் இல்லாத வீடுகளே இல்லை என்பது மாறிப் போய், நான்கு சக்கர வாகனங்கள் இல்லாத வீடுகளே இல்லை என்கிற நிலைமை உருவாகிக் கொண்டிருக்கிறது. அத் துடன், ஒன்றுக்கு இரண்டு வாகனங்கள் பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் அதை நிறுத்தி வைக்கவோ, ஓட்டிச் செல் லவோதான் இடமில்லை.
100 அடி சாலைகளை 60 அடிகளா கவும், 60 அடி சாலைகளை 40 அடி சாலைகளாகவும் மாற்றுவதில் உலகத்திலேயே நம்மவர்களை யாரும் மிஞ்ச முடியாது. சாலைகளில் நடந்து செல்வதற்கு என்று தனிப் பாதைகள் வேண்டும் என்பதை, இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் நாம் உணராமல் இருக்கப் போகிறோம்?
சாலைகளில் நான் அதிகமாக கவனிப்பது நடந்து செல்லும் மக் களைத்தான். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் இவர்கள் நடக்க வேண்டியிருக்கிறது. நடந்து செல்பவர்களை ஏளனமாகப் பார்ப்பதும், பயந்து பயந்து அவசர அவசரமாகக் சாலையைக் கடப்பவர்களை வசை மொழியில் திட்டுவதும் நம் ஊரில்தான் பார்க்க முடியும். அதிலும் வேகமாக நடக்க இயலாதவர்கள், சிறுவர்கள், முதியவர்கள் என இவர்களுக்கெல்லாம் சாலையைக் கடந்து போகக்கூடிய நேரத்தை ஒதுக்கி நாம் முன்னுரிமைத் தருவதில்லை.
விதியை உருவாக்கக் காரணமாக இருப்பவர்களும் நாம்தான். அதை மீறும்போது ஏற்படும் விளைவுகளைக் கண்டு குற்றம் சொல்பவர்களும் நாம் தான். மக்கள் குடியேறுவதற்கு முன் பாகவே, நகரங்கள் உருவாக்கப் படும்போதே… அடிப்படைத் தேவை களையும், நெடுங்காலத் தேவைகளை யும், தொலைநோக்கில் உணர்ந்து திட்டங் களை வரைபவர்கள் வெளிநாட்டினர். அதனால் நடந்து செல்பவர்கள், மிதிவண்டியில் செல்பவர்கள், பெரிய வாகனங்களில் செல்பவர்கள் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பாதை அமைக்கவும், இது குடியிருப்புப் பகுதி, இது வணிக வளாகப் பகுதி என ஒவ்வொன்றையும் முறையாக தனித் தனியாக உருவாக்கவும் அவர்கள் பழகி யிருக்கிறார்கள். இதனால் யாருக்கும் நேரம் விரையமில்லை; விபத்துகள் இல்லை; விரைவாகச் செல்வதால் வெளியேறும் எரிபொருள் மாசுவின் பாதிப்பும் குறைவாக இருக்கிறது. எரிபொருளும் மிச்சமாகிறது.
வெள்ளைக்காரனிடம் இருந்து ஆங்கிலத்தைக் கற்றுக் கொண்டு பெருமைப்பட்டுக் கொள்ளும் நாம், அவனிடம் உள்ள நல்ல பழக்கங்களைப் பின்பற்ற மறுக்கிறோம். மக்கள் குடி யேறிய பின்தான் இங்கு எல்லாத் திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு நாளும் நகரங்களுக்கு நிரந்தரமாகக் குடியேறுபவர்கள் எவ் வளவு பேர்? அவசர அலுவல்கள் காரணமாக நகரத்துக்கு வந்துபோகிறவர் கள் எவ்வளவு பேர்… எனக் கணக் கெடுத்தால், அதிர்ச்சிதான் நேரிடும்!
சிக்கல்கள் உருவாவதற்கு முன்னே இம்மக்களுக்கானத் தேவைகளை அறிந்து திட்டங்கள் தீட்டி, உருவாக்கித் தருவதற்குப் பெயர்தான் அரசாங்கம்! வணிக வளாகப் பகுதிகளாக இருந் தவை, மேலும் மேலும் அடுக்கடுக் கானக் கட்டிடங்களாக அதன் ஆபத் தைப் பற்றி கவலைப்படாமல் உயர்ந்து கொண்டே போவதும், குடியிருப்புப் பகுதிகள் அதன் காரணமாக வணிக வளாகப் பகுதிகளாக மாறிக்கொண்டே போவதும் இனி நிற்கப் போவதில்லை.
30 ஆண்டுகளுக்கு முன்பு நான் திரைப்படக் கல்லூரிப் படிப்பை முடித்து, சென்னை தியாகராய நகர் பகுதியில்தான் 10 ஆண்டு காலம் தங்கியிருந்தேன். அப்போது இருந்த அந்தச் சாலைகளின் அகலங்களும் தெருக்களின் அகலங்களும் அப் படியே இருக்கின்றன. ஆனால், மக்கள் தொகை நெருக்கடியும் கட்டிடங்களின் எண்ணிக்கையும் 100 மடங்கு உயர்ந் திருக்கிறது. இதைவிடக் கூடுதலான எண்ணிக்கையில் அரசுப் பேருந்து களும், 100 மடங்கு வாகனங்களும் அந்த சாலைகளில் சென்று கொண்டிருக் கின்றன. இந்த அளவுக்கு இங்கே நெருக்கடி உருவாக காரணம், அந்த இடம் முழுக்கவும் வணிகப் பகுதிகளாக மாறிக்கொண்டே இருப்பதுதான்.
இன்று நேரம் என்பது ஒவ்வொரு வருக்கும் மிக முக்கியமானதாகிவிட்டது. தியாகராய நகரைக் கடக்காமல் சென்னையின் பிற பகுதிகளை அடைய முடியாது. இதே போல்தான் சென்னை நகரம் மட்டுமல்ல; இந்திய நகரங்களின் அனைத்துப் பகுதிகளும் மாறிக்கொண்டு வருகின்றன.
அதுவும் பண்டிகைக் காலங்கள் என்றால் போக்குவரத்தே முடங்கிவிடு கிறது. விபத்து என ஒன்று ஏற்பட்டால் தான் நடவடிக்கைகளும், திட்டங்கள் தீட்டுவதும் இங்கே நடைபெறுகிறது. அதைகூட நீதிமன்றம் செல்லாமல் பெற முடிவதில்லை. ஒருமுறை அங் கிருக்கின்ற கடைகளுக்கு இதுதொடர் பான அதிகாரிகள் சென்று பாருங்கள். ஒரு குண்டுமணி போட்டால்கூட கீழே விழாதபடி காலையிலிருந்து இரவு வரைக்கும் மக்கள் வெள்ளம் திணறிக்கொண்டேயிருக்கிறது. இந்த மக்களெல்லாம் எங்கிருந்து வருகிறார்கள்? எதில் வருகிறார்கள்? வாகனங்களை எங்கே நிறுத்துகிறார்கள்? அவர்களுக்கான அடிப்படை வசதிகள் இருக்கின்றதா… என கண்காணித்து செய்து தருபவர்கள் யார்?
இப்பகுதிகளில் கும்பகோணம் போன்ற தீ விபத்தோ, சென்னை மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டிடம் போன்ற கட்டிட விபத்தோ ஏற்படாது என யாராவது உறுதியாக சொல்லிவிட முடியுமா? அவ்வாறு நிகழாது என ஒருவேளை யாராவது சொன்னால்… நீங்கள் அதனை ஏற்றுக்கொள்கிறீர்களா? என்றைக்காவது அதுபோன்ற ஒரு விபத்து ஏற்பட்டால், எவ்வாறு அம்மக் களைக் காப்பாற்றுவீர்கள்?
ரெங்கநாதன் தெரு போன்ற தெருக்களில் தீயணைப்பு வண்டி நினைத்த மாத்திரத்தில் சென்று பாதிப்புக்கு உள்ளாகுபவர்களைக் காப்பாற்றிவிட முடியுமா? சென்று சேர்வதற்குள் தீ விபத்து ஒரு கடையோடு நின்றுவிடுமா?
ஏகப்பட்ட காவல்துறையினரை நிறுத்தி நகைத் திருட்டு, துணித் திருட்டு செய்பவர்களைத்தான் நம்மால் பிடிக்க முடியும். நகரத்தின் தொலை நோக்கு வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு… எந்தெந்த வணிகப் பகுதி கள் போக்குவரத்துக்கும், சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கும், மக்க ளின் பாதுகாப்புக்கும் தடையாக இருக் கின்றதோ, அவற்றை இப்போதே கணக்கெடுத்து அகற்றி இடம் மாற்று வதுதானே சரியானதாக இருக்கும். இந்த நகைகளையும், பாத்திரங்களையும், துணிகளையும் எங்கு வைத்தும் விற்கலாமே!
அயல்நாடுகளில் இருப்பது போல ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விற்பனை பகுதியை உருவாக்கி, அவர் களுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தந்து, இவைகளை இடம் மாற்று வது பற்றி முடிவெடுக்க வேண்டிய நெருக்கடியான காலகட்டம் இது.
சாலைகளை விரிவுபடுத்தி போக்கு வரத்து நெரிசலை சீராக்காமல், வருகின்ற எல்லா வெளிநாட்டு கார் கம்பெனிகளுக்கும் அனுமதி கொடுத்துக் கொண்டேயிருப்பதும் எந்த வகையில் சரியானது?
மக்கள் கேட்டால்தான் செய்வோம் என பொறுப்பில் இருப்பவர்கள் நினைக்கலாம். இந்த மக்கள் எந்தக் காலத்திலும் எதையும் வாய்த் திறந்து கேட்கவே மாட்டார்கள் என்பது எல்லோருக்குமேத் தெரியும். இருந்தும் எனக்கு சொல்லத் தோணுது!

வீரபாண்டிய கட்டபொம்மன்

ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பாளையக்கார மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று (ஜனவரி 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
 பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர். 30 வயதில் பாளை யக்காரராகப் பொறுப்பேற் றார். வீரபாண்டியன், கட்ட பொம்மன், கட்டபொம்ம நாயக்கர் என்று பல பெயர் களால் அழைக்கப்பட்டார்.
 பிரிட்டிஷ் அரசு தனது ஆட்சியை நிலைநாட்ட, பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க முடிவு செய்தது. அப்பகுதியில் வரி வசூலிக் கும் ஆங்கிலேயத் தளபதி யால் கட்டபொம்மனிடம் வரி வசூலிக்க முடியவில்லை.
 1797-ல் கட்டபொம்மனுடன் போரிட பெரும்படையுடன் வந்தார் ஆலன். கோட்டையைத் தகர்க்க முடியாமல் தோற்று ஓடினார். பிறகு நெல்லை கலெக்டர் ஜாக்ஸன் தன்னை வந்து சந்திக்குமாறு அழைத்தார். ஆனால் குறிப் பிட்ட இடத்தில் சந்திக்காமல் வெவ்வேறு இடங்களுக்கு வரச் சொல்லி அவரை அலைக்கழித்தார் கட்டபொம்மன்.
 இறுதியில் ராமநாதபுரத்தில் கட்டபொம்மனை ஜாக்ஸன் சந்தித்தார். அப்போது, சூழ்ச்சி செய்து இவரைக் கைது செய்ய முயற்சித்தனர். கட்டபொம்மன் அதை முறியடித்து, பத்திரமாக பாஞ்சாலங்குறிச்சி திரும்பினார். அந்த சந்திப்பின்போது, வரி செலுத்துமாறு ஜாக்ஸன் இவரிடம் வலியுறுத்தினார்.
 ‘உங்களுக்கு வரிசெலுத்தும் அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் சுதந்திர மன்னர்கள்’ என்று கட்ட பொம்மன் துணிச்சலாக அவரிடம் கூறினார். இவரது வீரத்தைப் பார்த்து, சுற்றியுள்ள அனைத்துப் பாளை யக்காரர்களும் ஆங்கிலேயரை எதிர்க்கத் துணிந்தனர்.
 இவரை ஒழிக்க ஆங்கிலேய அரசு முடிவுகட்டியது. 1799-ல் வேறொரு தளபதியின் தலைமையில் இந்த பகுதியை ஆங்கிலேயப் படை முற்றுகையிட்டது.
 கடுமையாக நடந்த போரில், இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் கட்டபொம்மன் அங்கிருந்து வெளியேறி புதுக்கோட்டை மன்னரிடம் சரணடைந்தார். ஆங்கிலேயரின் வஞ்சகத்தால் கைது செய்யப்பட்டார்.
 கயத்தாறு என்ற இடத்தில் அவர் மீது விசாரணை நடத்தப்பட்டது. அப்போதும்கூட, ‘என் தாய் மண்ணைக் காக்க உங்களுக்கு எதிராகப் போராடினேன்’ என்று கம்பீரத்துடன் முழங்கினார். 1799-ல் கயத்தாறில் 39-வது வயதில் தூக்கிலிடப்பட்டார்.
 தூக்கிலிடப்பட்ட இடமான கயத்தாறில் இவருக்கு நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்குவதற்கு வெகு காலம் முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து தன் இறுதிமூச்சுவரை அசாதாரணத் துணிச்சலுடன் போராடியவர். நூற்றாண்டுகள் கடந்தும் வீரத்தின் அடையாளமாகத் திகழ்கிறார்.
 இவரது வாழ்க்கை வரலாறு பல்வேறு தமிழ்ப் புராணங்கள், காவியங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், கிராமியக் கதைகள் இடம்பெற்றுள்ளன. 1959-ல் பி.ஆர்.பந்துலு தயாரிப்பில் கட்டபொம்மனாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம், தமிழக மக்களின் நெஞ்சங்களில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு நீங்கா இடத்தைப் பெற்றுத் தந்தது.