ராகுல்காந்தியுடன் நடிகர் விஜய் சந்திப்பு

நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை, விஜய் டெல்லியில் திடீரென சந்தித்து பேசயுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.

விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை துவங்கி சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழகம் முழுவதும் ஏழை மாணவ- மாணவிகளுக்காக இலவச கம்ப்யூட்டர் மையங்களையும் துவங்கி வருகிறார். விரைவில் அரசியலில் ஈடுபடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் ராகுல்காந்தியை டெல்லியில் திடீரென்று சந்தித்து பேசி உள்ளார். தமிழக அரசியல் நிலவரம் குறித்து இருவரும் நீண்ட நேரம் பேசியுள்ளனர்.

இந்த சந்திப்பு பற்றி பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன. விஜய்யை காங்கிரசில் சேரும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. காங்கிரசில் சேரும்பட்சத்தில் அவருக்கு தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி தரப்படும் என்று ராகுல் உறுதிமொழி அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தனிக் கட்சி துவங்குவதானால் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் அப்போது கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழக காங்கிரசை வலுப்படுத்த ராகுல்காந்தி, அக்கறை காட்டுகிறார். 37 வருடங்களாக இங்கு காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வர முடியவில்லை. கோஷ்டி சண்டைகளால் கட்சி பலவீனமுற்று உள்ளது. காங்கிரசை தமிழகத்தில் பலமான கட்சியாக மாற்றி காட்டுவேன் என்று ராகுல் சமீபத்தில் சூளுரைத்தார்.

அதன் அடிப்படையில் தான் தமிழக இளைஞர் காங்கிரசுக்கு நவம்பர் முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்படுகின்றன. இதற்கான உறுப்பினர் சேர்ப்பு பணி மும்முரமாக நடக்கிறது. ராகுல்காந்தி நேரடி மேற்பார்வையில் இந்த தேர்தல் நடைபெறுவதால் தமிழக காங்கிரசின் முன்னணி தலைவர்கள் தங்களையும் இணைத்து கொண்டு உறுப்பினர் சேர்ப்பிலும் தேர்தல் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

No comments:

Post a Comment