தொழில் ரீதியாக ஏற்பட்ட பகையினால். கதாநாயகனின் மகளைப் பழி வாங்க நினைக்கும் தம்பதியினர், அதற்குச் சூனியத்தின் உதவியை நாடுகின்றனர். கதாநாயகனின் பெண் குழந்தையின் காலடி மண்ணை எடுத்துச் செய்யும் சூனியத்தால் குழந்தை பாதிக்கப்படுகிறாள். கடவுள் நம்பிக்கை இல்லாத நாயகன், தன் குழந்தைக்கு நேர்ந்ததை மருத்துவ ரீதியாகத் தான் தீர்வு காண முடியும் என்று, மருத்துவர்களிடம் செல்ல, அவர்கள் புதுப் புது வியாதிகளின் பெயர்களைச் சொல்லி, அதைக் குணப்படுத்த முடியும் என்ற உத்திரவாதத்தையும் தருகின்றனர்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சிறுமி, திடீரென்று ஆண் குரலில் பேசுவது, அந்தரத்தில் பறப்பது எனப் பெற்றோர்களைப் பதற வைக்கிறார். ஒரு வழியாக இது சூனியத்தின் வேலை தான் என்று, தன் நண்பனின் மூலம் தெரிந்துகொண்டு சூனியத்தை முறியடிக்க மந்திரவாதியை நாடும் நாயகனுக்கு, "உன் மகள் இன்னும் சிறிது நேரத்தில் இறக்கப் போகிறாள்" என்று அதிர்ச்சியைத் தருகிறார் சாமியார் மந்திரவாதி. தன் மகளைக் காப்பாற்ற சூனியம் வைத்த தன் எதிரிகளின் இடத்திற்குச் சென்று போராடும் நாயகன், தன் மகளைக் காப்பாற்றினாரா, இல்லையா என்பது தான் படத்தின் முடிவு.
திகில் படம் என்பதால் படத்தில் வரும் நல்ல கதாபாத்திரங்களைக் கூட சில காட்சிகளில் கண்டு அஞ்சும் அளவிற்கு இயக்குநர் சித்திரித்திருக்கிறார். சூனியத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி படும் அவஸ்தையைப் பார்க்கும் போது, மனதே அதிர்ந்து போகிறது.
பொதுவாகத் திகில் படங்கள் என்றாலே இரவுக் காட்சிகளும், அதில் பயமுறுத்தும் காட்சிகளும் இருக்கும். ஆனால் இப்படத்தில் பகல் காட்சியில் பயமுறுத்தும் காட்சிகளை அமைத்தது இயக்குநரின் எதார்த்தத்தைக் காண்பித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளரின் 'குளோஸ் -அப்' காட்சிகளில் விளையாட்டு பொம்மைகள் கூட விபரீத உருவங்களாகத் தெரிவது திகில் படத்திற்கே உரிய அம்சம். திகில் படம் என்றாலே அதில் பின்னணி இசைக்குத்தான் முக்கியத்துவம். இப்படத்தின் இசையமைப்பாளரும் அதை உணர்ந்து ரசிகர்களைத் தன் பின்னணி இசையின் மூலம் அலற வைத்திருக்கிறார்.
இக்காலக்கட்டத்தில் சூனியமா? என்று சந்தேகப்படுபவர்களைக் கூட சிறிது நேரம், 'உண்மையாக இருக்குமோ!' என யோசிக்க வைக்கிறாள் இந்த 'பொம்மாயி'.
No comments:
Post a Comment