2015-ம் ஆண்டின் 10 முகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம். இந்தப் பட்டியல் சாதனையாளர்கள் அல்லது தலைசிறந்தவர்கள் அல்லது வெற்றியாளர்கள் என்பன போன்ற பட்டியல் அல்ல; கடந்த ஆண்டில் தாக்கங்களை உருவாக்கியவர்களின் பட்டியல்; இவை 2015-ன் முகங்கள், அவ்வளவே.
தமிழர் கண்களினூடே இந்தியாவைப் பார்க்கிறோம். தேசிய அளவில் தாக்கங்களை உண்டாக்கிய தமிழக முகங்களையும் தமிழக அளவில் தாக்கங்களை உண்டாக்கிய தேசிய முகங்களையுமே நாம் பட்டியலிடுகிறோம். கடந்த ஆண்டின் பட்டியலோடு இந்தப் பட்டியலை ஒப்பிட்டால் நாம் கடந்துவந்த இந்த ஆண்டின் பயணம் எத்தகையது என்பது புரியும்.
கடந்த ஆண்டின் பட்டியலில் இடம்பெற்றவர்களின் வரிசை இது: நரேந்திர மோடி, அமித் ஷா, மைக்கேல் டி குன்ஹா, கைலாஷ் சத்யார்த்தி, ஜெயலலிதா, சத்ய நாதெள்ளா, கார்த்தி சுப்புராஜ், மேரி கோம், சதீஷ் சிவலிங்கம், ஜெயமோகன். கடந்த பட்டியலிலும் இந்தப் பட்டியலிலும் இடம்பெற்றிருக்கும் ஒரே முகம் ஜெயலலிதா.
நாடு முழுவதும் பேசப்பட்டார், கடந்த ஆண்டைப் போலவே. முந்தைய இரு ஆண்டுகளின் பட்டியலில் மோடியின் முகம் இப்படித் தொடர்ந்தது. அவரவர் செயல்பாடுகளே ஆண்டின் பட்டியலில் முகங்களைத் தீர்மானிக்கின்றன. முந்தைய ஆண்டுகளைப் போல, மாற்றங்களின் ஆண்டு, நம்பிக்கைகளின் ஆண்டு என்றெல்லாம் 2015-ஐ அறுதியிட்டு நிர்ணயிக்க முடியவில்லை. கடந்து சென்ற ஆண்டு எப்படிப்பட்டதாக இருந்தாலும் வந்திருக்கும் புத்தாண்டு நம்பிக்கையின் ஆண்டு. வாசகர்களுக்கு எமது இதயங்கனித்த வாழ்த்துகள்!
தன்னார்வலர்கள் - மீட்பர்கள்
இவர்கள்: ஒரு நூற்றாண்டு காணாத மழை - வெள்ளத்தைத் தமிழகத் தலைநகரம் எதிர்கொண்டபோது, உரிய முன்னேற்பாடுகள் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காத அரசாட்சியின் கீழ் மக்கள் பரிதவித்து நின்றபோது, லட்சக்கணக்கானோரின் உயிர்களைத் தம் உயிரைப் பணயம் வைத்து மீட்டார்கள். வெள்ளத்தில் வீட்டை உடைமைகளோடு விட்டுவிட்டு, ஒரு பிடி சோறுக்கும் ஒரு வாய்த் தண்ணீருக்குமாய்த் தவித்து நின்றவர்களுக்கு ஓடோடி வந்து உதவியளித்தார்கள். ஒரு அரசாங்கம் ஆற்ற வேண்டிய கடமைகளைச் செய்தார்கள்.
இவர்கள்: பசியால் ஒரு பெரிய கலகம் / பெரும் வன்முறை ஏற்படும் ஆபத்தைத் தவிர்த்தார்கள்.
இவர்கள்: ஒரு பேரிடரில் பணியாற்றுவது தொடர்பாக எந்தக் கல்வியையும் பெற்றிராவிட்டாலும், கையில் எந்தச் சாதனங்களும் இல்லையென்றாலும் சக மனிதர் மீதான அன்பும் அக்கறையும் இருந்தால் போதும்; நம்மால் மக்களைக் காக்க முடியும் என்பதைத் தம் செயல்பாடுகளால் உணர்த்தினார்கள். சமூகவலைதளங்களை எப்படி மக்கள் தமக்கான ஊடகமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தார்கள். நம்முடைய அமைப்பில் உள்ள பல ஓட்டைகளை அம்பலப்படுத்தினார்கள்.
இவர்கள்: உலகம் முழுவதும் நகரமயமாதல் மனித உறவுகளைச் சிதைத்துக்கொண்டிருக்கும் சூழலில், மனித உணர்வுகளின் மேன்மைகளையும் விழுமியங்களையும் பற்றி உலகம் பேச ஒரு வாய்ப்பை உருவாக்கித் தந்தார்கள்.
நயன்தாரா சேகல் - அறத்தின் சீற்றம்
இவர்: வளர்ச்சியின் பெயரால் ஆட்சிக்கு வந்த ஒரு கட்சி அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆரம்பித்து எல்லா இடங்களிலும் சூழவைத்த வெறுப்பு நெருப்பு தொடர்பான விவாதம் நாட்டின் கடைக்கோடியையும் போய்ச் சேர முக்கியப் புள்ளியாக இருந்தார். அதுவரை அறிவுத்தளத்தில், மிகச் சிறுபான்மையினரிடம் மட்டுமே பேசப்பட்டுவந்த விவகாரத்தை, ‘சாகித்ய அகாதெமி’ விருதைத் திருப்பி அளித்ததன் மூலம் ஒட்டுமொத்த தேசத்தையும் பேசவைத்தார்.
இவர்: “இந்தியப் பண்பாட்டு பன்முகத் தன்மையை அரசு பாதுகாக்கவில்லை” என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டியவர். 50-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களும் படைப்பாளிகளும் இவரைத் தொடர்ந்து தங்கள் விருதுகளைத் திருப்பி அளித்தனர். தொடர்ந்து அரசை நோக்கி அவர்களைக் கேள்வி கேட்க வைத்தார்.
இவர்: கோவிந்த பன்சாரே, நரேந்திர தபோல்கர், எம்.எம்.கல்புர்கி என்று முற்போக்குச் சிந்தனையாளர்கள் தொடர்ச்சியாகக் கொல்லப்படும் அவலத்துக்கு முடிவுக்கு வர அரசை நிர்ப்பந்தித்தார். மாட்டிறைச்சியின் பெயரால் நடந்த கொலைகள் பொதுவெளியின் கவனத்துக்கு இதன் தொடர்ச்சியாக வந்தன.
இவர்: அறிவுஜீவிகள், எழுத்தாளர்களால் என்ன செய்து கிழிக்க முடியும்; அவர்களு டைய வார்த்தைகள் தனித்தீவுப் புலம்பல்கள் எனும் மாயையை உடைத்தார்.
இவர்: சகிப்புத்தன்மை இந்நாட்டின் உயிர்நாடி என்பதை இந்நாடு மீண்டும் உணர வழிவகுத்தார்.
அப்துல் கலாம் - வெகுஜனாதிபதி!
இவர்: நேருவுக்குப் பின் குழந்தைகளால் அதிகம் நேசிக்கப்பட்ட ஆளுமை. இந்த ஆண்டு மறைந்தபோது தேசத்தையே கண்ணீர் விட வைத்தார்.
இவர்: ஒரு ஏழைக் கடலோடிக் குடும்பத்தில், நாட்டின் எல்லையோரக் கிராமத்தில் பிறந்தவர்; ஜனாதிபதியாக உயர்ந்தவர். எல்லாப் பாகுபாடுகளுக்கும் அப்பாற்பட்டு இந்நாட்டை நாம் நேசித்தால், இந்நாடு நம்மை உச்சத்தில் வைத்து உச்சி முகரும் எனும் நம்பிக்கையைக் கோடிக்கணக்கானோரிடம் தன் வாழ்க்கையால் நிரூபித்தவர்.
இவர்: இந்நாட்டின் பன்மைத்துவம் பெரும்பான்மை மக்களுக்கு மட்டுமே உரியது அல்ல; சிறுபான்மையினத்தவருக்கும் அது ரத்தத்தில் ஊறியது என்பதைத் தன் வாழ்க்கையால் உணர்த்தியவர். தான் உண்மையென நம்பிய விழுமியங்களில் உச்சபட்ச நேர்மைக்கு சமகால உதாரணராகத் திகழ்ந்தவர்.
இவர்: பொதுப் பணத்தைத் தன் பணமாய்க் கருதி சிக்கனமாகப் பயன்படுத்தியவர். தன் பணத்தைப் பொதுப் பணமாய்க் கருதி அள்ளி வழங்கி மகிழ்ந்தவர். பதவியால் பெருமைப்படாமல் பதவிக்குப் பெருமை சேர்த்தவர். கற்றுக்கொள்வதிலும் கற்றுத்தருவதிலும் இறுதிவரை சளைக்காமல் ஓடியவர்.
இவர்: கனவுகளை விதைத்தவர். விண்வெளி ஆராய்ச்சித் துறைக் கண்டுப்பிடிப்புகளில் கிடைத்த வெற்றியையும் இலகு ரக செயற்கைக்கால் கண்டுபிடிப்பில் கிடைத்த வெற்றியையும் சமமாகப் பாவித்தவர். இதுவரையிலானவர்களில் அதிகமான மக்களைச் சந்தித்து உரையாடிய வெகுஜனாதிபதி.
இவர்: ஒரு நல்ல தலைவருக்கான தேவையையும் அரசியல் அறவறட்சியையும் இந்நாட்டு அரசியல்வாதிகளுக்குத் தன் இறப்பின் மூலம் பாடம் கற்பித்துவிட்டுப்போனார். மக்களின் ராஷ்டிரபதி!
நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ் - இருவர்!
இவர்கள்: வெறுப்பு அரசியல் தீயாக மூண்டுகொண்டிருந்தபோது பகை மறந்து கை கோத்ததன் மூலம் வெறுப்புத் தீக்கு ஒரு முடிவு கட்டினார்கள். கூடவே மோடி அலையையும் முடிவுக்குக் கொண்டுவந்தார்கள்.
இவர்கள்: நாடு முழுவதும் காவிக் கொடியைப் பறக்கவிடும் கனவோடு ஒவ்வொரு மாநிலத் தேர்தலையும் மக்களவைத் தேர்தலைப் போல எதிர்கொண்டுவந்த பிரதமரை எதிர்கொள்ள ‘மகா கூட்டணி’ எனும் தேர்தல் தந்திரத்தை ஏனையக் கட்சிகளுக்கு வழியாக்கினார்கள்.
இவர்கள்: வெளியாட்களைக் கொண்டுவந்து உள்ளூர் அரசியலைத் தீர்மானிக்கும் தேசிய ஆதிக்க அரசியலுக்குச் சரியான பதிலடி கொடுத்தார்கள். கூடவே சமூகநீதி எவ்வளவு பெரிய ஆயுதம் என்பதையும் தங்கள் வெற்றியின் மூலம் உணர்த்தினார்கள்.
சானியா- சாய்னா - தங்கத் தாரகைகள்
இவர்கள்: ஆண்கள் கிரிக்கெட்டை மட்டுமே கொண்டாடிக்கொண்டிருந்த ஒரு தேசத்தின் கவனத்தை டென்னிஸ், பேட்மின்டனை நோக்கியும் இழுத்தவர்கள். இரட்டையர் டென்னிஸ் போட்டியில் 2015-ல் மட்டுமே 10 சாம்பியன் பட்டங்களைப் பறித்து உலகின் முதல்நிலை வீராங்கனையாக ஜொலிக்கிறார் சானியா. உலக பேட்மின்டன் வரலாற்றில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியர் சாய்னா. இந்தோனேஷியாவில் இந்தாண்டு இதைச் சாதித்தார் இவர். உலகத் தரவரிசையில் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டவர் மிக சீக்கிரம் மீண்டும் துள்ளியெழுந்து முதல் இடத்தைத் தனதாக்கினார். அர்ஜுனா, பத்ம, ராஜீவ் காந்தி கேல் ரத்னா என விருதுகள் இவர்களைத் தேடி வருகின்றன.
இவர்கள்: இந்தியாவில் விளையாட்டில் ஊக்கத்தோடு ஈடுபடும் பெண்களுக்கு ஊக்கசக்தி.
சசிபெருமாள் - தியாகத் திருவுரு
இவர்: ஒரு அரசாங்கமே கொடுமையான சமூக அவலங்களுக்கு வித்திடும் மது விற்பனையில் ஈடுபடுவதைக் கண்டித்து மக்கள் தன்னெழுச்சியோடு நடத்திய போராட்ட வரலாற்றின் தொடக்கப் புள்ளி. காந்தியர். காந்தியமும் அஹிம்சையும் செத்துவிடக் கூடியவை அல்ல என்பதைத் தன் உயிரைக் கொடுத்து மீண்டும் ஒருமுறை நமக்கு உணர்த்தியவர்.
இவர்: ஏழை. கிராமவாசி. பள்ளிக்கூடக் கல்வியை முழுமையாக முடிக்காதவர். ஆனால், இதயத்தில் அறத்தைக் கேடயமாகப் பொருத்திக்கொண்டு சர்வ வல்லமை மிக்க ஒரு கடுமையான அரசாங்கத்தை எதிர்த்து நின்று யுத்தம் நடத்தினார். போராளிகள் கடைசிவரை சளைப்பதில்லை என்பதை உணர்த்தினார்.
இவர்: மறைந்திருக்கலாம். தமிழகத்தில் மதுவிலக்கு வந்தே தீரும். அரசின் மதுக் கடைகள் மூடப்பட்டே தீரும். தேர்தலைத் தீர்மானிக்கப் போகும் ஆயுதம் அதுதான். மது ஆலை வைத்திருக்கும் கட்சிக்காரர்களும் மதுவிலக்கைப் பேசும் நிர்ப்பந்தம் உருவாகியிருக்கிறது. இச்சூழலை உருவாக்கியவர் சசிபெருமாள். மதுவுக்கு எதிரான யுத்தத்தில் என்றும் நினைவில் வாழ்வார்.
தனியாள் காய்ச்சி விற்றால் கள்ளச் சாராயம், கம்பெனிகள் காய்ச்சி அரசாங்கம் விற்றால் நல்ல சாராயமா? மது ஒழிய வேண்டும், ஒழிப்போம்!
சுந்தர் பிச்சை - இணைய நாயகன்
இவர்: ரூ. 4.35 லட்சத்து கோடி வருவாய், 57 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள், உலகின் அபிமான தேடுபோறி ‘கூகுள்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி இவர்.
இவர்: இந்திய இளைஞர்கள் தொழில்நுட்பத் துறையில் அடித்தட்டு வேலைகளை மட்டுமே நிரப்ப வல்லவர்கள் எனும் பகடியை உடைத்தவர்களில் உச்சம் சென்றவர். ‘டைம்’ பத்திரிகையின் ‘2015-ன் மனிதர்’ தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களில் இவரும் ஒருவர்.
இவர்: இந்திய நிர்வாகவியலின் புதிய அடையாளம் இவர். இந்தியாவின் 125 கோடி மக்களையும் இணைக்க திட்டமிடப்பட்டிருக்கும் ‘டிஜிட்டல் இந்தியா’வுக்கு மோடி ஆலோசனையும் ஒத்துழைப்பும் இவரிடம் கேட்டார். பல்வேறு திட்டங்களின் வாயிலாக இந்திய கிராமங்களை இணையம் சென்றடைய உதவுகிறார் இவர்.
இவர்: கடைக்கோடி கிராமச் சிறுவருக்கும் ஹார்வர்டு பேராசிரியருக்கும் ஒரே மாதிரியான சமமான தொழில்நுட்பத்தை கொண்டுசேர்க்க வேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வை கொண்டவர் இவர்.
ஜெயலலிதா - தனிப்பெருந்தேவி!
இவர்: ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பதைத் தாண்டி இந்த ஆண்டில் இவருடைய பல நடவடிக்கைகள் தேசம் முழுவதும் பேசப்பட்டன. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு முதல்வர் பதவியை இழந்திருந்த சூழலிலும் ‘மக்கள் முதல்வர்’ என்ற பெயரில் ஒரு மாநிலத்தில் உச்ச அதிகாரம் இவர் கண்ணசைவில் இருந்ததையும் மக்களுக்குச் செல்லும் வெள்ள நிவாரணப் பொருட்களில்கூட இவருடைய ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டதையும் சர்வதேச ஊடகங்கள் வரை எழுதின.
இவர்: ஆட்சியில் இருந்தபோதே சிறை சென்ற முதல் முதல்வராக இருந்தபோதும், கட்சிக்குள் சின்ன முணுமுணுப்புக்கூட இல்லாமல் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார்.
இவர்: வரலாறு காணாத ஒரு பெருவெள்ளத்தை மாநிலம் எதிர்கொண்ட சூழலிலும்கூட செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை; மக்களிடையே ‘வாட்ஸ்அப்’ உரை நிகழ்த்தினார். எல்லாவற்றையும் தாண்டியும் சென்னையிலிருந்து டெல்லி வரை இவர் செல்வாக்கு நீள்கிறது.
உங்களுக்கு வரும் துன்பங்களை எல்லாம் நானே சுமக்கிறேன்… எத்துயர் வரினும் அதையும் இத்தாயின் கரங்கள் துடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள்!
ஹர்திக் படேல் - சாதீப் பிழம்பு..
இவர்: மூன்று நாட்கள் குஜராத் மாநிலத்தையே முற்றிலுமாக ஸ்தம்பிக்க வைத்தார்; சாதி இந்நாட்டில் இன்னும் எவ்வளவு வல்லமையோடும் உயிர்ப்போடும் இருக்கிறது எனும் அபாயத்தை மீண்டும் நாட்டுக்கு ஒருமுறை உணர்த்தினார். இடஒதுக்கீடு தொடர்பாக நாட்டில் மீண்டும் ஒருமுறை பெரிய அளவில் விவாதத்தை உருவாக்கினார்.
இவர்: வளர்ச்சி / நவமுதலாளித்துவ முகமாகப் பார்க்கப்பட்ட நரேந்திர மோடியும் இந்துக்கள் அனைவரும் இந்துக்கள் என்று இந்துத்வ அரசியல் பேசும் பாஜகவும்கூட குஜராத்தில் சாதியை எவ்வளவு நுட்பமாகக் கையாண்டார்கள் எனும் உண்மை வெளிவர உதவினார்.
இவர்: ஓட்டு அரசியலுக்காக வலுவான சமூகங்களுக்கும்கூட இடஒதுக்கீட்டை வழங்கும் கேலிக்கூத்தை அரசியல்வாதிகள் தொடர்வது, ஏனைய சமூகங்களிடம் ஒருகட்டத்தில் எத்தகைய வெப்பத்தையும் அழுத்தத்தையும் உண்டாக்கும் என்பதை வெளிக்கொண்டுவந்தார்.
இவர்: பெருநிறுவனங்களின் மேலாதிக்கம் பாரம்பரிய வணிகச் சமூகங்களை எப்படி நசுக்கிக்கொண்டிருக்கிறது என்பதைக் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
எம்.எஸ்.விஸ்வநாதன் - விஸ்வநாதம்!
இவர்: இந்தியத் திரையுலகின் மகத்தான பொக்கிஷங்களில் ஒன்றாகத் திகழ்ந்தவர் இந்த ஆண்டு மறைந்தார்.
இவர்: கர்னாடக இசைப் பாணி பாடல்களால் சூழப்பட்டிருந்த தமிழ்த் திரையுலகில் மெல்லிசையைக் கொண்டுவந்தவர். கர்னாடக இசை, நாட்டுப்புற இசை, மேற்கத்திய செவ்வியல் இசை, பாப் இசை, டிஸ்கோ இசை என இசையின் அனைத்துக் கூறுகளையும் தனது பாடல்களின் வழி எளியோருக்கும் கொண்டுசென்றவர்.
இவர்: ராமமூர்த்தியோ, இளையராஜாவோ… ஆளுமைகளோடு சேர்ந்து பணியாற்றுவதில் உற்சாகமாகக் கை கோத்த ஆளுமை.
இவர்: மூன்று தசாப்தம் தமிழ் இசையுலகில் ராஜாங்கம் நடத்தியவர். தனது எளிமைக்காகவே அனைவராலும் விரும்பப்பட்டவர். என்றும் தன் இசையால் வாழ்வார்!

எச்சரிக்கை தேவை இலவசங்களை அணுகும்போது!

பொதுவாக, ‘இலவசம்’, ‘பொதுநலன்’ போன்ற வார்த்தைகளே இப்போதெல்லாம் பயமுறுத்தக் கூடியவை ஆகிவிட்டன. அடிப்படை வசதிகளற்ற மக்களுக்காகப் பொதுநல நோக்கத்துடன் கொண்டுவருவதாகச் சொல்லி, சமூக ஊடகத்தின் ஜாம்பவானான ஃபேஸ்புக் அறிவித்திருக்கும் ‘ஃப்ரீ பேசிக்ஸ்’ திட்டத்தையும் நம்முடைய முன்பாடங்களே சந்தேகத்துடன் பார்க்கவைக்கின்றன.
இணையத்தின் வழித்தடமாக இருப்பதற்கும் அதன் வாயிற்கதவாக இருப்பதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உண்டு. இத்திட்டம் வாயிற்கதவுபோல அனைவருக்குமான புகுகையைக் கட்டுப்பாட்டுத் தடுப்பாகத்தான் தோன்றுகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தை அறிமுகப்படுத்த முயன்றுவருகிறது ஃபேஸ்புக் நிறுவனம்.
இந்தத் திட்டம் எல்லையற்ற இணையப் பயன்பாட்டாளர்களை சுவர்களால் சூழப்பட்ட தோட்டத்துக்குள் அடைப்பதைப் போன்றது என்பதை இத்திட்டத்தின் விமர்சகர்கள் அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்கள். இலவசம் என்று அறிவித்தால் அதை அனைவரும் முழுமையாக நம்பிவிடுவார்கள் என்று ஃபேஸ்புக் நிறுவனம் கருதுகிறதுபோலும். வணிகத்தைப் பொறுத்தவரை ‘இலவசம்’ என்பது வேறு வகையில் அதீதமான லாபத்தைப் பெற்றுத்தரக்கூடிய உத்தி என்பது பலருக்கும் தெரியும். முதலில் இலவசம் என்ற பெயரில் ஒரு பொருளை அல்லது சேவையை மக்களுக்கு அறிமுகப்படுத்தி, அவற்றை அன்றாடம் பயன்படுத்தப் பழக்கி, பிறகு அதையே வணிகமாக்கி ஏராளமான லாபம் பார்ப்பது எனும் உத்தியை ஆங்கிலேயர்கள் டீ விற்ற வரலாற்றிலிருந்தே இந்தியர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள்.
இந்தியர்கள் பலருக்கு இணையம் சென்று சேர வேண்டும் என்ற கருத்தாக்கத்தைப் பரவலாக்கியது ஃபேஸ்புக் நிறுவனத்தின் சாதகமான பங்களிப்பு. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் இணையம் பரவலாக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவதும் குறிப்பிடத் தக்கதுதான். இன்டெர்நெட்.ஆர்க் எனும் திட்டத்தை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தி ஓராண்டாகவிருக்கிறது. ஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்தின் முந்தைய வடிவம்தான் அது. ஃபேஸ்புக் நிறுவனத்தையும் இத்திட்டத்தையும் இணையவாசிகள் கடுமையாக விமர்சித்துவருகிறார்கள். இச்சேவையை நிறுத்திவைக்குமாறு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திடம் இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் கேட்டுக்கொண்டிருக்கிறது.
ஆனால், இத்திட்டத்திலிருந்து பின்வாங்குவதற்கான எந்த அறிகுறியும் ஃபேஸ்புக் நிறுவனத்திடம் தென்படவில்லை. அரசியல் மற்றும் சமூக மட்டத்தில் எப்படியாவது இத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று முன்பைவிட அதிக முனைப்புடன் செயல்படத் தொடங்கியிருக்கிறது. திட்டத்துக்கு ஆதரவு தேடும் வகையில் மார்க் ஸக்கர்பெர்கே கட்டுரைகளும் எழுதிவருகிறார். விளம்பரங்கள் மூலமாகவும் பிரச்சாரம் நடக்கிறது. இணைய வசதியே இல்லாதவர்களுக்கு, குறிப்பிட்ட சில இணையதளங்களாவது இலவசமாகப் பயன்படுத்த வாய்ப்பு கிடைக்குமே. அதை ஏன் தடுக்க வேண்டும் என்று ஃபேஸ்புக் தரப்பு வாதிடுகிறது.
ஆனால், ‘ஃப்ரீ பேசிக்ஸ்’ திட்டத்தை எதிர்ப்பவர்கள் முக்கியமான சில விஷயங்களைச் சுட்டிக்காட்டுகிறார்கள். “முதலாவதாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால் சில இணையதளங்களைத்தான் பார்க்க முடியும்; கூகுள், யூடியூப் தொடங்கி ‘ஆன்லைன்’ வர்த்தக இணையதளங்கள் உட்பட பலவற்றையும் பயன்படுத்த முடியாமல் போய்விடும்; நாளடைவில் இணையம் என்றாலே ஃபேஸ்புக்தான் எனும் அளவுக்கு இணையப் பயன்பாடு குறுகிவிடும்” என்கிறார்கள். இணையத்தை உருவாக்கியவரான டிம் பெர்னெஸ் லீ போன்றோர் இதுபோன்ற திட்டங்கள் இணையச் சமவாய்ப்புக்கு ஆபத்தாகிவிடும் என்று எச்சரித்திருக்கிறார்கள்.
இத்திட்டத்தை அரசு மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டியது அவசியம். இணையப் பயன்பாட்டாளர்களும்தான்!

இணையம் யார் கையில்?

ஃபேஸ்புக் நிறுவனம் கொண்டுவரத் துடிக்கும் ஃப்ரீ பேசிக்ஸ் திட்டம் ஒரு மாயவலை
‘ஃப்ரீ பேஸிக் இன்டர்நெட்’ என பேஸ்புக் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ஒரு பிரச்சாரம் இன்று ‘ஃபிரீ பேசிக்ஸ்’ என்ற பெயரில் உலாவுகிறது. ரூ. 100 கோடி செலவில் பேஸ்புக் நிறுவனம் செய்துவரும் இந்தப் பிரச்சாரம் இந்தியாவைப் பிடித்தாட்டுகிறது. இணையமும் நாளிதழ்களும் பண்பலை வானொலிகளும் இதைப் பரப்பிக்கொண்டிருக்கின்றன.
ஆனால் இணையச் சமவாய்ப்புக்காகக் குரல்கொடுப்பவர்கள் இதைக் கடுமையாக எதிர்க்கின்றனர். முதலாவதாக, ‘ஃபிரீ’, ‘பேசிக்ஸ்’ ஆகிய இரண்டும் பொதுச் சொற்கள். இந்திய விளம்பரச் சட்டப்படி பொதுச் சொற்களை நுகர்வுப் பொருட்களுக்கு வர்த்தகப் பெயர்களாகச் சூட்டுவது குற்றம். அதிலும் 12 கோடியே 50 லட்சம் இந்தியர்கள் பேஸ்புக்கின் சந்தாதாரர்களாக இருந்தாலும், தான் ஒரு அமெரிக்க நிறுவனம் என்பதால், இந்தியச் சட்டத்துக்கும் கட்டுப்படத் தேவை இல்லை என்று சொல்லிவருகிறது பேஸ்புக்.
எங்கிருந்து தொடங்கியது?
சில மாதங்களுக்கு முன்பு ‘இண்டர்நெட்.ஓஆர்ஜி’ என ஃபேஸ்புக் நிறுவனம் பற்றவைத்த திரியின் வேறு ரூபம் தான் இது. இந்தியாவின் மொபைல் நிறுவனங்களில் ஆறாவது இடத்திலிருக்கும் ரிலயன்ஸும் ஃபேஸ்புக்கும் இணைந்து குறிப்பிட்ட சில இணையதளங்களுக்கு மட்டும் இலவச டேட்டா சேவைகள் வழங்கலாம் எனும் திட்டத்தை முன்வைத்தன. இதைப் பொதுமக்களின் பரிசீலனைக்கும் கொண்டுசென்றது இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய். இந்நிலையில்தான் மக்களைத் தன் வசம் இழுக்க தொடர்ந்து இந்த ஃபிரீ பேசிக்ஸ் பிரச்சாரத்தைச் செய்துவருகிறது ஃபேஸ்புக் நிறுவனம்.
இதில் இணையத்தில் சமவாய்ப்பு கோருபவர்கள் முன்வைக்கும் விவாதப் புள்ளிகள் சரியா அல்லது ஃபேஸ்புக்கின் பிரச்சாரம் சரியா என்பதைப் பிரித்தறியத் தொழில்நுட்ப விமர்சகர் எவ்கனி மோரொசவின் சிந்தனை கைகொடுக்கிறது. எந்நேரமும் தொடர்பு கொள்ளும் சேவை, போக்குவரத்தைச் சுலபமாக்கும் தொழில்நுட்பம் போன்ற பல சேவைகளை அளிப்பதாக உறுதியளித்து தேசத்தின் ஒட்டுமொத்த அரசையே கபளீகரம் செய்யத் திட்டம் தீட்டியுள்ளது சிலிக்கான் பள்ளத்தாக்கு என்கிறார் எவ்கனி மோரொசவ்.
இதற்கு இவர்கள் கேட்கும் விலை மக்களின் தனிப்பட்ட தகவல்கள். குடிநீர், போக்குவரத்து சேவை முதல் தகவல்தொடர்புவரை அனைத்தையும் அளிக்க வேண்டியது அரசு என்பதுபோய் சிலிக்கான் பள்ளத்தாகில் இருக்கும் சில முதலாளிகளே அத்தனையும் கொடுத்துவிடுவார்கள் என மக்களை நம்பவைக்கும் முயற்சி இது.
சிலிக்கான் பள்ளத்தாக்கின் மெச்சத் தக்க சேவைகளில் மயங்கி இணையதளத்தைக் கையகப்படுத்தியிருக்கும் பெரும்புள்ளிகளிடம் நம்முடைய தனிப்பட்ட தகவல்களை நாமும் ஒப்படைக்கிறோம். மேம்போக்காகப் பார்க்கும்போது இது இலவசமான சேவையாக நமக்குத் தோன்றலாம். ஆனால் உண்மை என்னவென்றால் நம்முடைய தனிப்பட்ட தகவல்கள்தான் அவர்களுக்கு மூலதனம்.
21-ம் நூற்றாண்டில் தகவல்கள்தான் எரிபொருள். இந்திய வாடிக்கையாளர்கள் மூலமாக மட்டும் ஆண்டுக்கு ரூ. 6,600 கோடி சம்பாதிக்கிறது பேஸ்புக். ஆனால் இந்திய அரசுக்கு வரி செலுத்துவதில்லை. ஆக, ஃபேஸ்புக்கும் கூகுளும் நமது சுய தகவல்களைத்தான் விளம்பரதாரர்களிடம் விற்கிறார்கள்.
பண்டமான தகவல்
அடுத்து தெரிந்துகொள்ள வேண்டியது, ஃபிரீ பேசிக்ஸ் என்பதற்காக அது இலவச இணைய சேவை என நம்பிவிடக் கூடாது. ஃபேஸ்புக்கையும் அதனோடு கைகோக்கவிருக்கும் சில தனியார் நிறுவனங்களின் இணையதளத்தை மட்டுமே இதன் மூலமாகப் பயன்படுத்த முடியும். இன்றைய நிலவரப்படி 100 கோடி இணையதளங்கள் இருக்கின்றன. மொத்தம் 350 கோடி இணையப் பயனாளர்கள் இருக்கிறார்கள் என வைத்துக்கொண்டால் அதில் 3.5-ல் ஒருவர் புதிய தகவலைப் பரிமாறுகிறார்.
குறுகிய காலத்தில் இணையம் மாபெரும் வெற்றி அடைய முக்கியக் காரணம் இதுதான். யாரையும் எப்போதும் யாராலும் தொடர்புகொள்ள முடியும் என்பது மட்டுமல்ல. எக்கச்சக்கமான தகவல்களை இணையம் பயனாளி களுக்கு வழங்குகிறது என்பது மட்டுமல்ல. பயனாளிகள் எண்ணிலடங்காத் தகவல்களை இணையத்தில் பதிவு செய்வதன் மூலம் அவர்களே மூலதனமாக விளங்குகிறார்கள் என்பதே!
ஆனால், இணைய சேவை வழங்குவோர் (ISP) தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் மட்டும் இணையம் வந்துவிட்டால் இணையம் பொதுவழியாக ஒருபோதும் இருக்காது. குறிப்பிட்ட இணையதளங்களை மட்டுமே குறிப்பிட்டவர்கள் பயன்படுத்தும் நிலை உருவாகும். இதைத்தான் இணையத்தில் சமவாய்ப்பு கேட்டுப் போராடுபவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இத்தனை காலம் கற்பனைத் திறனும் படைப்பாற்றலும் இணையத்தில் பொங்கி வழியக் காரணம் அங்கு காவலாளிகள் இல்லை என்பதுதான் என சமவாய்ப்பு கருத்தியலை முன்வைத்த டிம் வூ கூறுகிறார். வானொலி, தொலைக்காட்சி போன்ற வெகுஜன ஊடகங்கள் சாதிக்க முடியாததை இணையம் சாதிப்பது இதனால்தான்.
ஆனால், எல்லாவற்றையும் கபளீகரம் பண்ணவே சமீபகாலமாக கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சேவைகளை ஃபிரீ பேசிக்ஸ் மூலம் வாரி வழங்குவதாக மார்க் ஸக்கர்பெர்க் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறார்.
தகவலின் விலை
டேட்டா கட்டணம் அதிகரித்தபோதும் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஆறு கோடி இந்தியர்கள் போன் இணையப் பயனாளர்கள் ஆகியுள்ளனர். அதிலும் ஸ்மார்ட்போன்களின் விலை சரிய, தற்போது ஒட்டுமொத்த இந்தியாவில் 30 கோடி போன் பிராட்பேண்ட் பயனாளர்கள் உள்ளனர். இவர்களில் ஒரு கோடியே 50 லட்சம் பேரை மட்டுமே இந்த ஃபிரீ பேசிக்ஸ் கருத்து சென்றடைந்திருக்கிறது. இதைத் தவிர போன் வைத்திருந்தும் இணைய சேவையை இதுவரை பயன்படுத்தாமல் இருப்பவர்கள் 60 கோடி இந்தியர்கள்.
எல்லாத் தரப்பினரையும் சென்றடைவதுதான் இணைய சேவையாளர்களின் உண்மையான நோக்கம் என்றால், பேஸ்புக்கையும் அதனோடு கூட்டணி சேர்ந்திருக்கும் இணையதளங்கள் மட்டுமே அடிப்படை எனச் சொல்வதற்குக் பதிலாக மக்களுக்கு கட்டுப்படியாகும் செலவில் முழுமையான இணைய சேவை அளிக்க வேண்டும். இந்தியக் தொலைதொடர்பு த் கட்டுப்பாட்டு வாரியம் தலையிட வேண்டிய இடம் இதுதான்.
இணைய சேவை இன்னும் பெருவாரியான இந்தியர்களைச் சென்றடையாததற்கு முக்கியக் காரணம் டேட்டா சேவையின் விலை ஏற்றம்தான். பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் இணையத் தொடர்பு பெறுவதற்கான விலை அதிகம்தான். இதுவரை ட்ராய் நிறுவனம் டேட்டா கட்டணத்தை முறைப்படுத்தவில்லை.
ஏழை எளிய மக்களையும் வாடிக்கையாளராக்க அத்தனை நிறுவனங்களும் யத்தனிக்கின்றன. அதற்குத் தேவை இலவசம் அல்லது குறைந்த செலவில் இணைய சேவை ஆகும். அதைக் கொண்டுசேர்ப்பதற்கும் பல வழிகள் இருக்கின்றன. முதலில் டேட்டா இணைப்புடன் இலவச டேட்டா தொகுப்பு கொடுக்கலாம். அடுத்து, இணையப் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் நேரத்தில் குறிப்பிட்ட நேர அட்டவணையை இலவசமாகக் கொடுக்கலாம். அதிலும் போட்ட பணத்தை என்றோ எடுத்துவிட்ட பட்சத்தில் 2ஜி சேவையின் கட்டணத்தைக் கட்டாயமாகக் குறைக்க வேண்டும்.
இத்தனை விஷயங்களை வலியுறுத்தக் காரணம், அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவான இணைய சேவையாக இல்லாமல் ஃப்ரீ பேசிக்ஸ் போன்ற தனியார் அமைப்புகளை மட்டுமே அனுமதிக்கும்போது டிஜிட்டல் உலகிலும் மக்களுக்குள் பிளவு ஏற்படும். ஒரு கட்டத்தில் இத்தகைய தனியார் தளங்களின் பயனாளர்கள் இணையம் என்றால் இது மட்டுமே என நினைத்துக்கொள்வார்கள். பரந்து விரிந்த இணைய சேவையைச் சுருக்கிவிட்டு எல்லோரையும் இணையத்தால் இணைக்கிறோம் என சொல்வது எத்தனை பெரிய பித்தலாட்டம்!