மலேரியாவை வெல்ல இலங்கையை கவனியுங்கள்!

Image result for malariaஇலங்கையில் மலேரியா நோய் ஒழிந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமாக உள்ள உலக நலவாழ்வு நிறுவனம், இலங்கையின் இந்தச் சாதனையை அங்கீகரித்துள்ளது. ஒரு நாட்டில், குறிப்பிட்ட நோய் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு யாரையும் தாக்கவில்லை என்றால் அந்த நோய், அந்த நாட்டில் ஒழிந்துவிட்டதாக உலக நலவாழ்வு நிறுவனம் அறிவிக்கும். அதன்படி, இலங்கையில் அக்டோபர் 2012-ல் மலேரியா காய்ச்சலில் ஒருவர் பாதிக்கப்பட்டார். அதற்குப் பிறகு யாரும் பாதிக்கப்படவில்லை.
உள்நாட்டுக்குள்ளே மலேரியா தொற்று இல்லை என்றாலும், மலேரியாவால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வந்துவிடாமல் தடுக்க இலங்கை முயன்றுவருகிறது. அங்கே 2013, 2014, 2015 ஆண்டுகளில் முறையே 95,49, 36 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் உள்ளன. ஆனால், அவை எல்லாமும் இலங்கைக்கு வெளியிலிருந்து வந்தவை. வெளிநாட்டவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் ரத்தப் பரிசோதனைகள் நடத்துவது தற்போது தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது.
மலேரியா கிருமிகள் பரவாமல் முன்னதாகத் தடுத்தும், கிருமித் தொற்று ஏற்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்தும் இலங்கை செய்த தீவிரப் பணி இந்த நோயை ஒழிக்க உதவியிருக்கிறது. வீடு வீடாகச் சென்று பரிசோதித்தது, அதிக நோய்த் தொற்று உள்ள பகுதிகளுக்கு நடமாடும் மருத்துவமனைகளை அனுப்பியது, தரமான கண்காணிப்பு முறைகள், மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்கி அவர்களையும் மலேரியாவுக்கு எதிரான பணிகளில் ஈடுபடுத்தியது என்று இலங்கை இந்நோய் ஒழிப்புக்கு உதவியுள்ளது. இலங்கையின் அரசுத் துறையும் தனியார் துறையும் மலேரியாவை ஒழிக்க இணைந்து பணியாற்றியுள்ளன. மலேரியா நோய் இருக்கிறதா என்பதை 100% பரிசோதித்து உறுதிப்படுத்தியுள்ளனர். கொசுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கப் பல்வேறு முறைகளைக் கையாண்டுள்ளனர். தீவிர மலேரியா பாதிப்பு உள்ள இடங்களில் கொசுக்களிலிருந்து பாதுகாப்பு தரக்கூடிய வலைகளும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
முன்னதாக, 1963-ல் மலேரியாவை ஒழிக்கும் நிலையை இலங்கை நெருங்கியது. அப்போது வெறும் 17 பேர்தான் மலேரியாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும், பாதுகாப்பு முறைகளை முன்னதாக நிறுத்தியதாலும் தடுப்பு மருந்துகளின் ஆற்றலைத் தாக்குப்பிடிக்கும் நிலையை மலேரியா கிருமிகள் அடைந்ததாலும் 1980-களில் மலேரியாவால் பாதிக்கப்படுவது மீண்டும் அதிகரித்தது. மலேரியாவை ஒழிப்பதற்கான அப்போதைய இயக்கம் தோற்றதற்குத் துல்லியமான காரணங்கள் தெரியவில்லைதான். ஆனாலும், உள்நாட்டில் மலேரியாவைப் பரப்பிய கிருமிகள் அப்போது தரப்பட்ட மருந்துகளைத் தாக்குப்பிடித்து வளர்ந்துவிட்டன என்பது ஒரு முக்கியக் காரணம்.
ஆனால், 2000-ல் நிலைமை மீண்டும் சாதகமாகத் திரும்பியது. மலேரியாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ச்சியாகக் குறைந்தது. 1960-க்குப் பிறகு மலேரியாவை ஒழித்த நாடுகளில் இலங்கைக்கு 34-வது இடம். 2015-ல் மாலத்தீவு மலேரியா இல்லாத நாடு என்று நற்சான்று பெற்றது. அர்ஜெண்டினாவும் கிர்கிஸ்தானும் அத்தகைய நற்சான்றை நோக்கி விரைந்துகொண்டிருக்கின்றன.
இந்தியாவில் மலேரியாவை ஒழிப்பது இன்னும் பெரிய பிரச்சினையாகவே நீடிக்கிறது. இலங்கையைவிட இந்தியாவின் மலேரியா பிரச்சினை அளவில் பெரியது. சிக்கலானது. ஆனாலும்கூட இலங்கையிடமிருந்து இந்தியா கற்க வேண்டிய பாடங்கள் இருக்கின்றன. மலேரியாவால் ஆண்டுக்கு 40 ஆயிரம் பேர் வரை இந்தியாவில் உயிரிழப்பதாகச் சொல்கின்றன கள ஆய்வு அறிக்கைகள். இனியும் நாம் இப்படியே கடக்கலாகாது!

No comments:

Post a Comment