காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் 32வது நாளாக இன்றும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்திருக்கிறது. எல்லைகள் இருக்கும் வரை போர்கள் ஓயாது என்று சொல்வதுண்டு. ஆனால் எல்லையே இல்லாமல் இன்னும் பல போர்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. அதில் முக்கியமானது இஸ்ரேல்-பாலஸ்தீன போர். இஸ்ரேலில் இருப்பவர்கள் யூதர்கள். பாலஸ்தீனத்தில் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். 1940களில் பாலஸ்தீனம் முழுவதும் இஸ்லாமியர்கள்தான் இருந்தனர். அப்போது ஜெர்மனியிடமிருந்து அடைக்கலம் தேடி வந்த யூதர்கள் இங்கு அகதிகளாக குடியேறினர். ஆனால் அவர்களுக்கு ஒரு நாடு தேவைப்பட்டது.
எனவே பாலஸ்தீனத்தை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றி தங்களுக்கான எல்லையை வகுத்துக்கொண்டனர். இதற்கு அமெரிக்காவும், பிரிட்டனும் சப்போர்ட். ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த பாலஸ்தீனர்களையும் மேற்கு கரை, காசா என இரண்டாக பிரித்துவிட்டு மீதமுள்ள நிலத்தை இஸ்ரேல் என யூதர்கள் பெயரிட்டுக்கொண்டனர். சொந்த மண்ணிலேயே தங்களை அகதிகளாக்கிவிட்டார்கள் என்கிற கோபம்தான் ஹமாஸ் எனும் அமைப்பை உருவாக்கியது. இதுதான் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலின் சுருக்கமான கதை. ஆக இப்படியாக சொந்த நிலத்திற்காக ஹமாஸும், அவர்களுக்கு எதிராக இஸ்ரேலும் அடிக்கடி மோதல்களில் ஈடுபடுவதுண்டு. இந்த மோதல் கடந்த 7ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சீரியஸானது. அதாவது ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி 1,400 பேரை கொல்ல, இஸ்ரேல் கண்மூடித்தனமான பதில் தாக்குதலில் இறங்கியது. இப்படி 32வது நாளாக தொடர்ந்து வரும் தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்திருக்கிறது. உயிரிழந்தவர்களில் 4,104 பேர் குழந்தைகள், பெண்களின் எண்ணிக்கை 2,641.
ஏற்கெனவே போர் நிறுத்தம் குறித்து ஐநா பொது சபையில் ஜோர்டன் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது. இதை இஸ்ரேல் கடைபிடிக்க வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில் அதை மதிக்காமல் இஸ்ரேல் காசா மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. அதேபோல இந்த தாக்குதலிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள எகிப்தின் ராஃபா எல்லை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக மூடப்பட்டிருந்த இந்த எல்லை தற்போது மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் இந்த எல்லையை நோக்கி செல்லும் மக்கள் மீது இஸ்ரேல் வான் வழி தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது. தற்போது காசா இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு அதை இஸ்ரேல் ராணுவம் சுற்றி வளைத்துள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.