ராஜன் வாசுதேவ் (கலாபவன் மணி), உலக பணக்காரர்களில் ஒருவர்; லண்டனில் வீடு, இந்தியாவில் தொழில் என உலகத்தையே சுற்றி வந்து கொண்டிருப்பவருக்குத் தொழில் ரீதியாக எதிரிகள் அதிகம். தன் எதிரிகளால் தன் மகன் உதய் வாசுதேவுக்கு (வினய்) எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்று தன் மகனுடன் பாதுகாப்பாளர் ஒருவரையும், தன் மகனின் பொழுது போக்கிற்காகத் தன்னால் அனாதை இல்லத்தில் இருந்து எடுத்து வளர்க்கப்பட்டு வரும் மதன் (யுவா) என்பவனையும் எப்போதும் தன் மகன் உடன் இருக்கச் செய்கிறார் கலாபவன் மணி.
அனாதையான மதன், ராஜன் வாசுதேவினால் வளர்க்கப்பட்டு வந்தாலும் ராஜன் வாசுதேவ் மகனான உதய் வாசுதேவிற்கு கொடுக்கப்படும் அனைத்து சலுகைகளுடனும் வாழ்ந்து வருகிறார். காதலிலும் அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது.
மதன், உதய் வாசுதேவ் இருவரும் ஒரே பெண்ணைக் காதலிக்கின்றனர். தாங்கள் காதலிக்கும் பெண் இருவரில் யாரைக் காதலிக்கிறாள் என்று அறிவதற்காக சம்பந்தப்பட்ட பெண்ணிடமே கேட்கச் செல்லும் நேரத்தில் ராஜன் வாசுதேவினால் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்ட நபர் ராஜன் வாசுதேவின் மகனான உதய் வாசுதேவைக் கொலை செய்ய முயல்கிறார். அந்தச் சம்பவத்தில் ராஜன் வாசுதேவினால் வளர்க்கப்பட்டு வரும் மதன் கொலை செய்யப்படுகிறார்.
தன் மகன் உயிர் பிழைத்ததை அறிந்து சந்தோஷப்படுவதைக் காட்டிலும் தன்னால் வளர்க்கப்பட்டு வரும் மதன் இறந்ததைக் கண்டு மிகவும் வருத்தம் அடைகிறார் ராஜன் வாசுதேவ். அது மட்டும் இன்றி ராஜன் வாசுதேவின் சொந்த மகனான உதய் வாசுதேவிடம் இருந்து அவன் வாழ்ந்து வந்த சுக போக வாழ்க்கை, பணம், வீடு, கார் என அத்தனையையும் பறித்துக்கொள்கிறார் ராஜன் வாசுதேவ்.
ஏன் அப்படி தன் மகனிடமே நடந்து கொள்கிறார்? அதற்கு என்ன காரணம்? அதை வினய் எவ்வாறு கண்டறிந்து தனது வாழ்க்கையை மீண்டும் பெறுகிறார் என்பதைப் பல திருப்பங்களோடு சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கும் படம், 'மோதி விளையாடு'.
சரண் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனது படத்தை இயக்கியுள்ளார். இயக்குநர் சரண் படங்களுக்கென்று ஒரு தனி இடம் உண்டு. அந்த இடத்திலேயே இப்படமும் உள்ளது.
வினய் முதல் முறையாக தனது சொந்தக் குரலில் டப்பிங் பேசி இருக்கிறார். சில இடங்களில் குறையாக இருந்தாலும் படத்தில் வரும் வினயின் கதாபாத்திரத்திற்கு நிறைவாகவே உள்ளது. உலக பணக்காரரின் மகன் என்ற கதாபத்திரத்திற்கு ஏற்றவாறு இருக்கும் வினய், தன் தந்தையே தனக்கு வில்லன் எனத் தெரிந்ததும் அவருக்கு எதிராக வினை செய்யும் வில்லத்தனம் படத்திற்கு சுவாரஸ்யம்.
அழகான ராட்சஸி என்பது போல வந்து எல்லோருடைய உள்ளங்களையும் அள்ளிக்கொள்கிறார் எல்.ஆர்.ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் வரும் காஜல் அகர்வால். படத்தில் காஜல் வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும் இவர் வரும்போதெல்லாம் கொண்டாட்டம் அடைகின்றனர் ரசிகர்கள்.
எப்போதும் போல தனது கோமாளித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி அறிமுகமாகும் கலாபவன் மணி, போகப் போகத் தன் கதாபாத்திரத்திற்குத் தேவையானது எது என்பதைப் புரிந்துகொண்டு அளவாக நடித்திருக்கிறார். நகைச்சுவைக்காக சந்தானம், எப்போதும் போல கதாநாயகனின் நண்பனாக வருகிறார். ஆனால் ரசிகர்களுக்குச் சிரிப்பு தான் வரவில்லை. அந்த வேலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று காமெடி களத்தில் புகுந்து கலாய்த்து இருக்கிறார்கள் வி.எம்.சி.ஹனிபாவும் மயில்சாமியும். வினய், ஹனிபா மற்றும் மயில் சாமி ஆகியோர் கூட்டணியில் வரும் ஒயின்ஷாப் காமெடி திரையரங்குகளில் காதைப் பிளக்கும் சிரிப்புச் சத்தத்தை ஏற்படுத்துகிறது.
ஹரிஹரன் மற்றும் லெஸ்லி இவர்களின் இசையில் 'வெள்ளைக்காரி...' என்ற பாடலும் 'பாதிக் காதல்...' என்ற பாடலும் முணுமுணுக்க வைக்கின்றன. தேவா, ஹரிஹரன், லெஸ்லி ஆகியோரின் குரலில் வரும் 'மோதி விளையாடு...' என்ற பாடல் வைரமுத்துவின் வைர வார்த்தைகளுக்குப் பட்டை தீட்டியது போல் உள்ளது. பின்னணி இசை, பெரிதாகச் சொல்லும் அளவிற்கு இல்லை.
படத்திற்கு இயக்குநர் சரண் ஒரு கண் என்றால் ஒளிப்பதிவாளர் கருண் ஒரு கண்; பளிச்சென்ற தன் படப்பிடிப்பின் மூலம் பந்தாவான பல காட்சிகளைக் கொடுத்திருக்கிறார்.
எஸ்.ராமகிருஷ்ணனின் கதைக்குக் கச்சிதமான திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் சரண். நடிகையிடம் கவர்ச்சியைத் தவிர்த்து விட்டு, படத்தில் கவர்ச்சியைக் காண்பித்து ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார் இயக்குநர் சரண்.
படத்தின் முதல் பாதியில் கலகலப்பாகவும் இரண்டாம் பாதியில் விறுவிறுப்பாகவும் செல்லும் திரைக்கதை, வெற்றி என்னும் இடத்தில் போய் நிற்கிறது.
No comments:
Post a Comment