ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் Vs கொரோனாவைரஸ்: உடலுக்குள் நடப்பது என்ன?

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் Vs கொரோனாவைரஸ்: உடலுக்குள் நடப்பது என்ன? வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் இருந்து ஒரு கப்பல் அந்த நாட்டின் மேற்குப் பகுதிக்கு வர வேண்டுமானால் பல்லாயிரம் கி.மீ அட்லாண்டிக் கடலில் பயணம் செய்து, தென் அமெரிக்க கண்டம் முழுவதையும் சுற்றிக் கொண்டு பின்னர் அட்லாண்டிக் கடலில் பல ஆயிரம் கி.மீ. பயணித்து, கிட்டத்தட்ட அண்டார்டிகா வரை போய், அமெரிக்காவின் மேற்குப் பகுதியை அடையக் கூடிய நிலை இருந்தது. கொல்கத்தாவில் இருந்து ஒரு கப்பல் மும்பைக்கு வர வேண்டுமானால், எப்படி இலங்கையை சுற்றித் தான் வர வேண்டுமோ அப்படி!Panama canal ஆனால், இந்த இரு அமெரிக்க கண்டங்களுக்கு இடையே மத்திய அமெரிக்காவில் பனாமா நாட்டின் ஓரிடத்தில் ஒரு சிறிய நீர் வழிப்பாதை இந்த இரு கடல்களையும் இணைக்கிறது. மிகக் குறுகிய இந்த நீர் வழிப் பாதையில் சிறிய படகுகள் மட்டுமே செல்ல முடியும். இங்கே பெரும் கப்பல்கள் பயணிக்க வேண்டுமானால், 82 கி.மீ தூரத்துக்கு இந்த நீர் வழிப்பாதையை அகலப்படுத்தியாக வேண்டும். இரு புறமும் அடர்ந்த காடுகள் கொண்ட இந்த நீர் வழிப்பாதையை அகலப்படுத்தும் வேலையில் முதலில் பிரான்ஸ் இறங்கியது. அப்போது பிரான்ஸ் கட்டுப்பாட்டில் பனாமா இருந்தது. 1881ல் ஆரம்பித்த வேலை மாதம் 200 பேர் என ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பலி கொண்டது. இந்த உயிர் பலிகளுக்கு பணியின்போது ஏற்பட்ட விபத்துகள் காரணமல்ல. காரணம்.. கொசு! மரங்கள், நீர் நிலைகள், மலைகள், வருடத்தில் 8 மாதங்கள் மழை .. என மிகக் கரடுமுரடான இந்த காட்டுப் பகுதியின் கொசுக்களால் ஏற்பட்ட மலேரியா, மஞ்சள் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு பல்லாயிரம் தொழிலாளர்களின் உயிர்கள் பலியாயின. இதனால் 1889ல் இந்தப் பணியை அப்படியே விட்டுவிட்டு விலகிவிட்டது பிரான்ஸ். ஏன் இந்த மலேரியா பரவுகிறது. அதற்கு கொசுக்கள் தான் காரணம் என்பது கூட அப்போது அறியப்படவில்லை. இதையடுத்து 1904ம் ஆண்டில் அமெரிக்கா இந்த வேலையை கையில் எடுத்தது. இந்த இடைவெளியில் கொசுக்களால் தான் மலேரியா பரவுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதனால், பனாமா கால்வாய் பணியை துவக்கியவுடனேயே அமெரிக்கா செய்த முதல் வேலை மலேரியாவுக்கு மருந்து கண்டுபிடித்தது தான். தென் அமெரிக்க கண்டத்தின் பழங்குடி மக்கள் 'குளிர்' காய்ச்சலுக்கு (மலேரியா என்று தெரியாமல், கொசு மூலம் பரவுவதும் புரியாமல்) பயன்படுத்திய மருந்து தான் Quinine. இந்த கண்டத்தின் பல நாடுகளிலும் காணப்படும் சின்கோனா என்படும் மரத்தின் பட்டையில் இருந்து தான் இந்த மருந்தை பழங்குடி மக்கள் தயாரித்தனர். இப்போது தயாரிக்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் (Hydroxychloroquine) மருந்துக்கு இது தான் அடிப்படை. Cincona Tree in Peru பிளாஸ்மோடியம் எனப்படும் வைரசும் அல்லாத, பாக்டீரியாவும் அல்லாத ஒரு நுண்ணுயிரி தான் மலேரியா நோய்க்குக் காரணம். இதைப் பரப்புவது அனோபெலிஸ் எனப்படும் வகையைச் சேர்ந்த பெண் கொசுக்கள் தான். தங்களது முட்டைகளுக்கு உணவளிக்க மனிதர்களை கடித்து ரத்தத்தை உறிஞ்சும் போது இந்த கொசுக்களின் உடலில் இருந்து மனிதர்களுக்குள் ஊடுருகிறது பிளாஸ்மோடியம். இந்த பிளாஸ்மோடியத்திலும் 4 வகை உண்டு. அதில் 90 சதவீத மலேரியாவைப் பரப்புபவை பிளாமோடியம் ஃபால்சிபாரம் (Plasmodium Falciparum) ரக நுண்ணியிரி தான்.Plasmodium falciparum மனித உடலுக்குள் நுழைந்தவுடன் இந்த நுண்ணியிரி கல்லீரலில் போய் தங்கி பல்கிப் பெருகி ரத்தத்தில் கலக்கும். (இந்த நேரத்தில் மனிதனைக் கடிக்கும் கொசுவுக்கும் இந்த நுண்ணியிரி பரவும்!. ஆக, கொசுவுக்கே மலேரியாவை நாம் தருகிறோம்!). மனித ரத்தத்தின் சிவப்பு அணுக்களில் நுழையும் இந்த பிளாஸ்மோடியும் அங்கு லட்சக்கணக்கில் பெருகி, சிவப்பு அணுக்களையே சிதறடித்துக் கொண்டு உடலின் பல பகுதிகளையும் பாதிக்கும். இது தான் மலேரியா. உலகமே கொரோனா பீதியில் ஆழ்ந்திருக்க... இப்போ எதுக்கு இந்த கொசு கடி?... காரணம் இருக்கிறது.. இப்போது கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பயன்படுத்த முயலும் முதல் மருந்து, மலேரியாவை கட்டுப்படுத்த உதவும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தான். பிரான்சில் கொரோனோவைரஸ் தாக்குதலுக்கு உள்ளான 42 பேருக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மற்றும் Azithromycin இணைந்த சிகிச்சை தரப்பட்டதில் அவர்களில் 38 பேர் இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து வெளியே வந்தனர். 3 பேருக்கு நோய் மேலும் தீவிரமானது. ஒருவர் பலியானார்.Covid ace2 interaction இந்த ஆய்வு முடிவுகளை கடந்த மாதம் 20ம் தேதி பிரான்ஸ் வெளியிட்டது. இதையடுத்து உலகம் முழுவதுமே இந்த மருந்துக்கு அடிதடியே நடக்க ஆரம்பித்துவிட்டது. இதற்குத்தான் இந்தியாவிடமும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது வேகத்தைக் காட்டினார். மருந்தை உடனே அனுப்பாவிட்டால் இந்தியா எதிர் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று ஓபனாகவே மிரட்டினார் (கெஞ்சி கேட்டுக் கொண்டார் என்று படிக்கவும்!) உலக பாலிடிக்ஸ் ஒரு பக்கம் இருக்கட்டும்... இந்த மருந்து எப்படி வேலை செய்கிறது? கொரோனாவைரஸோ அல்லது மலேரியாவை ஏற்படுத்தும் பிளாஸ்மோடியமோ, எந்த நுண்ணியிரியாக இருந்தாலும் மூக்கு, காது, கண், கொசுக்கடி- ரத்தம் வழியாக மனித உடலுக்குள் வந்தவுடன் செய்யும் முதல் வேலை செல்களுக்குள் நுழைவது தான். செல்களில் ஒரு வைரஸ் நுழைய வேண்டுமானால், முதலில் அந்த செல்களின் மேலே உள்ள ரிசப்டர்களில் வைரஸ் ஒட்டிக் கொள்ள வேண்டும். ஊசி இடம் குடுக்காம நூல் நுழையுமா என்று சொல்லக் கேட்டிருப்போம். கிட்டத்தட்ட அதே தான் இங்கேயும் நடக்கிறது. செல்களில் மேலே இருக்கும் ACE2 receptor எனப்படும் ஆண்டெனா மாதிரியான ஒரு அமைப்பில் தான் முதலில் இந்த கொரோனாவைரஸ் ஒட்டிக் கொள்கிறது. பின்னர் இந்த வைரஸ் சுரக்கும் திரவம் இந்த ஆண்டெனாவை உருக்குலைய வைத்து செல் சுவர்களை துளைத்துக் கொண்டு உள்ளே செல்கிறது. உள்ளே போனவுடன் பல மடங்காக பல்கிப் பெருகுகிறது இந்த வைரஸ். இந்த ACE2 receptor ஒன்றும் வெட்டியான ஐட்டம் அல்ல. உடலின் ரத்த அழுத்தத்தை பராமரிப்பதில் பெரும் பங்கு வகிக்கும் முக்கிய புள்ளி தான். இப்படி உடலின் கோடிக்கணக்கான செல்களுக்குள் நுழையும் கொரோனாவைரஸ், அதே வேளையில் செல்களில் இருந்து பிற செல்களுக்கும் மிக வேகமாய் பரவுகிறது. அது எப்படி நடக்கிறது? செல்களுக்கு இடையே ஊட்டச் சத்தை சுமந்து செல்லும் வேலைகளை செய்வது என்டோசோம் (Endosomes) எனப்படும் கேரியர்கள். இந்த சுமை தூக்கும் கேரியர்களுக்குள் நுழைந்துவிட்டால் அடுத்தடுத்த செல்களுக்குள் எளிதாகவே நுழைந்துவிடலாம். அதற்கு முதலில் இந்த என்டோசோம்களின் சுவர்களை நுண்ணியிரி துளைக்க வேண்டும். இந்த துளையை எப்படி போடுவது.. கெமிக்கல் தான். பிளாஸ்மோடியமோ அல்லது கொரோனாவைரஸோ அவை சுரக்கும் ரசாயனம் என்டோசோம்களின் சுவர்களை கரைய வைத்து உள்ளே நுழைகின்றன. அந்த ஓட்டை எப்படி போடப்படுகிறது. இந்த இடத்தில் கொஞ்சம் கெமிஸ்ட்ரி கிளாசுக்கு போவோம். ஒரு திரவம் அல்லது ரசாயனம் என்று இருந்தால் அதற்கு pH என்று ஒரு மதிப்பு உண்டு. இந்த pH மதிப்பு 7 என்று இருந்தால் அது நடுநிலையான திரவம். உதாரணம்: நமது உடலின் ரத்தம். இந்த மதிப்பு 7க்கு கீழே போனால் அது அமிலத்தன்மை கொண்ட திரவம். உதாரணம்: பால் இதன் pH மதிப்பு 6. சரி.. pH மதிப்பு 7க்கு மேலே போனால் அந்த திரவம் காரத்தன்மை கொண்டது என்று பொருள். உதாரணம்: கடல் நீர். இதன் pH மதிப்பு 8. (பாம்பு கடித்து உடம்பில் விஷம் ஏறிவிட்டால் உடனே நடப்பது, நமது ரத்தத்தின் pH அளவில் ஏற்படும் மாற்றம் தான். ரத்தத்தின் pH அளவு 7ல் இருந்து முன்னே பின்னே தடுமாறினால் ரத்தம் கெட்டியாகி, ரத்தக் குழாய்கள் அடைத்து, pH scaleஇதயம் செயலற்று மரணம் ஏற்படுகிறது) இப்போது இந்த pH கதை புரிந்திருக்கும். மீண்டும் என்டோசோம்களுக்கு வருவோம். இந்த என்டோசோம்கள் அடிப்படையில் கொஞ்சம் அமிலத்தன்மை கொண்டவை. இந்த சுவர்களில் ஓட்டை போட பிளாஸ்மோடியம் போன்ற நுண்ணியிரிகள் சுரக்கும் ரசாயனமும் அமிலம் தான். அமிலத்தன்மை கொண்ட சுவர்களை இன்னும் கொஞ்சம் அமிலத்தை சேர்த்தால் ஓட்டை போடுவது சுலபம் தானே. ஆனால், இந்த இடத்தில் தான் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு மிகவும் பிடித்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் ஒரு ஜேம்ஸ்பாண்ட் வேலையை செய்கிறது. இந்த மருந்து என்டோசோம்களின் காரத்தன்மையை அதிகரிக்கிறது. இதனால் பிளாஸ்மோடியம் நுண்ணியிரி அமிலத்தை சுரந்து சுரந்து என்டோசோம்களின் சுவர்களை ஓட்டை போட ஒரு பக்கம் தொடர்ந்து முயற்சிக்க, ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் அதே என்டோசோம்களின் சுவர்களில் காரத்தன்மையை சேர்த்துக் கொண்டே செல்ல, எவ்வளவு தான் அமிலத்தை பிளாஸ்மோடியம் சுரந்தாலும் என்டோசோம்களின் சுவர்களில் ஓட்டை விழுவது சாத்தியமில்லாமல் போகிறது. மேலும் செல்களின் காரத்தன்மை ஒரு அளவுக்கு மேல் அதிகரிக்கும்போது பிளாஸ்மோடியத்துக்கு அதுவே விஷயமாகி விடுகிறது. அந்த நுண்ணியிரி உயிரிழக்க நேரிடுகிறது. Healthy Cell layer not damaged (L)- Cell layer Damaged by coronavirus (R) கொரோனாவைரசும் கிட்டத்தட்ட பிளாஸ்மோடியம் செய்யும் தில்லாலங்கடி வேலையைத் தான் செய்கிறது. செல்களில் நுழைய அதுவும் என்டோசோம்களுடன் மல்லுகட்டுகிறது. இதனால் தான் என்டோசோம்களின் சுவர்களை ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை பயன்படுத்தி காரத்தன்மையை அதிகரித்து கொரோனாவைரசையும் காலி பண்ண முடியும் என்று மருத்துவ உலகம் நம்புகிறது. ஆனால், பிளாஸ்மோடியமும் வைரசும் ஒன்றல்ல என்பது ஒரு பிரிவு ஆராய்ச்சியாளர்களின் எதிர் கருத்தாக உள்ளது. இருந்தாலும் பிரான்ஸ் நாட்டு ஆராய்ச்சியில் கொரோனாவைரசுக்கு எதிராக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து சிறப்பாகவே செயல்பட்டதாக வெளிவரும் தகவலாலும் வேறு மருந்துகள் ஏதும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இல்லாததாலும், இந்த மருந்துக்கு தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது. இதற்கிடையே மூட்டுகளைத் தாக்கும் ஆர்த்ரிடிஸ் நோய்க்கு எதிரான மருந்துகளும் கூட கொரேனோவைரசால் தாக்கப்பட்டவர்களின் நுரையீரல்களை பாதுகாக்க உதவுவதாக சில ஆய்வுகள் வெளியாகியுள்ளன. கொரோனோவைரசின் சில உள்ளடி வேலைகளால் உடலின் நோய் எதிர்ப்பு செல்கள், வைரசுக்கு பதிலாக நுரையீரலின் ஆரோக்கியமான செல்களை தாக்குவதை இந்த மருந்துகள் தடுப்பதால், நுரையீரல் மேலும் மோசமாவதை தடுக்க முடியும் என்கின்றன ஆய்வுகள். Coronavirusஅதே போல அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவ ஆராச்சியாளர்கள் இன்னொரு மருந்தையும் சொல்கிறார்கள். அது, கொரோனாவைரசால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் நுண்ணியிரி எதிர்ப்பு Antibodies. இதையே கொரோனாவைரசுக்கு எதிராக மருந்தாக திருப்பி விடலாம் என்கிறார்கள். கிட்டத்தட்ட தடுப்பூசி மாதிரி. (கொரோனாவைரஸ் ஆர்என்ஏவின் வேதியல் கட்டமைப்பின் ஒரு பகுதி) எபோலா, மெர்ஸ் ஆகிய வைரஸ்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட Remdesivirதான் கொரோனாவுக்கு சிறப்பாக எதிர் மருந்து என்ற கருத்துக்களும் முன் வைக்கப்படுகின்றன. Genome sequence of the 2019 ncov coronavirusஇந்த மருந்து வைரஸ்களின் ஜீன் எனப்படும் ஆர்என்ஏக்களையே குழப்பி, சேதப்படுத்தும் சக்தி கொண்டது. இதனால் வைரஸ்கள் பல்கி பெருகுவதை தடுக்கலாம் என்கிறார்கள். மனிதனை வெல்ல கொரோனாவும், கொரோனாவை வெல்ல மனிதனுமாய்.. போராட்டங்கள் தொடர்கின்

உடலின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி வெல்லும் கொரோனா வைரஸ்-செல்களுக்குள் நடக்கும் உயிர் போராட்டம்

உடலின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி வெல்லும் கொரோனா கடந்த டிசம்பர் 2019ல் தனது நாட்டின் ஊஹான் நகரில் கொரோனா வைரஸ் என்ற புதிய வகை வைரஸ் தாக்கி வருவதாக சீனா வெளியுலகுக்கு முதன் முதலாக தெரிவித்தது. How Coronavirus defeats Immune system of Human body?இந்த வைரஸ் Severe acute respiratory syndrome (SARS-2) என்ற வகையை சேர்ந்தது. இந்த வைரஸ் உருவாக்கும் நோய்க்குப் பெயர் தான் கோவிட் -19 வைரஸ் என்றால்?... முழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் வைரஸ். ஒரு ஆர்என்ஏ(நமது செல்களில் ஜீன் எனப்படும் டிஎன்ஏ இருப்பது மாதிரி வைரஸ்களில் இருப்பது டிஎன்ஏவின் அரைகுறை வடிவமான RNA) அதைச் சுற்றி ஒரு புரதம் (Protein) மற்றும் கொழுப்பு சேர்ந்த ஒரு உறை (ஆல்கஹால் கொண்ட சானிடைசர்கள், சோப்பு நுரை பட்டால் இந்த உறை கறைந்து வைரஸ் அவுட்). அந்த உறையின் மீது ஆங்காங்கே முட்கள். இது தான் கொரோனா வைரஸ். இந்த முட்களின் வேலை எளிதாக எதிலும் ஒட்டிக் கொள்ளவதே. இந்த முட்களும் புரதத்தால் ஆனவையே. கொரோனா வைரசில் இந்த முட்கள் பார்ப்பதற்கு கிரீடத்தில் (Crown) இருக்கும் வேலைப்பாடு போல இருப்பதால் இந்த வைரசுக்கு கொரோனா வைரஸ் எனப் பெயர். இதை ஏன் அரைகுறை உயிரி என்கிறோம். இந்த வைரஸ்களால் தானாக வாழ முடியாது. இது ஒரு முழுமையான ஒட்டுண்ணி. ஏதோ ஒரு உயிரினத்தின் செல்லுக்குள் புகுந்து அந்த செல்லில் இருக்கும் திட, திரவப் பொருட்களையே உணவாக்கிக் கொண்டு பல்கிப் பெருகுவது தான் வைரஸ்களின் வேலை. செல்லுக்கு வெளியே சில மணி நேரமோ அல்லது சில நாட்களோ தான் இதனால் தாக்குப் பிடிக்க முடியும். இந்த வைரஸ் மூக்கு, வாய் அல்லது கண் வழியாக உள்ளே நுழைந்தவுடன் முதலில் தொண்டப் பகுதியை தாக்குகிறது. தொண்டையில் உள்ள திசுக்களின் செல்களில் இது பல்கிப் பெருகியவுடன் தான் தொண்டை வலியும் இருமலும் தொடங்குகிறது. இந்த வைரஸ்களை எதிர்த்து நம் உடலின் எதிர்ப்பு சக்தி (Immune system) மோதலை தொடங்குகிறது. அந்த மோதலின் அறிகுறி தான் காய்ச்சல். பெரும்பாலான வைரஸ்கள் அதிக வெப்ப நிலையை தாங்க முடியாதவை என்பதால், உடலின் வெப்ப நிலையை உயர்த்தி வைரஸ்களை காலி செய்ய நமது உடலின் எதிர்ப்பு சக்தி முயற்சிக்கிறது. இந்த மோதலின்போதே பெரும்பாலான வைரஸ்களை நமது உடல் கொன்று விடுகிறது, கொரோனா வைரஸ் உள்பட. நமது உடலின் (Immune system) ஒரு மாபெரும் பாதுகாப்பு அரண். வைரஸோ, பாக்டீரியாவோ அல்லது வேறு ஒரு நுண்ணுயிரோ உடலுக்குள் புகுந்தவுடன் அவற்றை நமது உடல் இரு வகையான காரணிகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கிறது. முதலாவது அந்த நுண்ணியிர் வெளியிடும் வேதியியல் பொருட்கள், இரண்டாவது அந்த நுண்ணியிரின் உருவம். இது வெளியில் இருந்து வந்த பொருள் என்பதை கண்டுபிடித்த உடனே நமது ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் அவற்றை கொல்லும் வேலையில் இறங்குகின்றன. வைரஸ், பாக்டீரியாவை அப்படியே விழுங்கி ஏப்பம் விடும் வேலைக்கு Macrophages, Neutrophils போன்ற அடியாட்களை வெள்ளை அணுக்கள் அனுப்புகின்றன. ஆனால், இதையும் தாண்டி வைரஸோ பாக்டீரியாவோ உடலை பதம் பார்க்க ஆரம்பித்தால், அடுத்த கட்ட அரண்கள் வேலையில் இறங்கும். அதில் ஒன்று Innate lymphoid cells. இதன் ஒரு பிரிவான T- Killer cellகளின் வேலை வைரஸ்களால் பாதிக்கப்பட்ட உடல் செல்களை கொன்று, வெளியேற்றி உடல் திசுக்கள் மேலும் மோசமடையாமல் தடுப்பது. மேலும் வைரஸ்களுக்கு உணவாகிக் கொண்டிருக்கும் செல்களின் எண்ணிக்கையை குறைப்பது. இது தான் இதன் வேலை. அதே நேரத்தில் Macrophages, Neutrophils போன்றவற்றால் தடுக்க முடியாத வைரஸ்களை ஒழித்துக் கட்ட நமது உடல் அனுப்பும் பிரம்மாஸ்திரம் தான் B cells எனப்படும் வைரஸ்களை தாக்கும் செல்கள். இந்த செல்கள் வைரஸ்களின் உருவத்தை அடையாளம் கண்டு, அதன் மீது ஒட்டிக் கொண்டு, அப்படியே இழுத்துச் சென்று Lumph nodes எனப்படும் நிணநீர் சுரப்பிகளில் வைத்து, அங்கு சுரக்கும் ரசாயனங்கள் உதவியோடு வைரஸ்களை கொல்லும். இந்த உடல் எதிர்ப்பு சக்தி ஒரு பக்கம் இருக்க... தொண்டைப்பகுதியை அடைந்த கொரோனா வைரஸ்கள் அடுத்ததாக நமது உடலை பாதிப்பது நுரையீரலை. நுரையீரலின் உள் சுவற்றில் இருப்பவை மிக லேசான பில்லியன் கணக்கான எபிதீலியல் செல்கள். இந்த செல்களில் கொரோனா வைரஸ் ஒட்டிக் கொண்டு, துளை போட்டு தனது ஆர்என்ஏவை உள்ளே நுழைக்கும். இந்த ஆர்என்ஏ செல்லுக்குள் போய் லட்சக்கணக்கில் தனது பிரதிகளை ஜெராக்ஸ் மெசின் மாதிரி காப்பி எடுக்கும். இன்த ஒவ்வொரு ஆர்என்ஏவும் ஒரு வைரசாக மாறும். அந்த செல் முழுக்கவே வைரஸ்களால் நிறையும்போது, அந்த செல்லே வெடித்து மடியும். அந்த வெடிப்பில் இருந்து கிளம்பும் லட்சக்கணக்கான வைரஸ்கள் அடுத்தடுத்த செல்களை இதே போல தாக்கி அழித்து, பல்கிப் பெருகும். 10 நாட்களில் நுரையீரலின் பெரும்பாலான செல்களை இந்த வைரஸ் ஆக்கிரமிக்கும். இதுவரையும் கூட பிரச்சனை அதிகமில்லை. ஆனால், இந்த வைரஸ்களை அழிக்க நமது உடலின் Immune cells எனப்படும் எதிர் தாக்குதல் செல்கள் நுரையீரலில் நுழைந்து தாக்க ஆரம்பிக்கும்போது தான் பிரச்சனையே துவங்குகிறது. மற்ற வைரஸ்களில் இருந்து கொரோனா இங்கே தான் மாறுபடுகிறது. இந்த கொரோனா வைரஸ், நமது உடலின் எதிர் தாக்குதல் செல்களுக்குள்ளேயே நுழைந்து அதையும் சேதப்படுகின்றன. சேதப்படுத்துவதோடு மட்டுமல்ல, அந்த செல்களின் ஜீன்களில் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன. அது என்ன வகையான குழப்பம்... நமது Immune system செல்கள் ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாறிக் கொள்வது சைட்டோகைன்ஸ் (Cytokines) எனப்படும் ஒரு வேதிப் பொருள் மூலம் தான். ஜீன்கள் பாதிக்கப்பட்ட எதிர் தாக்குதல் செல்கள் குழப்பமான சைட்டோகைன் தகவல்கள் அனுப்ப, நுரையீரலை பாதுகாக்க கிளம்பி வரும் Neutrophils செல்கள், கொரோனா வைரஸ்களுக்கு பதலாக உடலின் எதிர்ப்பு சக்தி செல்களை தாக்க ஆரம்பிக்கும். அதே போல பாதிக்கப்பட்ட நுரையீரல் செல்களை தற்கொலை செய்ய வைத்து நோய் மேலும் பரவாமல் தடுக்க வேண்டிய வேலைக்காக வரும் T- Killer cellகள் வந்த வேலையை விட்டு விட்டு, நன்றாக இருக்கும் நுரையீரல் செல்களை அழியச் சொல்லி தகவல் தரும். இதனால் நுரையீரல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி, அடுத்ததாக பாக்டீரியா தாக்குதல், நிமோனியா உள்ளிட்ட தோற்று நோய்களுக்கு ஆளாக நேரிடும். இந்த இடத்தில் தான் மரணங்கள் நிகழ்கின்றன. இப்படி உடலின் எதிர்ப்பு சக்தியையே நமது உடலுக்கு எதிராக திருப்பி விடுவதில் தான் கொரோனா வைரசின் முழு சக்தியும் அடங்கியுள்ளது. வைரசின் உருவத்தை வைத்து அடையாளம காணும் B- cellகள் கூட கொரோனாவிடம் இதுவரை எளிதில் வெற்றியை ஈட்டவில்லை. இந்த வைரஸ்கள் அனுப்பும் வேதியல் தகவல்கள் (Cytokines) எல்லா நேரமும் ஒரே மாதிரியாக இல்லை. அவை லட்சக்கணக்கான வகைகளில் மாறிக் கொண்டே இருப்பதால் T-killer cells, B cells ஆகியவற்றால் இவற்றை சரியாக அடையாளம் காண முடியவில்லை. இது தான் இந்த வைரசுக்கு எதிராக மருந்தோ தடுப்பு ஊசியோ தயாரிப்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிபது. நாம் உண்ணும் அல்லது ஊசி மூலம் போட்டுக் கொள்ளும் மருந்துகள் உடலுக்குள் சென்றவுடன் வேதியியல் தகவல்களாக மாறித்தான் நோயை ஏற்படுத்தும் கிருமிகளோடு நேரடியாக மோதுகின்றன அல்லது உடலின் Immune system- உடன் பேசி, வேண்டிய எதிர்ப்பு மருந்தை உடலையே தயாரிக்க வைக்கின்றன. How Coronavirus defeats Immune system of Human body?ஆனால், கொரோனா நமது உடல் எதிர்ப்பு சக்தி சிஸ்டத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றுவிடுவது தான் இந்த வைரசுக்கு எதிராக எந்த மருந்தை வைத்து போராடுவது என்ற குழப்பத்தில் மருத்துவ உலகை ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரஸ்களின் கெமிக்கல் தாக்குதல்களால் குழம்பிப்போன T-killer cells, B cells-களும் ஏற்கனவே கொரோனா பாதித்த நுரையீரல்களை மேலும் பாதித்து உலகெங்கும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை,How Coronavirus defeats Immune system of Human body? நோய் எதிர்ப்பு சக்தியில் பிரச்சனை உள்ளவர்களில் தான் இந்த உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படுகிறது. நல்ல உடல் நிலையில் உள்ளவர்களுக்கு பிரச்சனை குறைவாகவே உள்ளது. உடலில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பெரும் குழப்பத்துக்கிடையிலும் பெரும்பாலான நேரங்களில் நமது உடல் எதிர்ப்பு சக்தி சிஸ்டம் கொரோனா வைரஸை தோற்கடித்துவிடுகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்களின் ரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையால் உடலின் எதிர்ப்பு சக்தி முடக்குகிறது. அதே போல இதயக் கோளாறு, பி.பி உள்ளவர்களின் உடலில் நுண்ணிய ரத்தக் குழாய்கள் போதிய ரத்தத்தை எடுத்துச் செல்வதில் சிக்கல் வருவதால், உடலின் எல்லா பகுதிக்கும் போதி சக்தி கிடைப்பதில்லை, நோய் எதிர்ப்பு சக்தி உள்பட. ஆனால், சர்க்கரை அளவும் பிபியும் மருந்துகள், உடற்பயிற்சி மூலம் கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கு பிரச்சனை இல்லை. இங்கேயும் உடலின் எதிர்ப்பு சக்தி கொரோனாவை தோற்கடித்துவிடுகிறது என்பது தான் நல்ல செய்தி. கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிடுவார்களா? தெரியவில்லை. 35 ஆண்டுகளுக்கு முன் வந்த எய்ட்ஸ் நோய்க்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த எச்ஐவி வைரசும் கொரோனா வைரஸ் ரகத்தை சேர்ந்தது தான். அதுவும் நமது உடலின் எதிர்ப்பு சக்தியை கதிகலங்க வைக்கும் வைரஸ் தான். How Coronavirus defeats Immune system of Human body?ஆனால், கொரோனா மாதிரி எச்ஐவி இவ்வளவு சாதாராணமாக இருமல், தும்மல் மூலம் எல்லாம் பரவவில்லை. அந்த வகையில் கொரோனா தான் கொடூரம். அதற்குத் தான் வீட்டிலேயே முடங்க சொல்கிறார்கள். இன்னும் மருந்து இல்லாத நிலையில், இந்த நோயில் இருந்து தப்பிப்பதே உசிதம். இந்த நோய் தாக்குதலை தவிர்ப்பதே இதற்கான இப்போதையே ஒரே மருந்து!

Read more at: https://tamil.oneindia.com/editor-speaks/how-coronavirus-defeats-immune-system-of-human-body-380658.html