உதயநிதி ஸ்டாலின் படத்தை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

தமிழ்த் திரையுலகினரைத் தற்போது பிரமிக்க வைக்கும் தயாரிப்பாளர், உதயநிதி ஸ்டாலின். இவரின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் பிரமாண்டமான தமிழ்ப் படங்களைத் தயாரித்து வருகிறார். இவர் தன் தாத்தா அரசியலில் அமைக்கும் வலுவான கூட்டணியைப் போல தான் தயாரித்து வரும் ஒவ்வொரு படத்திற்கும் மாபெரும் வெற்றிக் கூட்டணியை அமைத்து வருகிறார்.

விஜய், திரிஷா, நடிக்க, இயக்குநர் தரணி இயக்கத்தில், மிகப் பெரிய பொருட்செலவில் 'குருவி' யைத் தனது முதல் படமாகத் தயாரித்த உதயநிதி ஸ்டாலின், தற்போது தயாரித்து வரும் படம் 'ஆதவன்'. சூர்யா, நயன்தாரா நடிக்க, கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஏராளமான பொருட்செலவில் தயாராகும் இப்படத்தின் இசை, திரை முன்னோட்டம் ஆகியவை அண்மையில் வெளியாயின, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனச் சொல்லும் அளவிற்குப் படத்தின் பாடல்களும், திரை முன்னோட்டமும் படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துவிட்டன. தீபாவளியன்று இப்படம் வெளியாக இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் மூன்றாவது படத்தை இயக்கப் போகிறவர், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தனது 'கஜினி'யின் மூலம் தமிழ்த் திரையுலகத்தையும் தாண்டி, இந்தித் திரையுலகையும் தன் பக்கம் ஈர்த்தவர். இப்படத்திற்கு நாயகனும் சூர்யா தான். இசை ஹரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவு ரவி கே.சந்திரன் என முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களை ஒப்பந்தம் செய்துள்ளனர். படத்தின் தலைப்பு, நாயகி, மற்ற நடிகர்கள் ஆகியோர் இன்னும் முடிவாகவில்லையாம்.

'கஜினி' படத்திற்குப் பிறகு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசும், நடிகர் சூர்யாவும் இணையும் படம் என்பதாலும், படத்தைத் தயாரிப்பது உதயநிதி ஸ்டாலின் என்பதாலும் மாபெரும் வெற்றிப் படமாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment