சென்னை, பிப்.3 (டிஎன்எஸ்) 'அசல்' படத்தில் நாயகன் அஜீத்குமார் புகைப்பிடிப்பது போன்ற காட்சிக்கு பாமக சார்பில் கூறப்பட்ட புகாருக்கு சிவாஜி புரொடக்ஷன்ஸ் தரப்பில் நடிகர் பிரபு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அன்புமணிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
'அசல்' படத்தில் இடம் பெறும் புகை பிடிப்பது போன்ற காட்சி தொடர்பாக நீங்கள் எழுதிய கடிதம் எங்கள் பார்வைக்கு வந்தது. எங்கள் தந்தை சிவாஜி கணேசன் பெயரை தாங்கியுள்ள நிறுவனம் 50 வருட பாரம்பரியத்தை கொண்டது. எங்கள் தயாரிப்பான அசல் திரைப் படம் தணிக்கைக் குழுவினரால் உன்னிப்பாக பார்க்கப்பட்டு திரையிட தகுதியான சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் தணிக்கைக்கு போவதற்கு முன்பே அதன் டிரைலர் படத்திலும், திரைப்படத்திலும் புகைப்பிடித்தல் உடல் நலனுக்கு தீங்கானது என்ற அறிவிப்பை படத்தின் துவக்கத்திலேயே பதிவு செய்துள்ளோம்.
அஜீத்குமார் புகைப்பிடிப்பதனால் வரும் தீங்கை இந்த படத்தின் துவக்கத்திலேயே செய்தியாக அறிவித்திருக்கிறார். தணிக்கைக் குழு செய்ய சொல்லி கேட்டுக் கொண்டது அனைத்தையும் நிறைவு செய்திருக்கிறோம். எங்கள் தந்தையின் வழியில் எப்போதுமே இந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடந்து வருகிறோம். தமிழ் திரைப்படத் துறையின் நெருக்கடியை நன்கு உணர்ந்த தாங்கள் ஒரு இயக்கத்திற்கு பொறுப்பான தலைவராக இருப்பதால் எந்த திரைப்படத்திற்கும் குந்தகம் விளையாமல் பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இயக்குனர் சரண், நாயகன் அஜீத் சார்பில் இந்த பதிலை எழுதியிருக்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். (டிஎன்எஸ்)
Feb 03, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment