படக்காட்சியில் வருவது நித்யானந்தா இல்லை: ஆஸ்ரம நிர்வாகி, வழக்கறிஞர் பேட்டி

சென்னை, மார்ச் 4: நித்யானந்தா இருப்பது போல தனியார் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளியான படக்காட்சிகள் முற்றிலும் பொய்யானவை என அவரது மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்ம கிருபானந்தா, வழக்கறிஞர் ஸ்ரீதர் ஆகியோர் மறுத்துள்ளனர்.


இது தொடர்பாக இவர்கள் இருவரும் சென்னையில் கூட்டாக நிருபர்களிடம் கூறியது:

கிராபிக்ஸ் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ஒளிப்பதிவுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. நித்யானந்தத்தின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் இதை வெளியிட்டவர்கள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் தொலைக்காட்சியினர் தங்களுக்கு கிடைத்த படக்காட்சிகளில் இருப்பவர் நித்யானந்தாதானா என்பதை எங்களிடம் கேட்டு உறுதிப்படுத்தவில்லை. அந்த காட்சிகளில் இருப்பது நித்யானந்தா இல்லை.

முதல்நாளில் அதில் வரும் பெண்ணின் முகத்தை மறைத்து வெளியிட்டவர்கள் அடுத்தநாள் அவரது முகத்தை தெளிவாகக் காட்டினர். இதற்கு இடைப்பட்ட சமயத்தில் நடந்தது என்ன?

இந்த படக்காட்சிகள் யாரால், எங்கு, எப்போது, எதற்காக எடுக்கப்பட்டது என்பது குறித்து தனியார் தொலைக்காட்சி சார்பில் உறுதியான தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

அந்த படக்காட்சியில் இருப்பவர் நித்யானந்தா இல்லை. ஆனால், இதை இப்போதைய சூழலில் நிருபிக்கும் நிலையில் நாங்கள் இல்லை.

அடையாளம் தெரியாத சிலர் நித்யானந்தா வேறு பெண்களுடன் இருப்பது போல கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட படங்களை இ-மெயில் மூலம் அனுப்பி வந்தனர். இவ்வாறு அனுப்பி எங்களை தொந்தரவு செய்த கும்பலே இந்த சதியின் பின்னணியிலும் இருப்பார்கள் என தெரியவந்துள்ளது. அந்த கும்பலை கண்டுபிடிக்க வேண்டியது காவல் துறையின் பொறுப்பு.

கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ள நித்யானந்தா விரைவில் மக்கள் முன்பு தோன்றி இது தொடர்பாக உரிய விளக்கம் அளிப்பார் என்று அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment