பணம் மீட்பது அவ்வளவு சுலபமல்ல

புதுடில்லி : "நாட்டின் மொத்த சேமிப்பில், 10 சதவீதம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. கறுப்புப் பணத்தில் பெரும்பகுதி, நாட்டில் உள்ள மக்களில் மூன்று சதவீதத்தினர் கையில்தான் உள்ளது. கறுப்புப் பண நடவடிக்கைகளால் நாட்டின் வளர்ச்சி 5 சதவீதம் வரை பாதிக்கப்படுகிறது' என, பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சுவிஸ் உட்பட வெளிநாட்டு வங்கிகள் சிலவற்றில், இந்திய அரசியல்வாதிகளும் மற்றும் பலரும் ஏராளமான அளவில் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ளனர். இந்தப் பணம் பல லட்சம் கோடி இருக்கும் என்றும், அதை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும், இதுதொடர்பாக, மத்திய அரசு பெரிய அளவில் நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.

இந்நிலையில், டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிபுணர் கள், கறுப்புப் பண விவகாரம் குறித்து கூறியதாவது: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 50 சதவீத அளவுக்கு கருப்புச் சந்தை நடவடிக்கைகள் மூலம் பணம் வருகிறது. அரசு பின்பற்றும் கொள்கைகளில் ஏற்பட்ட தோல்வியே இதற்கு காரணம். 2009 -10ம் ஆண்டில், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 7 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள கறுப்புப்பணம் எல்லாம் கணக்கில் கொண்டு வரப்பட்டால், உள்நாட்டு மொத்த உற்பத்தியின் வளர்ச்சியானது, உண்மையில் 12 சதவீதத்தை எட்டி விடும். நாட்டின் மொத்த சேமிப்பில் 10 சதவீதம் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. நாட்டில் உள்ள மக்களில் 3 சதவீதம் பேர் கைகளில் தான், முழுமையான கறுப்புப் பண புழக்கம் உள்ளது. இந்தியாவின் முதன்மையான மற்றும் இரண்டாம் மட்டத் துறைகளை விட, பெரியதாக கறுப்புப் பண பொருளாதார சந்தை உள்ளது.

ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் மற்றும் பங்குச் சந்தை போன்ற சட்ட ரீதியான பரிவர்த்தனைகள் மூலமும், ஹவாலா பரிமாற்றம், நிதி மோசடிகள், லஞ்சம் கொடுத்தல், தேர்தல்களுக்கு அளவுக்கு அதிகமாக செலவிடுதல், நன்கொடைகள் வசூலிப்பது போன்ற சட்ட விரோத பரிமாற்றங்கள் மூலமும் கறுப்புப் பணம் உருவாகிறது. கறுப்புப் பணத்தின் வளர்ச்சியை புதிய பொருளாதார கொள்கைகள் கட்டுப்படுத்தும் என, எதிர்பார்த்தாலும் அது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சுவிஸ் நாட்டு வங்கியில் பணத்தை டிபாசிட் செய்திருக்கும் இந்தியாவைச் சேர்ந்த ஒருவரின் விவரத்தை பெற வேண்டும் எனில், அது எளிதில் நடக்கக் கூடிய காரியம் அல்ல. அதற்கு தகுந்த ஆதாரத்தை சுவிஸ் நிர்வாகத்திடம் காண்பிக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு நபர் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு பணம் சேர்த்திருந்தாலோ அல்லது வரி ஏய்ப்பு செய்திருந்தாலோ அல்லது வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என்பதற்கான முழுமையான தகவல்களை அளிக்க வேண்டும். அப்படி கொடுத்தால் மட்டுமே, அந்த நபருக்கு தங்கள் நாட்டு வங்கியில் கணக்கு உள்ளதா என்பதை சுவிஸ் நிர்வாகம் தெரிவிக்கும். இவ்வாறு நிபுணர்கள் கூறியுள்ளனர்

No comments:

Post a Comment