சென்னை, வேளச்சேரியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஹீலியாஸ் மருத்துவமனை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக டாக்டர் மஞ்சுளா தேவியும் தலைவராக டாக்டர் நந்தகுமாரும் பொறுப்பேற்றுள்ளனர்.
விழாவின் சிறப்பு விருந்தினர்களாக சன் நெட்வொர்க் துணைத் தலைவர் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா, இயக்குநர் பி வாசு, நடிகர் விஷால், நடிகை ஷோபனா, அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மனைவி மணிமேகலை தங்கம் தென்னரசு மற்றும் காவல்துறை கூடுதல் ஆணையர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஷால் பேசுகையில், "என்னுடைய குடும்ப நண்பர்கள்தான் இந்த மருத்துவமனையை ஆரம்பித்துள்ளனர். படப்பிடிப்பில் எனக்கு எக்கச்சக்கமாக அடிபட்டிருக்கிறது. எனக்கு அடிபட்டால், என்னுடைய டிரைவர், நேராக இவர்களிடம் தூக்கிக்கொண்டு வந்துவிடுவார். என் உடம்பு முழுக்க 25 இடங்களில் தையல் போடப்பட்டுள்ளது. அத்தனையும் டாக்டர் நந்தகுமார் போட்டதுதான்" என்றார்
மேலும், "பெண்கள் பெரிதும் பாதிக்கப்படும் கருப்பை வாய் புற்று நோயை மூன்றே ஊசிகளில் குணப்படுத்தி விடுவதாக ஹீலியாஸ் மருத்துவமனையினர் அறிவித்துள்ளனர். இந்த நோயால் பாதிக்கப்படும் ஏழைப் பெண்கள் இந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றால் அதற்கான செலவை நானே ஏற்றுக்கொள்கிறேன்" என்று நடிகர் விஷால் தெரிவித்தார். இந்த ஊசியை ஒரு முறை போட்டுக்கொண்டால் பின்னர் வாழ்நாள் முழுக்க கருப்பைப் புற்றுநோய் தாக்காது, பக்க விளைவுகளும் கிடையாது என ஹீலியாஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment