அமெரிக்காவை ரஷ்யர்கள் வெறுப்பது ஏன்?

அமெரிக்கா மீதான வெறுப்பு வளர்வதை ஊக்குவிக்கிறது ரஷ்ய அரசு
ஆகஸ்ட் மாதத்தின் வெதுவெதுப்பான மாலை நேரத்தில், மாஸ்கோவின் ‘பெவெர்லி ஹில்ஸ் டைனர்’ உணவகத்தில், மூன்று இளம் ரஷ்யர்களுடன் அமர்ந்திருந்தேன். ‘போர்க்கி தி பிக்’ மற்றும் மர்லின் மன்றோவின் ஆளுயர உருவங்கள் போன்ற அற்புதமான அலங்காரப் பொருட்கள் நிறைந்த உணவகம் அது.
“அமெரிக்கா எங்களை வளைக்கப் பார்க்கிறது” என்றார் 29 வயதான கிறிஸ்டினா டோனெட்ஸ், டெஸ்ஸெர்ட் வேஃபில் துண்டு ஒன்றில் வாழைப்பழ கலவையைப் பரப்பியபடி. “பல பிரச்சினைகளைத் தாண்டி நாங்கள் எழுந்து நிற்கிறோம். உங்களுக்கு (அமெரிக்காவுக்கு) அது பிடிக்கவில்லை” என்றார் அப்பெண்.
பத்தாண்டுகளுக்கும் அதிகமான இடைவெளிக்குப் பிறகு, ரஷ்யாவில் செய்தி சேகரிப்பது என்பது பழைய நண்பரை மீண்டும் சந்திப்பது போல் இருந்தது. ஆனால், அந்த ‘பழைய நண்பர்’ நிறையவே மாறியிருந்தார்.
சில வகைகளில், நல்ல விதமான மாற்றங்கள்! சமீபத்தில் ரூபிளில் ஏற்பட்டிருந்த சரிவு மற்றும் பண வீக்கம் போன்ற பிரச்சினைகள் இருந்தாலும், ரஷ்யர்கள் வளம் மிக்கவர்களாகியிருக்கிறார்கள். நிறைய பயணம்செய்கிறார்கள். 1997-ல் முதன்முதலாக நான் மாஸ்கோ சென்றபோது என்னை உபசரித்த அன்பான அந்த ரஷ்யப் பெண், ‘இனிமேல், பிளாஸ்டிக் பைகளைக் கழுவ வேண்டியிருக்காது’ என்று இம்முறை சொன்னார். நான் கடைசியாக அவரைப் பார்த்ததற்குப் பிறகு, அவரது சம்பளம் 4 மடங்கு உயர்ந்திருக்கிறது. முதன்முதலாக வெளிநாட்டுக்கும் சுற்றுலா சென்றுவந்தார் துனீசியாவுக்கு!
வெறுப்புப் பட்டியல்
அதேசமயம், இருண்ட பக்கங்களும் உண்டு. ரஷ்ய சமுதாயம் முன்பை விட தற்காப்பு கொண்டதாகவும், அதீத சுய பிரக்ஞை கொண்டதாகவும் மாறியிருக்கிறது. அரசியல் தொடர்புள்ள ரஷ்ய செல்வந்தர்களில் பலர் லண்டனில் ஒரு வீடும், இரண்டாவது பாஸ்போர்ட்டும் வைத்திருந்தார்கள். ஆனால், தற்போது என் ரஷ்ய நண்பர்கள் பலர் வெளியேறும் வழியைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். தற்போது ரஷ்யாவில் பல வெறுப்பு இலக்குகள் கட்டமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. உக்ரைன்கார்கள், தன்பாலின உறவாளர்கள், ஐரோப்பாவின் பால் பொருட்கள், எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்கா!
“தனது ஜனநாயகத்தை எங்கள் முகத்தில் அப்புகிறது” என்று கோபமாகச் சொன்னார் நிஸ்னி நோவ்கோரட் நகரைச் சேர்ந்த கோஸ்த்யா எனும் டாக்ஸி ஓட்டுநர். தன்பாலின திருமணத்துக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதியளித்ததால் அதிருப்தியடைந்த ரஷ்யர்களில் ஒருவர் அவர். “எதற்கெடுத்தாலும் ‘சரி!’ ‘சரி!’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். எல்லாவற்றுக்கும் தலையாட்டுகிறீர்கள். சில சமயங்களில் ‘இல்லை’ என்றும் சொல்ல வேண்டும்” என்று சொன்ன நிஸ்னி, அமெரிக்காவை எதிர்க்கும் நிலைப்பாட்டை இறுதியாக ரஷ்யா எடுத்திருக்கிறது என்று விளக்கினார்.
பழைய பகை
இதுபோன்ற கருத்தாக்கங்களுக்குப் பின்னால் ஏகப்பட்ட வரலாறு இருக்கிறது என்பது உண்மைதான். 19-ம் நூற்றாண்டில் ரஷ்யாவின் சரியான பாதை எது என்பதில் ஸ்லாவோபைல்களும் வெஸ்டர்னைஸர்களும் மோதிக்கொண்டனர். சோவியத் ஒன்றியம் இருந்த காலகட்டத்தில், அமெரிக்காவுக்கு எதிரான கடுமையான பகை இருந்ததில் வியப்பில்லை. அப்போதிலிருந்து, அமெரிக்காவின் உலக நடவடிக்கைகளின் அடிப்படையில் அதன் மீது பல எதிர்மறைக் கருத்துகள் நிலவுகின்றன. 1999-ல் செர்பியா மீது நேட்டோ படைகள் குண்டு வீசிய சம்பவம், இராக்கில் அமெரிக்கப் படைகள் ஊடுருவிய சம்பவம் போன்றவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம். ஆனால் இவை எல்லாவற்றையும் விட, அமெரிக்காவைப் பற்றிய ரஷ்யர்களின் தற்போதைய கருத்து, 24 ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் ஒன்றியம் சிதறுண்டதற்குப் பிறகு மேலும் மோசமடைந்திருக்கிறது என்று மாஸ்கோவின் ‘லெவாடா அனல்ட்டிக்கல் சென்டர்’ தெரிவிக்கிறது.
அமெரிக்காவுக்கு எதிரான மனப்பான்மை தற்போது மேலும் வலுவடைந்திருக்கிறது. ஏனெனில், பல வகைகளில் ரஷ்ய அரசே இதை ஆதரிக்கிறது. இவ்விஷயத்தைப் பற்றிய சுதந்திரமான குரல்கள் எல்லாம் ரஷ்யத் தொலைக்காட்சி சேனல்களில் காணாமல் போய்விட்டன. ரூபிளில் ஏற்பட்டிருக்கும் சரிவு, பொதுப் போக்குவரத்தில் முதியோருக்கான மானியம் ரத்து என்று உள்நாட்டுப் பிரச்சினை எதுவானாலும், அதற்கு அமெரிக்கா - ரஷ்யா இடையிலான மோதல்தான் காரணம் என்று நம்பப்படுகிறது. எங்கு அரசியல் ஸ்திரத்தின்மை ஏற்பட்டாலும் அதன் பின்னணியில் அமெரிக்க அதிகாரிகள் இருக்கிறார்கள் என்றும் சித்தரிக்கப்படுகிறது.
மாபெரும் மாற்றம்!
“நாம் எல்லோரும் எப்படி வாழ்கிறோம் என்று அவளிடம் எடுத்துச் சொல். ஐரோப்பாவை விட சிறப்பாக நாம் வாழ்வதையும், க்ரீமியா இப்போது எத்தனை அற்புதமாக இருக்கிறது என்றும் அவளுக்குச் சொல்” என்று நான் பேட்டி எடுத்துக்கொண்டிருந்த பெண்ணிடம் ஒரு பெண் முணுமுணுத்தார். கடந்த ஆண்டு ரஷ்யாவால் இணைக்கப்பட்ட க்ரீமியா தீபகற்பத்தைக் குறிப்பிடுகிறார் அப்பெண். ரஷ்யாவில் நான் எதிர்கொண்ட மற்றொரு மாபெரும் மாற்றம் அது.
க்ரீமியா தொடர்பான புதினின் நடவடிக்கைகளால் ரஷ்யாவுக்குள்ளேயே பல குடும்பங்கள் பிரிந்துவிட்டன. பல உறவுகள் முறிந்துவிட்டன. சோவியத் ஒன்றியம் சிதறுண்ட நிகழ்வுக்குப் பின்னர், மேற்குலக நாடுகளு டனான உறவில் பெரும் விரிசல் விழுந்ததற்கும் க்ரீமியா விவகாரம் ஒரு காரணமாகிவிட்டது.
ரஷ்யாவின் மிகப் பெரிய திட்டம் என்ன? அப்படி எதுவும் இல்லை என்று முற்போக்கான ரஷ்யர்களில் பலர் என்னிடம் தெரிவித்தார்கள். அடுத்தடுத்த பிரச்சினைகளால் புதினும் அவரது நெருங்கிய வட்டாரத்தினரும் சோர்வடைந்திருக்கிறார்கள். இறக்குமதி உணவுகளுக்கு ரஷ்யா விதித்த தடையால் பணவீக்கம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. அத்துடன் க்ரீமியாவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் குறைந்திருக்கிறது. புதிய சமூகப் பொறுப்புகளால் ரஷ்யா சோர்வடைந்திருக்கிறது.
உள்ளூர் விமர்சனக் குரல்கள்
அரசு மோசமாகிக்கொண்டிருக்கிறது என்றும் தேசிய வாத முழக்கங்கள் ஒரு கெட்ட சகுனத்தைக் காட்டுகின்றன என்றும் சிலர் கருதுகிறார்கள். புதினின் ஆதரவாளர்களைச் செழிப்பூட்டிக்கொண்டிருந்த எண்ணெயின் விலை சரிந்திருக்கிறது.
“ரஷ்ய நிலம் தகித்துக்கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார் முன்னாள் பத்திரிகையாளரும், அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்துவருபவருமான எனது நண்பர் ஒருவர். “ரோமானிய நகரமான போம்பேயி எரிமலைச் சீற்றத்தில் அழிவதற்கு முன்னர், அனைத்து வளங்களும் வறண்டுவிட்டதைப் போன்ற நிலைமை இது” என்றார் அவர்.
அமெரிக்காவைப் பற்றிய மோசமான மதிப்பீடு நிரந்தரமான ஒன்றல்ல என்று சொன்னார் ‘லெவாடா அனல்ட்டிக்கல் சென்டர்’ கருத்துக் கணிப்பு மையத்தின் இயக்குநர் லெவ் குட்கோவ். ரஷ்யர்களின் தற்போதைய கோபம் கூட அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிரானது அல்ல என்றும், தங்கள் மீதே தங்களுக்கு இருக்கும் கோபம் என்றே தோன்றுகிறது.
இதெல்லாம் எந்த திசையை நோக்கிச் செல்கிறது என்று ஒரு முக்கியக் கேள்வி எழுகிறது. ரஷ்யாவை விட்டு வெளியேறிவிடலாம் என்று நினைப்பதாகச் சொல்கிறார் அலெக்சாண்டர் யெரெமெயேவ். “ரஷ்யாவில் தொழில் செய்வது நல்ல விஷயம் என்கிறார்கள் என் நண்பர்கள். ஆனால், அவர்களிடம் இருக்கும் பொதுவான விஷயம் என்ன தெரியுமா? வெளிநாட்டு பாஸ்போர்ட்டுகள்!”

எங்கே இன்னொரு பூமி?

பூமியைத் தவிர வேறு எங்கும் உயிரினங்கள் கிடையாது என்று கூறுவது அறிவுடைமை ஆகாது
மனிதன் பல ஆண்டுகாலமாகக் காதைத் தீட்டிக்கொண்டு அலைகிறான். விண்வெளியிலிருந்து ஏதாவது குரல் கேட்கிறதா என்று தேடுகிறான். இந்தத் தேடலின் ஒரு பகுதியாகத்தான் சீனா இப்போது உலகிலேயே மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப் ஒன்றை நிறுவிவருகிறது. இது அடுத்த ஆண்டில் செயலுக்கு வந்துவிடும். அதன் நோக்கம், அண்டவெளியில் எங்கேனும் மனிதனைப் போன்றவர்கள் இருக்கிறார்களா என்று அறிவதே. இதற்கு உதவியாக சமீபத்தில் ரஷ்ய கோடீஸ்வரர் யூரி மில்னர் 10 கோடி டாலர் (ரூ 640 கோடி) நன்கொடையை அறிவித்திருக்கிறார்.
மனிதர்களைப் போன்றவர்கள் வேறு ஏதேனும் கிரகத்தில் இருக்கிறார்களா? நிச்சயம் இருக்க வேண்டும் என்றே பல அறிவியலார்களும் கருதுகின்றனர். ஆனால், அப்படியான வேற்றுலகவாசிகளைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. இதற்குக் காரணம் உண்டு. நாம் கற்பனைப் பயணமாக அண்டவெளிக்குச் சென்றால், இதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.
ஆபத்தான அண்டவெளி
நீங்களும் நானும் ஒரு விண்கலத்தில் ஏறி, பூமியிலிருந்து ஏதோ ஒரு திசையில் கிளம்புகிறோம். போய்க்கொண்டே இருக்கிறோம். பூமி நமது பார்வையிலிருந்து மறைகிறது. ஏறத்தாழ 8,000 கோடி கி.மீ. தொலைவுக்குச் சென்ற பிறகு, திரும்பிப் பார்க்கிறோம். சுற்றிலும் ஒரே கும்மிருட்டு. எவ்வளவு மாதங்கள் ஆனாலும் அதே கும்மிருட்டுதான். விண்கலத்துக்கு வெளியே கடும் குளிர். அத்துடன் ஆபத்தான கதிர்கள். அதுதான் அண்டவெளி.
அங்கிருந்து பார்த்தால் சூரியன் தெரியவில்லை. மிகத் தொலைவு வந்துவிட்ட காரணத்தால் சூரியன் ஒரு சிறிய நட்சத்திரமாகத்தான் தெரியும் போலும். குறிப்பிட்ட திசையில் பார்க்கிறோம். நம்மிடம் உள்ள கருவிகளைக் கொண்டு ஆராய்ந்தால் அந்த நட்சத்திரம் சூரியனாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. சூரியனைச் சுற்றுகிற பூமி உட்பட ஒன்பது கிரகங்களில் எதுவும் கண்ணுக்குப் புலப்படவில்லை.
நாம் பூமியிலிருந்து வந்திருக்கிறோம் என்பதைச் சற்றே மறந்துவிட்டு சுற்றிலும் உள்ள எண்ணற்ற நட்சத்திரங்களை நோட்டமிடுகிறோம். நட்சத்திரமாகக் காட்சி அளிக்கிற சூரியன் இருக்கிற திசையில் கையை நீட்டி அதோ அந்த நட்சத்திரத்தைச் சுற்றுகிற ஒரு கிரகத்தில், அதாவது பூமியில் உயிரினங்கள் உள்ளன என்று அங்கிருந்தபடி உறுதியாகச் சொல்ல முடியுமா? நிச்சயம் முடியாது.
இதிலிருந்து சில விஷயங்கள் புலனாகின்றன. சூரியனும் ஒரு நட்சத்திரமே என்பதை உணர்கிறோம். மிகத் தொலைவுக்குச் சென்றுவிட்டால், பூமி இருக்கிற இடத்தையே கண்டுபிடிக்க முடியாது என்பதுபோலவே பூமியில் இருந்து பார்த்தால் எங்கோ இருக்கிற வேறு பூமிகளை எளிதில் கண்டறிய இயலாது என்பதையும் புரிந்து கொள்கிறோம். சூரியனுக்கு ஒரு பூமி இருப்பதைப் போலவே வேறு பல நட்சத்திரங்களுக்கும் பூமி மாதிரி கிரகங்கள் இருக்கலாம் என்பது புரிகிறது. அவ்விதம் எங்கோ இருக்கிற பூமிகளிலும் உயிரினங்கள் இருக்கலாம்.
இயற்கைக்குப் பாரபட்சம் இல்லை
இயற்கையானது அண்டவெளியில் ஒரு மூலையில் இருக்கிற பூமியை மட்டும் விசேஷமாகத் தேர்ந்தெடுத்து, மனிதன் உட்பட உயிரினங்களை உண்டாக்கியுள்ளதாகக் கருத முடியாது. இயற்கைக்கு அவ்விதமான பாரபட்சம் இருக்க முடியாது.
பூமியை எடுத்துக்கொண்டால், உயிரினங்கள் நிலப் பகுதியில் இருக்கின்றன, தரைக்கு அடியில் இருக்கின்றன, தரைக்கு மேலும் இருக்கின்றன. கடல்களிலும் இருக்கின்றன, சுட்டெரிக்கும் பாலைவனங்களிலும் உள்ளன. பனிக்கட்டியால் மூடப்பட்டு கடும் குளிர் வீசுகின்ற அண்டார்ட்டிகாவின் பாதாள ஏரிகளிலும் இருக்கின்றன. கண்ணுக்கே தெரியாத நுண்ணுயிர்களில் தொடங்கி ராட்சத திமிங்கிலங்கள் வரையிலான இந்தப் பல்வகையான உயிரினங்களை யாரும் ஒரே நாளில் உண்டாக்கிவிடவில்லை. கடந்த பல நூறு கோடி ஆண்டுகளில் பரிணாம வளர்ச்சி மூலம் இவை உண்டாகின.
பூமியில் உள்ள சூழ்நிலைகள் வேறு எங்கேனும் உள்ள ஒரு கிரகத்தில் இருக்குமானால், அங்கும் இதே போன்று பலவகையான உயிரினங்கள் இருக்க முடியும். ஆனால், அவற்றை நம்மால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. நமக்குத் தெரியவில்லை என்பதால், பூமி தவிர வேறு எங்கும் உயிரின வகைகள் கிடையாது என்று அடித்துக் கூறுவது அறிவுடைமை ஆகாது.
நாம் இதுவரை வெளியே போய் எங்கும் பார்க்கவில்லை. அதனால் நமக்குத் தெரியவில்லை. நாம் பூமியின் கைதிகளாக வாழ்ந்துவந்துள்ளோம். விண்வெளி யுகம் பிறந்ததற்குப் பிறகுதான் நமக்குக் கால் முளைத்தது. மனிதன் சந்திரனுக்குப் போய்விட்டு வந்திருக்கிறான். ஆனாலும், நாம் பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு வெளியே சென்றதாகக் கூற முடியாது. ஏனெனில், சந்திரனும் பூமியின் பிடிக்குள் தான் இருக்கிறது. ஆகவேதான் அது பூமியைச் சுற்றி வருகிறது. வருகிற நாட்களில் செவ்வாய்க்குச் செல்கிறவர்கள்தான் பூமியிலிருந்து விடுபட்டுச் செல்கிற முதல் நபர்களாக இருப்பர்.
நாஸாவிலிருந்து புளூட்டோவுக்கு…
பூமிக்கு அப்பால் உள்ள கிரகங்களுக்கு மனிதன் சென்றது கிடையாது என்றாலும் மனிதன் அனுப்பிய பல ஆளில்லா விண்கலங்கள் சென்று ஆராய்ந்துள்ளன. புளூட்டோ ஒன்றுதான் பாக்கியாக இருந்தது. நாஸா அனுப்பிய நியூ ஹொரைசன்ஸ் என்னும் ஆளில்லா விண்கலம் ஒன்பது ஆண்டுப் பயணத்துக்குப் பிறகு, இப்போது புளுட்டோவை ஆராய்ந்து தகவல்களையும் படங்களையும் அனுப்பியுள்ளது. பூமியிலிருந்து புளூட்டோ உள்ள தூரம் சுமார் 500 கோடி கி.மீ. கிட்டத்தட்ட சூரிய மண்டலத்தின் எல்லை.
சூரிய மண்டலத்துக்கும் அப்பால் மிக விஸ்தாரமான அண்டவெளி உள்ளது. அந்த அண்டவெளியில் சூரியன் மாதிரி கோடானு கோடி நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றில் பலவற்றுக்கும் கிரகங்கள் உள்ளன என்பது ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரவில் நாம் காணும் நட்சத்திரங்களிலிருந்து ஒளி மட்டுமல்லாமல், பல வகையான கதிர்களும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ரேடியோ அலைகளும் அவற்றில் அடங்கும். இயற்கையாகத் தோன்றும் அந்த ரேடியோ அலைகள் காலம் காலமாகப் பூமிக்கு வந்துகொண்டிருக் கின்றன. அவற்றை நம் கண்களால் காண முடியாது.
இயற்கையாகத் தோன்றும் ரேடியோ அலைகளைப் போலவே செயற்கையாக ரேடியோ அலைகளை உண்டாக்க மனிதன் கற்றுக்கொண்டுள்ளான். ஒலியை அவ்வித ரேடியோ அலைகளாக மாற்றவும் மறுபடி அந்த அலைகளை ஒலியாக மாற்றவும் மனிதன் கற்றுக்கொண்டபோது வானொலிப்பெட்டி தோன்றியது.
நட்சத்திரங்களிலிருந்து வருகின்ற ரேடியோ அலை களைப் பெற்று ஆராய்வதற்காக பெரிய பெரிய ஆன்டெனாக்களைக் கொண்ட ரேடியோ டெலஸ் கோப்புகள் ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன. ஏதோ ஒரு நட்சத்திரத்தின் அருகே இருக்கின்ற கிரகத்தில் வாழக்கூடிய புத்திசாலி மனிதர்கள் ரேடியோ அலைகள் வடிவில் செய்திகளை அனுப்பினால் அவற்றையும் அந்த டெலஸ்கோப்புகள் மூலம் பெற முடியும்.
நட்சத்திரங்களிலிருந்து வருகிற ரேடியோ அலைக ளுக்கும் வேற்றுக்கிரகப் புத்திசாலி மனிதர்கள் அனுப்பும் ரேடியோ அலைகளுக்கும் இடையே வித்தியாசம் உண்டு. ஆகவேதான், அண்டவெளியிலிருந்து வித்தியா சமான சிக்னல்கள் வருகின்றனவா என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து தேடிவருகிறார்கள்.

மியான்மரில் ஜனநாயகக் கீற்றுகள்

இந்தத் தேர்தலால் மியான்மரில் ராணுவத்தின் ஆதிக்கம் குறைந்து, ஜனநாயகம் மலருமா?
ரங்கூன் நகரெங்கும் தோரணங்களாய் ஆடுகின்றன சிவப்புக் கொடிகள். அவற்றில் போராடும் பொன்னிற மயிலொன்றின் சித்திரமும் இருக்கிறது. எதிர்க் கட்சியான தேசிய ஜனநாயக லீக்கின் கொடிகள் அவை. கூடவே, கட்சித் தலைவி ஆங் சான் சூச்சியின் படங்களும் காற்றில் அசைகின்றன. ராணுவத்தின் ஆசியுடன் இயங்கும் ஆளுங்கட்சியின் பச்சை நிறக் கொடிகளும் இடையிடையே ஆடத்தான் செய்கின்றன. மியான்மர் என்று ராணுவத் தளபதிகளால் பெயர் மாற்றப்பட்ட பர்மா வரும் நவம்பர் 8 அன்று தேர்தலை எதிர்நோக்கியிருக்கிறது. இப்படியொரு பிரச்சாரம் மியான்மரில் நடக்கும் என்று ஐந்தாண்டுகளுக்கு முன்பு யாரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். அப்போது ராணுவத்தின் இரும்புப் பிடியில் இருந்தது மியான்மர்.
இப்போது சூழலை நிறைத்துக் கேள்விகள்: இந்தத் தேர்தல் முறையாக நடக்குமா? ராணுவத்தின் ஆதிக்கம் குறையுமா? ஜனநாயகம் மலருமா? ஆங் சான் சூச்சியால் அதிபராக முடியுமா?
அரசியலும் ராணுவமும்
பர்மாவின் அரசியல் வரலாறு மிகுதியும் ராணுவத்தின் கரங்களால்தான் எழுதப்பட்டிருக்கிறது. 1948-ல் நாடு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது. அதற்கு முன்பாக அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்துக்குத் தலைமை தாங்கியவர் ஆங் சான். சூச்சியின் தந்தை. ஆங் சான், பர்மிய விடுதலைப் படை என்கிற ராணுவ அமைப்பைக் கலைத்துவிட்டு அரசியல் கட்சி ஆரம்பித்தார். ஆனால், நாடு விடுதலை அடையுமுன்பே அவரது அரசியல் எதிரிகளால் கொல்லப்பட்டார். அவரது சகாக்கள் ஆட்சியிலும் ராணுவத்திலும் தலைமை ஏற்றனர். 1958-ல் நாடாளுமன்றம் கேட்டுக்கொண்டதன் பேரில் ஒரு இடைக்கால ஆட்சி நடத்திய ராணுவம், 1962-ல் தானே நேரடியாக ஆட்சியைக் கைப்பற்றியது. இது 2011 வரை நீடித்தது.
ராணுவ ஆட்சிக்கு எதிராக 1988-ல் மாணவர்கள் போராடினார்கள். அப்போது ஆங் சான் சூச்சி நோய்வாய்ப்பட்டிருந்த தன் தாயாரைப் பார்ப்பதற்காக ரங்கூன் வந்திருந்தார். ஆக்ஸ்போர்டில் பேராசிரியராகப் பணியாற்றிய ஆங்கிலேயக் கணவரையும் இரண்டு மகன்களையும் லண்டனில் விட்டுவிட்டு வந்திருந்தார் சூச்சி. போராட்டம் அவரையும் ஈர்த்தது. தேசிய ஜனநாயக லீக்கைத் (என்.எல்.டி) தொடங்கினார். ராணுவம் போராட்டத்தை ஒடுக்கிவிட்டது. 1989-ல் சூச்சியையும் வீட்டுக் காவலில் வைத்தது. அடுத்த 21 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் அவர் வீட்டுக் காவலில்தான் இருந்தார். 1990-ல் ராணுவம் தேர்தல் நடத்தியது. 492 இடங்களில் 392-ஐக் கைப்பற்றியது என்.எல்.டி. ஆனால், ராணுவம் பதவி விலக மறுத்துவிட்டது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2010-ல் நடந்த தேர்தலை என்.எல்.டி புறக்கணித்தது. ராணுவத்தின் ஆதரவுள்ள யு.எஸ்.டி.பி. வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. முன்னாள் ராணுவத் தளபதி தெயின் செயின் அதிபரானார். தொடர்ந்து அவர் அமல்படுத்திய அரசியல்-பொருளாதாரச் சீர்திருத்தங்கள் யாரும் எதிர்பார்க்காதவை. பதவியேற்ற சில மாதங்களிலேயே சூச்சியை விடுவித்தார். 2012-ல் நடந்த இடைத் தேர்தலில் என்.எல்.டி. போட்டியிட்டது. 45 இடங்களில் 43-ல் வெற்றி பெற்றது. சூச்சி எதிர்க் கட்சித் தலைவரானார்.
இப்போது மீண்டும் பொதுத்தேர்தல் வந்திருக்கிறது. 1990, 2012 தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்த்தால், என்.எல்.டியின் பொன்னிற மயில் தன் சிறகை விரித்தாடப்போகிறது என்று தோன்றக்கூடும். மியான்மரின் அரசியலுக்கு இன்னும் சில பக்கங்கள் உண்டு.
பெரும்பான்மையும் சிறுபான்மையும்
2008-ல் அமலான அரசியல் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தில் 25% இடங்கள் ராணுவத்துக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 75% இடங்களுக்குத்தான் தேர்தல் நடக்கிறது. மியான்மர் பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு. ‘பாமா’எனப்படும் பெரும்பான்மை பர்மிய சமூகத்தினர் ஐராவதி நதி பாயும் வளமான மையப் பகுதிகளிலும் தென் பகுதிகளிலும் வசிக்கின்றனர். 2012 இடைத்தேர்தல் மிகுதியும் இந்தப் பகுதிகளில்தான் நடந்தது. இங்கேயுள்ள 291 இடங்களில் என்.எல்.டிக்கு கணிசமான ஆதரவு இருக்கிறது. மொத்தமுள்ள இடங்களில் இது 44% ஆகும்.
சிறுபான்மையினர் எல்லைப்புற மாநிலங்களில் வசிக்கின்றனர். இங்கேயுள்ள 207 இடங்கள் (31%) முடிவுகளை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். மியான்மரில் 135 சிறுபான்மை தேசிய இனத்தவர் உள்ளனர். இதில் ஷான், கரீன், ரக்கைன், சின், கச்சின் ஆகியோர் பிரதானமானவர்கள். இவர்களில் பல ஆயுதக் குழுக்கள் பிரிவினை கோருகின்றன.
சூச்சி சிறுபான்மையினரின் வாக்குகளைச் சேகரிப்பதிலும் மும்முரமாக உள்ளார். ரக்கைன் மாநிலத்தில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் சூச்சியின் பிரச்சாரத்துக்கு நல்ல வரவேற்பு இருந்ததாக எழுதுகிறார், அவருடன் பயணித்த ரெயிடர்ஸ் செய்தியாளர். இத்தனைக்கும் அவமதிப்புக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளாகும் ரோஹின்ஜா எனும் முஸ்லிம் பிரிவினர், இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தாம். இவர்கள் மியான்மரின் குடிமக்களாக அங்கீகரிக்கப்படவில்லை. இவர்கள் அகதிகளாகப் படகுகளில் தப்பி ஓடுவதும் அண்டை நாடுகள் ஏற்க மறுப்பதும் தொடர்ந்துவருகிறது. இந்தப் பிரச்சினையில் சூச்சி மவுனம் காத்துவருகிறார். எனினும், சிறுபான்மையினர் மத்தியிலும் சூச்சிக்குச் செல்வாக்கு இருப்பதாகவே மேற்கு ஊடகங்கள் கணிக்கின்றன. பல சிறுபான்மைக் கட்சிகளும் களத்தில் உள்ளன. இவர்கள் கணிசமான இடங்களைப் பெறலாம்; தங்களுக்குள் வாக்குகளைப் பிரித்துக்கொண்டு என்.எல்.டிக்கு வழிவிடவும் செய்யலாம்.
சில சிறுபான்மை இனத்தவருக்கு இணையான மக்கள்தொகை பர்மியத் தமிழர்களுக்கும் இருக்கிறது (சுமார் 2%). சிறிய விவசாயிகளாகவும் வர்த்தகர்களாகவும் நாட்டின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. எனில், இளைய தலைமுறையினர் மாறிவரும் அரசியல் சூழலுக்குத் தங்களைத் தகவமைத்துக்கொள்வதில் விருப்பம் உடையவர்களாக இருக்கின்றனர்.
அரசியல் சட்டத் தடைகள்
சூச்சிதான் என்.எல்.டியின் நட்சத்திரம். அவர் வெற்றி நோக்கி கட்சியை வழி நடத்தலாம். ஆனால், அவரால் அதிபராக முடியாது. சூச்சியின் இரண்டு பிள்ளைகளும் பிரிட்டிஷ் குடிமக்கள். புதிய அரசியல் சட்டத்தின் 59 எஃப் பிரிவின்படி, அதிபராக இருப்பவரின் பிள்ளைகள் அந்நிய நாடொன்றுக்கு விசுவாசமாக இருக்கக் கூடாது. இந்தப் பிரிவை விலக்குவதற்கு சூச்சி மேற்கொண்ட முயற்சிகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை. இப்போது சூச்சியும் தனது வழிமுறையை மாற்றிக்கொண்டார். என்.எல்.டி வெற்றி பெற்றால் தன்னால் அதிபராக முடியாவிட்டாலும், ‘அரசாங்கத்தின் தலைவராக நான்தான் இருப்பேன்’ என்று சமீபத்தில் சொல்லியிருக்கிறார்.
மேலும், அதிபர் தேர்வும் நேரடியானதல்ல; தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும், ராணுவத்தின் நியமன உறுப்பினர்கள் ஒருவரையும் முன்மொழிய வேண்டும். இதில் வெற்றி பெற்றவர் அதிபராகவும், மற்ற இருவரும் துணை அதிபர்களாகவும் பதவியேற்க வேண்டும். இதைத் தவிர பாதுகாப்பு, உள்துறை, நிதி போன்ற துறைகளுக்கான அமைச்சர்களை ராணுவமே நியமிக்கும். பொதுத் தேர்தல் நவம்பரில் நடந்தாலும், அதிபர் தேர்தல் மார்ச் 2016-ல்தான் நடக்கும். அதற்குள் திரைக்கு முன்னும் பின்னும் பல காட்சிகள் அரங்கேறலாம்.
சிறிய அடிகள்
பர்மிய அரசியல் வரலாறு நெடுகிலும் ராணுவத்தின் செல்வாக்கும் ஆதிக்கமும் இருந்துவருகிறது. 2011-ல் பதவியேற்ற சிவில் அரசாங்கம் சில சீர்திருத்தங்களை முன்னெடுத்திருக்கிறது. இந்தத் தேர்தல் அவற்றுள் ஒன்று. இதில் என்.எல்.டி. வெற்றி பெற்றாலும் ராணுவத்தின் உதவியின்றி ஆட்சி நடத்த முடியாது. எனினும், மியான்மரின் ஜனநாயகப் பாதையில் இது ஒரு முக்கியமான அடிவைப்பாக இருக்கும். போகும் வழி வெகு தூரமுண்டு!