பிப்.21 'சென்னை மாரத்தான்'

சென்னை, பிப்.3 (டிஎன்எஸ்) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 8ஆவது `சென்னை மாரத்தான்` ஓட்டப் பந்தயம் வரும் 21ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

ஆண்கள், பெண்கள், மாணவர்கள், நீண்ட தூரம், குறுகிய தூரம் என போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் நடத்தப்படுகின்றன.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அரை மாரத்தான் (21.1 கி.மீ) சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து பெசன்ட்நகர் வேளாங்கண்ணி மாதா கோவில் வரை சென்று மீண்டும் தொடங்கிய இடத்திற்கு வர வேண்டும்.

இதுபோல், 42.2 கி.மீ தூரம் கொண்ட ஆண்களுக்கான முழு மாரத்தான், மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கம் முன்பு தொடங்குகிறது. பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா கோவில் வரை சென்று, மீண்டும் போட்டி தொடங்கப்பட்ட இடத்திற்கு வந்தடைய வேண்டும். இவ்வாறு இரண்டு முறை செல்ல வேண்டும்.

முழு மாரத்தான், அரை மாரத்தான தவிர மினி மாரத்தான் ஓட்டமும் ஆண்கள், பெண்கள் என தனித்தனி பிரிவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது 10 கி.மீ தூர ஓட்டமாகும்.

பள்ளி மாணவர்கள் மட்டும் பங்கேற்கும் மினி மாரத்தான் பந்தயமும் மாணவர் மாணவிகள் என தனித்தனியே நடக்கிறது. இதன் ஓட்ட தூரம் 5 கி.மீ.

மாணவர்களுக்கான ஓட்டம் நேப்பியர் பாலத்தின் மாநகராட்சி பூங்காவிலும், மாணவிகளுக்கான ஓட்டம் அண்ணாசதுக்கம் எதிரில் அமைந்துள்ள சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்தும் தொடங்கும். இவர்கள் காந்திசிலை வரை சென்று மீண்டும் போட்டி தொடங்கிய இடத்திற்கு வர வேண்டும்.

ஆண்களுக்குமான மினி மாரத்தான் மெரினா கடற்கரையின் அண்ணா நீச்சல் குளம் முன்பும், பெண்களுக்கான பந்தயம் சுவாமி சிவானந்தா சாலையிலும் தொடங்கும். இவர்கள் ஃபோர்ஷோர் எஸ்டேட் வரை சென்று மீண்டும் சிவானந்தா சாலைக்கு வருவார்கள்.

இதுபோல நிறுவனங்களின் சார்பில் பங்கேற்பவர்களுக்கும் தனித்தனியே மாரத்தான் போட்டிகள் நடத்தப்படுகின்றன. சர்வதேச தரத்திற்கு இந்த போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்க விரும்புவோர் சென்னையில் உள்ள அனைத்து நவீன விளையாட்டு அரங்கங்களிலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தலைமையகத்திலும் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.20 லட்சம். முதல் 25 இடங்களை பெறும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு தகுதிச்சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் மற்றவர்களுக்கு பங்கேற்பு சான்றுகள் உண்டு.

இதுபற்றிய விரிவான விவரங்களுக்கு http://www.chennaimarathon.org/ என்ற இணையதளத்தை அணுகலாம்.

போட்டிக்கான சின்னத்தை (லோகோ) சென்னை தலைமை செயலகத்தில் நேற்று (பிப்.2) நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது சென்னை மராத்தான் போட்டிக்கான இணையத் தளத்தையும் அவர் தொடங்கி வைத்தார். (டிஎன்எஸ்)

Feb 03, 2010

No comments:

Post a Comment