புதுடில்லி : லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் யார் யார் என்ற பெயர் பட்டியலை, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் முதல் முறையாக தனது இணையதளத்தில் அதிரடியாக வெளியிட்டு அம்பலப் படுத்தியுள்ளது. இதில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 123 அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இவர்களை விசாரித்து தகுந்த தண்டனை தரவும் ஊழல் கண்காணிப்பு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
அரசுத் துறைகளில் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் மேற்கொண்டுள்ளது. ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் எத்தனை பேர், அவர்கள் எந்த துறைகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த பட்டியல் மட்டும் இதுவரை, ஆண்டு தோறும் வெளியிடப்பட்டு வந்தது. தற்போது, அதிக அளவு ஊழல் புரிந்த 123 அதிகாரிகளின் பெயர்களையும், அவர்கள் பணிபுரிந்த துறைகளையும் முதல் முறையாக இணையதளத்தில் வெளியிட்டு அம்பலப் படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தி, தகுந்த தண்டனை வழங்குமாறும் பரிந்துரைத்துள்ளது.
கடந்த ஜூலையில் 101 அதிகாரிகள் பெயர் வெளியிடப்பட்டது. அவர்களில் 17 பேர், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள்; 13 பேர், டில்லி மேம்பாட்டு வாரிய அதிகாரிகள்; 11 பேர், டில்லி கார்ப்பரேஷன் அதிகாரிகள். இவர்கள் தவிர, மத்திய உள்துறை அமைச்சகத்தில் ஏழு அதிகாரிகள், நேரடி வரி விதிப்பு மைய அலுவலகத்தில் ஏழு அதிகாரிகள், இந்திய வெளியுறவுத் துறையில் இரண்டு அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொள்ளவும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ரயில்வே துறை மற்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஒன்பது அதிகாரிகள், ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தில் 11 அதிகாரிகளுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 134 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஊழல் கண்காணிப்பு ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதில், அதிக அளவாக பொதுத் துறை வங்கிகளைச் சேர்ந்த 46 அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். டில்லி மாநகராட்சி அதிகாரிகள் 25 பேர், ரயில்வே துறையைச் சேர்ந்த 13 பேர், காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்தை சேர்ந்த ஏழு பேர், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவரும் இதில் இடம் பெற்றுள்ளனர். தற்போது, ஊழல் கண்காணிப்பு ஆணையம், ஊழல் புரிந்த அதிகாரிகளின் பெயர் பட்டியலை முதல் முறையாக வெளியிட்டுள்ளது, பொதுத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பட்டியல் இங்கே.. http://www.cvc.nic.in/pn0709.pdf
No comments:
Post a Comment