ஆந்திர பிரதேசம் சுற்றுலா -

இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையோரம் காண்பவர் கண்களை கண்டவுடன் கவரும் மனம் மயக்கும் சுற்றுலா மையமாக ஆந்திர பிரதேச மாநிலம் திகழ்ந்து வருகிறது. எங்கேயும் காணாத அற்புதங்கள் ஏராளம் எல்லையற்று உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த போகிறது இந்த தெலுங்கு தேச பூமியில்!...
ஆந்திர பிரதேசம்

உலக வரைபடத்தில் ஆந்திர மாநிலத்தை காணும் எவருமே இங்குதானே திருப்பதிவெங்கடேஸ்வரா கோயில் உள்ளது என்று பக்தி பரவசத்தில் ஆச்சரியம் குறையாமல் சொல்வதும், ஹைதராபாத்தை பற்றிய நினைவு வந்தவுடன் நிஜாம்களும், வரலாற்றுச் சின்னங்களும் நம் சிந்தையிலேயே உயிரோவியம் போல களங்கமற்று பிரதிபலிப்பதும் மிகச் சாதாரணமாக ஏற்படக்கூடிய அசாதாரண உணர்வுகள்.
ஆந்திராவின் வானிலையும், நிலவியலும்!
ஆந்திர மாநிலத்தில் அமைந்திருக்கும் ஒவ்வொரு நகரமும், கிராமமும் அதனதன் புவியியல் அமைப்பு சார்ந்து வெவ்வேறு சீதோஷ்ண நிலையை கொண்டிருக்கின்றன. எனினும் பொதுவாக பார்க்கின்ற பொழுது ஆந்திராவின் கோடை காலங்கள் 20 மற்றும் 41 டிகிரிக்கு இடைப்பட்ட வெப்பநிலையுடன் மிகவும் சூடானதாகவும், ஈரப்பதம் மிகுந்ததாகவும் காணப்படும்.
அதோடு ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் நல்ல மழைப்பொழிவையும் ஆந்திர மாநிலம் பெற்று வருகிறது. அதேவேளையில் நீண்ட கடலோரப் பகுதியை கொண்டிருக்கும் ஆந்திராவின் பனிக் காலங்களில் 12 முதல் 30 டிகிரி வெப்பநிலையுடன் இதமான வானிலையே நிலவும்.
ஆந்திர மக்கள் உதிர்த்திடும் மொழியும், சுவைத்திடும் உணவும்!
ஆந்திர மாநிலத்தில் பரவலாக பேசப்படுவதும், அதிகாரப் பூர்வ மொழியாகவும் தெலுங்கு மொழியே திகழ்ந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக உருது மற்றும் ஆங்கில பாஷைகள் அதிக எண்ணிக்கையில் பேசப்படுவதோடு, அங்குமிங்கும் ஹிந்தியும், தமிழும் நம் காதுகளில் விழும்.
ஆந்திராவின் உணவு வகைகள் குறித்து பேசும்பொழுது இந்தியாவில் ஆந்திர மக்களை போல எவரும் இவ்வளவு காரசாரமான உணவை உண்பதில்லை என்றே சொல்ல வேண்டும்.
இங்கு காய்கறிகளை கொண்டு தயார் செய்யப்படும் உணவுகளில் பேசராட்டு, ஆலசனந்த வடாலு, காரமான ஊறுகாய்கள், சட்னி வகைகள், அகுக்குற புலகுரா போன்ற பதார்த்தங்கள் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம்.
அதுமட்டுமல்லாமல் பிரியாணி, கொங்குரா-மாம்சம், மீன் குழம்பு, கோடி-வேப்புடு உள்ளிட்ட அசைவ உணவு வகைகளின் ருசி என்றென்றைக்கும் உங்கள் அடிநாக்கில் சுவைத்துக் கொண்டே இருக்கும்.
ஆந்திராவின் கலாச்சாரம்
ஆந்திர மாநிலத்தின் கலாச்சாரம் தனித்துவமானது மட்டுமல்லாமல், அது அந்த மாநிலத்து மக்களின் வாழ்கையிலும் பிரதிபலித்து சிறப்பானதொரு பீடத்தில் அம்மக்களை அமர்ந்திட செய்திருக்கிறது.
உலக அளவில் கர்நாடக சங்கீதம் என்றாலே அது தெலுங்கு கீர்த்தனைகள் என்றளவுக்கு பெருமை கொள்ளக்கூடிய தெலுங்கு மொழியை அதிகாரப்பூர்வ மொழியாக கொண்டிருப்பதும், ஆடைகள், தத்துவம், வரலாறு என்று அனைத்திலும் தனி முத்திரையை பதித்திடும் ஆந்திராவின் கலாச்சாரம் சார்ந்த சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆந்திராவில் சுற்றுலாத் துறை என்றுமே வளம் கொழிக்கும் துறையாக இருக்கின்ற காரணத்தினாலேயே ஆந்திர பிரதேச சுற்றுலாத் துறை 'கோஹினூர் ஆஃப் இந்தியா' என்று அதற்கு பெயரிட்டுள்ளது.
அதோடு திருமலா வெங்கடேஸ்வரா கோயில், ஹைதராபாத்விசாகப்பட்டணம்,விஜயவாடாகுண்டூர்கடப்பாகம்மம்நெல்லூர்புட்டப்பர்த்திநிஜாமாபாத் போன்ற நாட்டின் முக்கிய சுற்றுலாப் பகுதிகள் ஆந்திராவில் நிறைந்து கிடக்கின்றன.
ஆந்திராவை எப்படி அடைவது?
ஆந்திராவிற்கு நீங்கள் சுற்றுலா வருவதற்கு திட்டமிடுகிறீர்கள் என்றால் ஆந்திராவை எவ்வாறு அடைவது என்பது பற்றி கவலையே கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் இந்திய சுற்றுலாவையே தன் பக்கம் சுண்டி இழுக்கும் ஆந்திராவுக்கு உலகின் எந்த மூலையிலிருந்தும், விமானம், ரயில் என்று எந்த மார்கத்தின் மூலமும் சுலபமாக வந்து சேரலாம்.  

No comments:

Post a Comment