பாசமிக்க அண்ணன் நெப்போலியனுக்கு அடிதடி, குடி, என ஊர் சுற்றி வரும் தம்பியாக ஆர்.கே. அடாவடியான அண்ணனான லாலுக்கு அடங்காபிடாரியான தங்கை என இரண்டு குடும்பங்களுக்கும் இடையே நடக்கும் மோதல் தான் படத்தின் ஆரம்பம்.
இப்படிப்பட்ட பாசமுள்ள அண்ணன்களான நெப்போலியனும் லாலும் எப்போதும் காவி வேட்டி கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஏன் என்பது தான் இயக்குநர் மறைத்து வைத்திருக்கும் மையக் கரு. குடி, அடிதடி எனச் சுற்றி வரும் தன் தம்பிக்குத் திருமணம் செய்து வைத்தால் திருந்தி விடுவான் என்று ஆர்.கே.வுக்குப் பெண் பார்க்கிறார் நெப்போலியன். நெப்போலியனிடம் வேலை பார்ப்பவரே ஆர்.கே.விற்குப் பெண் கொடுக்க மறுக்கிறார். அந்த அளவிற்கு நல்ல பெயர் எடுத்திருக்கும் ஆர்.கே.விற்கும் பானுவுக்கும் காதல் வருகிறது. பெற்றோர்களின் சம்மதமும் கிடைக்கிறது.
ஆர்.கே., பானுவிற்குத் திருமணம் நடக்கும் சமயத்தில், லாலின் தங்கை திருமணத்தை தடுத்து நிறுத்த முயலும் சமயத்தில் ஆத்திரம் அடையும் நெப்போலியனின் வேலைக்காரரான மணிவண்ணன், இரண்டு காவி வேட்டிகளின் கதையைத் திருமண மண்டபத்தில் உள்ள ஊர் மக்களிடம் அவிழ்த்து விடுகிறார்.
இதைக் கேட்ட லாலின் தங்கை, அவமானம் தாங்க முடியாமல் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, தற்கொலை செய்து கொள்கிறார். இந்தச் சம்பவத்தை அறிந்தவுடன் இந்த ரகசியத்தைத் தெரிந்தவர்கள் யாரும் உயிருடன் இருக்கக் கூடாது என்று அரிவாளுடன் கிளம்பும் லால் யார் யாரை வெட்டிச் சாய்த்தார், மணிவண்ணன் கூறிய ஃபிளாஷ் பேக் என்ன என்பது தான் படத்தின் முடிவு.
ஆர்.கே. சண்டைக் காட்சிகள், நடனம், நகைச்சுவைக் காட்சிகள்... எனத் தன் இரண்டாவது படத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பெற்றிருக்கிறார். வடிவேலுவுடன் காமெடி காட்சிகளில் 'நச்'சென்று தன் பங்கிற்கு முக பாவங்களையும், டைமிங்கையும் வெளிப்படுத்தி இருக்கிறார் ஆர்.கே. பார்த்ததும் காதல், டூயட் எனப் பானு, ஆர்.கே பகுதி, ஓர் இனிய அத்தியாயம்.
வடிவேலுவின் வெடிகுண்டு காமெடியில் திரையரங்கே சிரிப்புச் சத்ததால் சிதறுகிறது. வடிவேலுவும் ஆர்.கே.வும் டீக் கடை பென்ச்சில் தண்ணி அடிப்பதும் அதே டீக் கடையில் மது அருந்துபவரைத் தனது ஒரே வார்த்தையால் ஆர்.கே. திருத்துவதும் ரசிகர்கள் சிரித்துச் சிரித்து வயிற்று வலியால் மருத்துவரிடம் செல்லாமல் இருந்தால் சரி.
நெப்போலியன், ஆர்.கே.வின் அண்ணன் என்ற கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தன் தம்பிக்காக ஊர் மக்களிடம் மன்னிப்பு கேட்பது, அதே சமயம் லாலைப் புரட்டி எடுப்பது என ஆர்.கே.வின் அண்ணன் என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுதிருக்கிறார்.
இசைஞானி தனது 'கருகுமணி... கருகுமணி...' என்ற பாடலை முணுமுணுக்க வைப்பதோடு. படத்தின் தலைப்புப் பாடலில் தோன்றியும் இருக்கிறார்.
'அழகர் மலை' ஏற ஏறக் கால் வலிக்கிறதோ இல்லையோ, சிரிக்கச் சிரிக்க வயிறு வலிக்கும்.
No comments:
Post a Comment