எப்படி வென்றார் ட்ரம்ப்?

ட்ரம்பின் வெற்றி உலகமயமாக்கலுக்கும் சுதந்திர வர்த்தகத்துக்கும் பின்னடைவு
சான்பிரான்சிஸ்கோ நகரின் ஃபெரி ப்ளாஸா, உலகின் மிக அழகிய மூடிய சந்தைகளில் ஒன்று. சந்தைக்குப் பின்னால் கடல். ஓரமாக நடந்துபோனால் ‘கோல்டன் கேட்’ பாலத்தை அடையலாம். ட்ரம்ப் வெற்றிக்கு மறுநாள் நானும் என் மனைவியும் ட்ராம் ஒன்றில் ஏறி அங்கு வந்தோம். ப்ளாஸாவுக்கு முன்னால் சில இளைஞர்களைப் பார்த்தோம். கையில் அட்டைகள். ‘ட்ரம்ப் பிஸ்ஸாவை முள்கரண்டியால் சாப்பிடுகிறார்’, ‘ட்ரம்ப் தேசிய அவமானம்’, ‘நாங்கள் வெறுக்க மாட்டோம், எங்கள் நாடு ஒற்றுமையின் சின்னம்’போன்ற வாசகங்களைத் தாங்கியவை.
இரண்டு நாட்களுக்கு முன்னர் இரவில் சற்று நேரத்துக்கு முன் நகர மையக் கட்டிடத்துக்கு முன்னால் மெழுகுவத்திகளை வைத்துக்கொண்டு பெண்கள் நிற்பதைப் பார்த்தேன். அமெரிக்கா இறந்துவிட்டது என்கிறார்கள். ஆனால், நான் முன்பே சொன்னதுபோல கலிஃபோர்னியா அமெரிக்கா இல்லை. அமெரிக்கா ட்ரம்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. அது நிச்சயம் இறக்கவில்லை. மக்கள் ஆதரவு ஹிலாரிக்கு அதிகம் இருந்தாலும், அதிக மாநில ஓட்டுகளை ட்ரம்ப் பெற்றிருப்பதால் அவரே அதிபர் ஆவார் என்பது உறுதி. அதற்கு எதிராக நடக்கும் முயற்சிகள் பிசுபிசுத்துப் போகும் என்பதும் உறுதி. கலிஃபோர்னியா பிரிந்துபோக வேண்டும் என்றும்கூட வெறுப்பில் சிலர் சொல்கிறார்கள். அது நடக்காது என்பதும் உறுதி.
யார் காரணம்?
மிகத் திறமைவாய்ந்த இரண்டு இளைஞர்களிடம் கேட்டேன். ஒருவர் இந்தியர். மற்றவர் அமெரிக்கப் பெண். அவர்கள் சொன்னது: எங்களைக் கேட்டால் ட்ரம்பை வெற்றி பெற வைத்தவர்கள் அவரது ஆதரவாளர்கள் இல்லை. ஹிலாரியின் ஆதரவாளர்கள் என்றே சொல்வோம். ஹிலாரி இன்றுவரை போட்டியிட்டவர்களில் மிகவும் திறமை மிக்கவர் என்பது உண்மை. இன்றுவரை போட்டியிட்டவர்களில் தேர்ந்தெடுக்கப்படக் கூடாதவர்கள் பட்டியலில் ட்ரம்ப் இருப்பார் என்பதும் உண்மை. ஆனால், அவரை ஆதரித்தவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. ஹிலாரி ஆதரவாளர்கள் சிகரத்தில் நின்றுகொண்டு கீழே உழலும் எங்களை ஏளனமாகப் பார்க்கின்றனர். எங்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்று நினைத்தனர். ட்ரம்பின் குறைகளைப் பற்றி எதிரிகள் அதிகம் பேசப் பேச, அவர் அப்படித்தான் இருப்பார். அவர் அவராக இருப்பதுதான் எங்களுக்குப் பிடித்திருக்கிறது என்றனர்.
மோடியையும் ட்ரம்பையும் ஒப்பிட முடியாது என்றாலும், ஒரு புள்ளியில் இருவரும் இணைகின்றனர். மோடி டெல்லியில் பயமின்றித் திரிந்துகொண்டிருந்த ஊழல் பெருச்சாளிகளை ஒழித்துவிடுவார் என்று மக்கள் எதிர்பார்த்தனர். அதே போன்று அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டனில் இருக்கும் ஊழல் பேர்வழிகளுக்கு ட்ரம்ப் சாவு மணி அடிப்பார் என்று அமெரிக்க மக்கள் நினைக்கின்றனர்.
ஒன்றும் செய்யாத ஒபாமா
ஒபாமா திறமையானவர், மிகவும் நாகரிகமானவர் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் அவரது எட்டு வருட ஆட்சியில், ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் நிலையில் அதிக மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. இதை ட்ரம்ப் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார். மிச்சிகன் நகரில் அவர் பேசியபோது, ‘‘அமெரிக்க கார் தொழில் நிறுவனங்கள் பின்னடைந்திருப்பதற்கு ஜனநாயகக் கட்சியே காரணம்’’ என்று குற்றம்சாட்டினார். குறிப்பாக, ஆப்பிரிக்க அமெரிக்கர்களிடம் சொன்னார், “இந்த ஆட்சியால் உங்களுக்குத் துன்பம்தான் அதிகம் ஏற்பட்டது. இதைவிடக் கீழே நீங்கள் போக முடியாது. எனக்கு ஓட்டு போட்டால் நீங்கள் இழக்கப்போவது ஒன்றுமில்லை”. அவர்கள் ட்ரம்புக்கு ஓட்டு போடவில்லை. ஆனால், யாருக்குமே ஓட்டு போடாமல் இருந்துவிட்டார்கள்.
அமெரிக்கப் பெண் முக்கியமான தகவல் ஒன்றைச் சொன்னார். ட்ரம்ப் பெண்களுக்கு எதிரி என்பதையெல்லாம் வெள்ளைக்காரப் பெண்கள் நம்பவில்லை. மொத்தம் 42% பெண்கள் வாக்களித்திருக்கின்றனர். அவர்களில் வெள்ளை இனத்தவர்களை மட்டும் பிரித்தால் 50% மேல் ட்ரம்புக்கு வாக்களித்திருக்கின்றனர். பட்டதாரியில்லாத அமெரிக்கர்கள் வாக்களித்துள்ளனர், வேலைகள் கிடைக்கும், வாழ்க்கைத்தரம் உயரும் என்ற நம்பிக்கையில்.
அச்சம் தேவையா?
அமெரிக்காவில் இப்போது இருக்கும் இந்தியர்களும், இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்களும், ஹிஸ்பானிக்குகளும் பயப்படத் தேவையா? நிச்சயம் இல்லை என்கிறார்கள் ட்ரம்பைச் சேர்ந்தவர்கள். நாங்கள் குற்றம் செய்தவர்களை உள்ளே விடக் கூடாது என்று சொன்னோமே தவிர, மற்றவர்களைப் பற்றிச் சொல்லவில்லை என்கிறார்கள். அதே போன்று, ‘மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுவேன்’ என்று சொன்னது தேர்தல் பிரச்சாரமே தவிர, அதை உண்மை என்று எடுத்துக்கொள்ளக் கூடாது என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் சொல்கிறார். ஆனால், நாஃப்டா என்று அழைக்கப்படும் வட அமெரிக்கச் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் விதிகள் மாற்றியமைக்கப்படும் என்பது நிச்சயம். கனடாவிலிருந்து பேசிய நண்பர் ஒருவர், அந்நாட்டின் பொருளாதாரம் நிச்சயம் பாதிக்கப்படும் என்று சொன்னார். மெக்சிகோவிலும் வேலைகள் மாயமாகலாம்.
உலகமயமாக்கல்
ட்ரம்பின் வெற்றி உலகமயமாக்கலுக்கும் சுதந்திர வர்த்தகத்துக்கும் பின்னடைவு என்றுதான் சொல்ல வேண்டும். எண்பதுகளில் வலுவடையத் தொடங்கிய இந்தக் கொள்கைகள் ஐரோப்பியச் சந்தையிலிருந்து வெளியேறுவதை ஆதரித்து பிரிட்டிஷ் மக்கள் ஓட்டு அளிக்கும்போதே ஆட்டம் காணத் தொடங்கிவிட்டன. இப்போது ட்ரம்ப் அமெரிக்க தேசியத்தைப் பேசி வெற்றியடைந்திருக்கிறார். ஆனால், அமெரிக்காவின் பொருளாதாரத்தை ஆட்டிப் படைக்கும் நிதி மூலதன முதலைகள் அவர் தேர்தலில் பேசியதை அமலுக்குக் கொண்டு வர அனுமதிப்பார்களா என்பது சந்தேகம். மெக்சிகோ, கனடா மட்டுமல்லாமல், சீனா, ஜெர்மனி, தென் கொரியா போன்ற நாடுகளுடன் அமெரிக்கா பகைத்துக்கொள்ள முடியாது.
எனவே, அடுத்த நான்கு ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தின் பாதை எந்தத் திசையை நோக்கிச் செல்லும் என்பதைப் பற்றிய தெளிவு யாருக்கும் இல்லை.
இந்த நிலையில் இந்தியா என்ன செய்ய வேண்டும்?
(அமெரிக்காவைச் சுற்றுவோம்)

No comments:

Post a Comment