''காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த ரஜினி ரசிகர்களை இளைஞர் காங்கிரசில் சேர்க்க வேண்டும்'' என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கும் முகாம் தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில் இன்று (ஆகஸ்ட் 26) நடைபெற்றது. முகாமை தொடங்கி வைத்து கார்த்தி ப.சிதம்பரம் பேசுகையில் கூறியதாவது:
"அரசியல் மீது நடுத்தர மக்களுக்கு வெறுப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. திரைப்படங்களில் அரசியலை தரக்குறைவாக காட்டுவதும், சில அரசியல்வாதிகள் நடந்துகொள்ளும் முறையும் இதற்கு காரணங்களாகின்றன.
பொதுவாக நகரத்தில் உள்ள நடுத்தர மக்களிடம் அரசியல்வாதிகள் மீதும், அரசியல் கட்சிகள் மீதும் நம்பிக்கை குறைந்துவிட்டது. நல்லவர்கள், படித்தவர்கள், பண்பாளர்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும். கட்சியில் சேர்ந்தவர்கள் எல்லாம் 25 ஆண்டுகள் ஆகியும் எந்த பலனும் இல்லாமல் இருக்கிறார்கள். அதனால் அரசியலுக்கு வந்து என்ன ஆகப் போகிறது என்று சிலர் நினைக்கலாம். இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில்தான் ராகுல் காந்தி இளைஞர் காங்கிரஸ் தேர்தலை கொண்டு வந்துள்ளார்.
இந்த தேர்தல் உண்மையாக நடக்கக்கூடிய தேர்தல். முன்பெல்லாம் புதிய உறுப்பினர் சேர்ப்பு என்றால், வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை எழுதி இத்தனை லட்சம் உறுப்பினர்கள் சேர்த்துள்ளோம் என்று கணக்கு காட்டுவார்கள். ஆனால் தற்போது இளைஞர் காங்கிரஸ் புதிய உறுப்பினர் படிவத்தில் புகைப்படம் இணைப்பதோடு தனது வயது சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்டவைகளையும் இணைக்க வேண்டும்.
புதிய உறுப்பினர்களை சேர்க்கும் போது காங்கிரசாரை மட்டுமல்லாமல், மற்றவர்களையும், திரைப்பட நடிகர்களின் ரசிகர்களையும், நற்பணி மன்றத்தினரையும் இணைக்க வேண்டும். குறிப்பாக ரஜினி ரசிகர்கள் மற்றும் அரசியல் கட்சி ஆரம்பிக்காத திரையுலக ரசிகர்களையும் காங்கிரசில் நாம் இணைக்க வேண்டும்.
நடிகர் ரஜினிகாந்த் காங்கிரஸ் கட்சி மீது அதிக பற்று கொண்டவர். அவர் த.மா.கா.வுக்கு ஆதரவு தந்தவர். அவருடைய ரசிகர்கள் தீவிரமாக சமுதாய பணியாற்றுபவர்கள். அதனால் ரஜினி ரசிகர்களை நாம் கட்சியில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். ஒரு கட்சியில் உறுப்பினராக இருப்பவர்களைத்தான் மற்ற கட்சியில் உறுப்பினராக சேர்க்கக் கூடாது. ஆனால் ரசிகர் மன்றத்தில் இருப்பவர்களை கட்சியில் சேர்க்கலாம். அதில் எந்த தவறும் இல்லை.
பொதுத்தேர்தலில் நாம் வீடு வீடாக சென்று எவ்வாறு வாக்கு சேரிக்கிறமோ, அதேபோல் வீடு வீடாக சென்று ஆண்கள் மட்டுமல்லாமல், பெண்களையும் இளைஞர் காங்கிரசில் சேர்க்க வேண்டும். வருங்காலத்தில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களின் பேச்சை அரசு நிர்வாகம் கேட்கும் நிலை வரும். ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்துங்கள். வரும் காலத்தில் பிரதான கட்சியாக காங்கிரஸ் கட்சி செயல்படும்" என்று கார்த்தி சிதம்பரம் பேசினார்.
No comments:
Post a Comment